Last Updated : 08 Aug, 2017 10:19 AM

 

Published : 08 Aug 2017 10:19 AM
Last Updated : 08 Aug 2017 10:19 AM

அவற்றையும் வாங்கி நிறுத்துவேன்: வியக்கவைக்கும் ஒரு வாகனக் காதலர்

விஜய் சூப்பர், பாபி, லேம்பி, லேம்பிரட்டா, ஜாவா பி.எஸ்.ஏ பாண்ட் - ஒருகாலத்தில் இந்தியச் சாலைகளை வலம் வந்த இந்த இருசக்கர வாகனங்களைப் பற்றியெல்லாம் இப்போதுள்ள தலைமுறையினர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், அரிதாகிவிட்ட இந்த வாகனங்களைத் தேடிப்பிடித்து வாங்கி சேகரித்து வைத்திருக்கிறார் சுப்புணி என்ற சுப்பிர மணியன். இப்படி, இதுவரை இவர் சேகரித்துள்ள இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை 107.

வரிசைகட்டும் வாகனங்கள்

நாகை மாவட்டம் திருவெண்காட்டில் உள்ளது சுப்பிரமணியனின் வீடு. அதன் ஒருபக்கம், நீளமான ஷெட் அமைத்து அதனுள்ளே, தான் சேகரித்திருக்கும் வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளார் சுப்பிரமணியன். இங்கு, இந்தியாவின் முதல் இருசக்கர வாகனமான (மொபெட்) சுவேகாவில் தொடங்கி, மிகப் பிரபலமான ஜாவா, எஸ்.டி, என்ஃபீல்டு 200, மினி புல்லட், குருசேடர், ரோடுகிங்க், சாம்ராட், ட்வின் ஹோண்டா, லூனா, டார்ட், என்சைன், அட்லஸ், லெஷ்மி 48, எக்ஸ்புளோரர், பஜாஜ் சேதக், ஜாவா மில்லிங்க் டைட் உள்ளிட்ட இருசக்கர வாகனங்கள் வரிசைகட்டுகின்றன. ஒருகாலத்தில், மயிலாடு துறையிலேயே தயாரிக்கப்பட்ட ‘மொபெட் மாயூரம்’ என்ற இருசக்கர வாகனமும் இங்கே காணக் கிடைப்பது வியக்கவைக்கிறது. இவற்றுள், லேம்பி, லேம்பிரட்டா, ஜாவா, ராஜ்துத் பாபி, ரோடுகிங், பி.எஸ்.ஏ பாண்ட், பஜாஜ் சேதக், சுவேகா உள்பட 20 வண்டிகள் இப்போது இறக்கிவிட்டாலும் சாலையில் சர்ர்..ரடிக்கும்.

இரு சக்கர வாகனங்கள் மட்டுமில்லாமல் 1948 மாடல் மோரிஸ் மைனர், 1950 மாடல் ஸ்டாண்டர்டு சூப்பர் 10, 1948 மாடல் ஸ்டாண்டர்டு 10 ஆகிய மூன்று பழையமாடல் கார்களும் இவரது வீட்டின் முன்புறத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. இம்மூன்றுமே ஓடும் நிலையில் இருப்பது இன்னுமொரு சிறப்பு. “எப்படி வந்தது இந்த வாகனக் காதல்?” கேட்டதுமே உற்சாகமாய் பேசத்தொடங்கினார் சுப்பிரமணியன்.

அப்பா நினைவாக..

“எங்க தாத்தா குதிரை பிரியர். அவருக்கிட்ட குதிரைகளும் காளைகளும் நிறைய இருந்துச்சு. எங்க போனாலும் குதிரையிலதான் போவார். எங்கப்பா கார் பிரியர். அடிக்கடி காரை மாத்திட்டே இருப்பார். நான் பத்து வயசுலயே புல்லட் ஓட்டிப் பழகியவன். பதினோரு வயசுல, லேண்ட் மாஸ்டர் காரை தனியாளா ஓட்டிக்கிட்டு பாட்டிவீட்டுக்குப் போயிட்டேன். இப்படி, சின்ன வயசுலருந்தே எனக்கு மோட்டார்ல ஆர்வம். ஆனா எங்களோட ராசி, ஒருகட்டத்துல வீட்ல ஒரு சைக்கிள்கூட இல்லாம கஷ்டம் வந்து முடக்கிருச்சு. அதுக்கப்புறம் கடுமையா உழைச்சு மறுபடியும் முன்னுக்கு வந்தோம்.

அப்பத்தான் நான் டூவீலர், கார்களை வாங்கி விற்க ஆரம்பிச்சேன். அப்படிப் போறப்ப பல இடங்கள்ல சும்மா போட்டுவெச்சிருந்த டூவீலர்களை ஐயாயிரம், ஆறாயிரம் கொடுத்து வாங்கிட்டு வந்து சரிசெஞ்சு விற்றேன். அந்தநேரத்துலதான், அப்பாவின் நினைவா வாகனங்களை சேகரிக்கணும்கிற எண்ணமும் உதிச்சுது. அதுலருந்து, வீட்டுல நிறுத்தி வைக்கிறதுக்காகவே பழைய வாகனங்களைத் தேடித் தேடி வாங்க ஆரம்பிச்சுட்டேன். அதுதான் அப்படி இப்படின்னு இப்ப 107 வண்டியாயிடுச்சு.” என்று சொல்லிச் சிரிக்கிறார் சுப்பிரமணியன்.

பராமரிக்க உதவியாளர்

”வண்டிகளை வாங்கினால் போதுமா? அவற்றைப் பராமரிக்க வேண்டாமா?” என்று கேட்டால், ஷெட்டில் இருந்த மூன்று இரும்பு பீரோக்களை திறந்து காட்டுகிறார். அவை முழுவதும் உதிரிப்பாகங்களால் நிரம்பி வழிகின்றன. அத்தனையும் அங்குள்ள வண்டிகளுக்குத் தேவையானவை. ஓடும் நிலையில் உள்ள வண்டிகளை பராமரிப்பதற்காகவே மூர்த்தி என்ற உதவியாளரையும் கூடவே வைத்திருக்கிறார் சுப்பிர மணியன். எந்த வண்டி எப்போது, யாரிடமிருந்து வாங்கப்பட்டது என்கிற விவரம் எல்லாம் மூர்த்திக்கு அத்துபடி. இந்த வாகனச் சேகரிப்பைக் கேள்விப்பட்டு, வாகனப் பிரியர்கள், வீடுதேடி வந்து தங்களுக்குப் பிடித்த வாகனங்களை விலைக்குக் கேட்டிருக்கிறார்கள். ஆனால், அவற்றை யாருக்கும் தர சம்மதிக்கவில்லை சுப்பிரமணியன்.

“இத்தனை வண்டிகள் இருந்தும், ரெட் இண்டியன், டிரையம்ப், மேட்ச்லெஸ் வண்டிகள் கிடைக்ககவில்லை என்ற ஏக்கம் சுப்பிரமணியனுக்கு. “அந்த வண்டிகளையும் தேடிக்கொண்டிருக்கிறேன். எப்படியும் அவற்றையும் வாங்கி நிறுத்துவேன்” என்கிறார் உறுதியுடன்.

இந்த சேவைகளையும் ஓசையின்றி செய்கிறார்!

இந்த வாகனக் காதலனுக்குள் ஒரு ஆன்மிகவாதியும் ஒளிந்திருக்கிறார். காஞ்சி மகா பெரியவரின் சகோதாரான சிவன்சார் என்னும் சாதசிவ சாஸ்திரிகளின் வழியைப் பின்பற்றுபவர். அவரிடம் பக்குவப்பட்டதால் பிரம்மச்சரிய்அத்தை தழுவியவர்.

கேட்பாரின்றி விடப்படும் சிலலிங்கங்களை கண்டறிந்து அவற்றிற்கு ஷெட் அமைத்து தரும் பணிகளைச் சென்னையில் உள்ள சிவார்ப்பணம் டிரஸ்ட்டுடன் இணைந்து செய்துவரும் இவர், கோயில் திருப்பணிகளுக்கும் உதவிவருகிறார். மழை தரும் இலுப்பை, இடி தாங்கும் புரசை ஆகிய மரக் கன்றுகளை ஆன்மிக தலங்கள் உள்ளிட்ட இடங்களில் நட்டுவருகிறார். இவை அனைத்துக்கும் மேலாக, ஏழ்மையில் இறந்து இறுதிச் சடங்குகள் செய்ய முடியாத ஆத்மாக்களுக்கு தனது பொறுப்பில் இறுதிச் சடங்குகள் செய்து நல்லடக்கம் செய்யும் சேவையையும் இவர் ஓசையின்றி செய்து வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x