Published : 20 Aug 2017 01:19 PM
Last Updated : 20 Aug 2017 01:19 PM

பொது இடங்களில் புகை பிடிப்பதைத் தடுக்க தனிப்பிரிவு அமைக்க வேண்டும்: அன்புமணி

சென்னை

பொது இடங்களில் புகை பிடிப்பதைத் தடுக்க, தனிப்பிரிவு ஒன்றை உருவாக்க தமிழக ஆட்சியாளர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''பொது இடங்களில் புகை பிடிப்பதைத் தடை செய்யும் சட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்படும் விதம் தொடர்பாக வெளியாகியுள்ள புள்ளிவிவரங்கள் அதிர்ச்சியளிக்கின்றன. இச்சட்டத்தின்படி கடந்த இரு ஆண்டுகளில் ஒருவர் மீது கூட நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதே அதிர்ச்சிக்கு காரணமாகும்.

சிகரெட் மற்றும் பிற புகையிலைப் பொருட்கள்(விளம்பரங்கள் தடுப்பு மற்றும் வணிகம், வர்த்தகம், உற்பத்தி, வினியோக ஒழுங்குமுறை) சட்டத்தின் நான்காவது பிரிவின்படி பொது இடங்களில் புகை பிடிப்பது குற்றமாகும். இதற்காக சம்பந்தப்பட்டவர்கள் மீது ரூ.200 வரை அபராதம் விதிக்க முடியும். இந்தியாவில் பொது இடங்களில் அதிக அளவில் புகை பிடிக்கும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு திகழும் நிலையில், 2015-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் வரையிலான இரு ஆண்டுகளில் ஒருவர் மீது கூட வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் அனுப்பிரியா தெரிவித்திருக்கிறார்.

அதேபோல், பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து 100 கெஜம் தொலைவுக்குள் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால் அதற்காக சிகரெட் மற்றும் பிற புகையிலைப் பொருட்கள்(விளம்பரங்கள் தடுப்பு மற்றும் வணிகம், வர்த்தகம், உற்பத்தி, வினியோக ஒழுங்குமுறை) சட்டத்தின் ஆறாவது பிரிவின்படி வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் இந்தச் சட்டப்பிரிவின்படியும் கடந்த இரு ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மத்திய அமைச்சர் கூறியிருக்கிறார். சமூகத் தீமைகளைக் கட்டுப்படுத்துவதில் தமிழக ஆட்சியாளர்கள் எந்த அளவுக்கு அலட்சியமாக இருக்கிறார்கள் என்பதற்கு இதுவே உதாரணம்.

தமிழ்நாட்டில் பொது இடங்களில் புகை பிடிப்பது என்பது எப்போதாவது நடைபெறும் விதிமீறலாக இல்லாமல் எப்போதும் நடக்கும் விதியாக மாறிவிட்டது. சாலையோர கடைகள், நடைபாதைகள், உணவு விடுதிகள் உள்ளிட்ட இடங்களில் பலரும் எந்த சமூகக் கவலையுமின்றி புகை பிடிப்பது சாதாரணமான ஒன்றாகிவிட்டது. இதனால் அவ்வழியே செல்லும் பெண்களும், குழந்தைகளும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். பல நேரங்களில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பெண்களும், குழந்தைகளும் நிம்மதியாக நடமாட முடியாத சூழல் நிலவுகிறது. இது மிகப்பெரிய மனித உரிமை மீறல் குற்றமாகும். அதேபோல், தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை பள்ளிகளுக்கு அருகிலுள்ள கடைகளில் மாணவர்கள் வாங்கி பயன்படுத்துவதும் வாடிக்கையான காட்சிகளில் ஒன்றாகி விட்டது.

பொது இடங்களில் புகை பிடிப்பதால் புகை பிடிப்பவர்களுக்கு ஏற்படும் பாதிப்பை விட அந்தப் புகையைக் கட்டாயமாக சுவாசிக்க நேரும் மற்றவர்களுக்கு மிகவும் மோசமான பாதிப்புகள் ஏற்படுகின்றன.இந்தக் கொடுமைக்கு முடிவு கட்டும் வகையில்தான் நான் மத்திய சுகாதார அமைச்சராக இருந்த போது, பல தடைகளை முறியடித்து பொது இடங்களில் புகை பிடிப்பதை தடை செய்து சட்டம் கொண்டு வந்தேன்.

2008-ஆம் ஆண்டு காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2-ஆம் தேதி முதல் இச்சட்டம் நாடு முழுவதும் நடைமுறைப் படுத்தப்பட்டது. நான் மத்திய அமைச்சராக இருந்தவரை இந்தச் சட்டம் நாடு முழுவதும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டது. தமிழகத்தில் 2010-வது ஆண்டின் முதல் ஆறு மாதங்கள் வரை இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன் தாக்கம் அடுத்த சில ஆண்டுகளுக்கு நீடித்தது.

புகைத் தடை சட்டத்தால் பொது இடங்களில் பெண்களும், குழந்தைகளும் நிம்மதியாக நடமாடினர். ஆனால், இப்போது நிலைமை தலைகீழாக மாறி விட்டது. பொது இடங்களில் புகை பிடிப்பவர்கள் மீது காவல்துறையினரும், சுகாதாரத்துறையினரும் நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால், சட்டம் -ஒழுங்கு பாதுகாப்பு, குற்றச் செயல்கள் தடுப்பு ஆகிய பணிகளை மேற்கொள்ளவே தங்களுக்கு நேரமில்லாத நிலையில், பொது இடங்களில் புகை பிடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தங்களுக்கு நேரமில்லை என காவல்துறையினர் வெளிப்படையாகவே ஒப்புக்கொள்கின்றனர். சுகாதாரத்துறை என்ற ஒன்று தமிழ்நாட்டில் செயல்படுவதாகவே தெரியவில்லை.

இந்தியாவில் புகை பிடிப்பதால் ஆண்டுக்கு 10 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இவர்களில் புகை பிடிப்பவர்களை விட பிறர் விட்ட புகையை சுவாசிப்பவர்கள் தான் அதிகம் ஆகும். இதைத் தடுக்க வேண்டியதும், பெண்கள் மற்றும் குழந்தைகள் நிம்மதியாக நடமாடுவதை உறுதி செய்ய வேண்டியதும் அரசின் கடமை ஆகும். எனவே, பொது இடங்களில் புகை பிடிப்பதைத் தடுக்க, தனிப்பிரிவு ஒன்றை உருவாக்க தமிழக ஆட்சியாளர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x