Published : 27 Aug 2017 07:59 AM
Last Updated : 27 Aug 2017 07:59 AM

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே மந்திரவாதி வீட்டில் ஐம்பொன் சிலைகள் பறிமுதல்

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே மந்திரவாதி ஒருவர் வீட்டிலிருந்து 12 ஐம்பொன் சிலைகள் மற்றும் அம்மன் கற்சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, ‘‘பேரணாம்பட்டு அடுத்துள்ள பத்தரப்பல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் குப்புசாமி (50). ஏழ்மை நிலையில் இருந்த குப்புசாமி, கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிட வேலைக்காக பெங்களூரு சென்றார். அங்கு பில்லி, சூனியம் அகற்றுதல், பேய் விரட்டுதல் உள்ளிட்ட மாந்த்ரீக வேலைகளை தெரிந்துகொண்டார்.

பின்னர், கட்டிட வேலைக்குச் செல்வதை நிறுத்திவிட்டார். மாந்த்ரீக தொழிலில் அதிக வருமானம் கிடைத்ததால், பெங்களூருவின் முக்கியமான இடங்களில் வணிக வளாகங்களை வாங்கி வாடகைக்கு விட்டுள்ளார். அடிக்கடி ஊருக்கு வந்து செல்லும்போது கோயில் திருவிழா, பொங்கல் விழாக்களுக்கு தாராளமாக நன்கொடைகளை அளிப்பாராம். சில ஆண்டுகளாக சொகுசு கார்களில் வலம் வரும் அவர், பத்தரபல்லியிலும் ரகசிய பூஜைகள் செய்து வந்துள்ளார். இது பலருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குப்புசாமியின் செயல்பாடுகள் குறித்து திட்டமிட்ட குற்றங்கள் நுண்ணறிவு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், அப் பிரிவின் வடக்கு மண்டல துணை காவல் கண்காணிப்பாளர் ரவீந்திரன், காவல் ஆய்வாளர் செல்வம், தலைமைக் காவலர்கள் ராதாகிருஷ்ணன், ரமேஷ் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று அதிகாலை குப்புசாமியின் வீட்டில் அதிரடியாக சோதனையிட்டனர்.

அப்போது, அந்த வீட்டின் பூஜையறையில் 4 அடி உயரமுள்ள 2 அம்மன் சிலைகள், சிவன், பார்வதி, சிவலிங்கம், பெருமாள், சங்கு உள்ளிட்ட 12 ஐம்பொன் சிலைகள் இருந்தன. இது தொடர்பாக, பேரணாம்பட்டு காவல் நிலையம் மற்றும் வருவாய்த் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், காவல் ஆய்வாளர் சீனிவாசன், வட்டாட்சியர் பத்மநாபன் ஆகியோர் சென்று விசாரித்தனர். சிலைகளை பறிமுதல் செய்து, தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் மற்றும் பெங்களூருவில் குப்புசாமி செய்துவரும் தொழில்கள் குறித்து அவரிடம் பேரணாம்பட்டு காவல் ஆய்வாளர் விசாரணை நடத்திவருகிறார்’’ என்று தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x