Published : 13 Aug 2017 04:32 PM
Last Updated : 13 Aug 2017 04:32 PM

நெல்லை ஆட்சியர் அலுவலகத்தின் அன்புச்சுவரில் மலைபோல் குவிந்த ஆடைகள்

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரால் தொடங்கப்பட்ட அன்புச் சுவர் பகுதியில், எடுத்துக்கொள்ள ஆட்களின்றி மலைபோல் ஆடைகள் குவிந்துள்ளன. புத்தகங்களை பரிமாறிக்கொண்டால் அறிவுப் பசிக்கும் களமாக அன்புச் சுவர் அமையும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

பலரது வீடுகளில் பழைய புத்தகங்கள், ஆடைகள், பொம்மைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் நல்ல நிலையில் இருந்தாலும், பயனின்றி குவிந்து கிடக்கும். இவற்றை தேவைப்படுபவர்களுக்கு கொடுக்க மனமுள்ள நபர்கள் பலர் உள்ளனர்.

அதேவேளை, இதுபோன்ற பொருட்களை புதிதாக வாங்க முடியாத மக்கள் பழைய பொருட் களாவது கிடைக்குமா என்று உதவிக்கரத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆனால், தன்மானம் கருதி பிறரிடம் கேட்காமல் உள்ளனர். இப்படிப்பட்டவர்களுக்கு ஒரு பாலமாக ‘அன்புச் சுவர்’ திட்டத்தை, தமிழகத்தில் முதல் முறையாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கடந்த மாதம் 24-ம் தேதி ஆட்சியர் சந்தீப் நந்தூரி தொடங்கினார்.

நல்ல வரவேற்பு

ஆட்சியர் அலுவலக சுற்றுச்சுவர் பகுதியில் இதற்கென தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் புத்தகங்கள், ஆடைகள், பொம்மைகள், காலணிகள் போன்றவற்றை யார் வேண்டுமானாலும் வைக்கலாம். இவை யாருக்காவது தேவைப் பட்டால் அவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

இத்திட்டத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஏராளமான பொதுமக்கள் தங்களிடம் உள்ள நல்ல நிலையில் உள்ள தேவையற்ற பொருட்களை இங்கு கொண்டுவந்து வைத்துச் செல்கின்றனர். இவற்றை தேவைப்படும் நபர்கள் எடுத்துச் செல்கின்றனர்.

குவியும் ஆடைகள்

இதில், பழைய ஆடைகள் மட்டுமே அதிக அளவில் குவிகின்றன. மலைபோல் குவிந்து கிடக்கும் துணிகளை எடுத்துச் செல்ல பலர் கூச்சப்பட்டு அருகில் செல்லவே தயங்குகின்றனர். குப்பைக்கூளம்போல் குவிந்து கிடக்கும் துணிகளை அவ்வப்போது தன்னார்வலர்கள் வந்து, மடித்து வைக்கின்றனர்.

மலைபோல் கிடக்கும் ஆடைகளால் இத்திட்டத்தின் நோக்கம் முழுமையாக நிறைவேறாமல் போகிறது. துணி இல்லாமல் இருப்பவர்கள் மிகவும் அரிதாகவே உள்ளனர். பழைய துணிகளை அணிவதற்கு பெரும்பாலானவர்கள் விரும்பு வதில்லை.

அதனால், அன்புச் சுவரை குப்பைத்தொட்டிபோல் கருதி, பழைய கந்தல் துணிகளை இங்கு கொண்டுவந்து கொட்டுவதைத் தவிர்க்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

நூல்கள் தேவை

நூலாடைகள் மிகவும் பழையதாக இருந்தால் அவற்றை அணிந்து செல்வது கவுரவமான தோற்றத்தை அளிக்காது. ஆனால், நூல்கள் எவ்வளவுதான் பழையதாக இருந்தாலும் அவை அறிவுப் பசிக்கு தீனி கொடுத்துக்கொண்டே இருக்கும். படித்து முடித்த புத்தகங்களை இங்கு வைத்தால் அவற்றை எடுத்துச் சென்று படிக்கலாம். எடுத்துச் செல்பவர் படித்ததும் மீண்டும் இங்கு கொண்டுவந்து வைக்கலாம். இவ்வாறு செய்வதால் வாசிப்பு பழக்கம் அதிகரிக்கும். அறிவை வளர்த்துக் கொள்ளவும் வழிவகுக்கும்.

பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் தங்களிடம் உள்ள பழைய புத்தகங்களை வைத்தாலும் ஏழை மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். மக்களின் அறிவுப் பசிக்கு தீனி அளிக்கும் களமாகவும் அன்புச் சுவர் மாற வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

அன்புச் சுவரை குப்பைத் தொட்டியாக மாற்றாமல் நல்ல நிலையில் உள்ள ஆடைகளை மட்டுமே வைக்க வேண்டும். பயன்படுத்தக்கூடிய நிலையில் உள்ள வீட்டு உபயோகப் பொருட் களையும் வைக்கலாம். திட்டத்தின் நோக்கத்தை வெற்றிகரமாக கொண்டுசெல்வது மக்களிடம்தான் உள்ளது. மக்களிடம் மாற்றம் வந்தால் திட்டத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x