Published : 27 Aug 2017 12:46 PM
Last Updated : 27 Aug 2017 12:46 PM

தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யும் விவகாரம்: 1988 - சட்டப்பேரவை வரலாறு திரும்புகிறதா? - அன்று தண்டனை பெற்ற தனபாலிடம்.. இன்று தீர்ப்பளிக்கும் அதிகாரம்

அதிமுக எம்எல்ஏக்கள் 19 பேரை தகுதி நீக்கம் செய்வது தொடர்பான முடிவை எடுக்கும் அதிகாரம் தற்போது சபாநாயகர் தனபாலிடம் உள்ளது. இவர் கடந்த 1988-ல் எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

1987 டிசம்பர் 24-ம் தேதி முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். காலமானார். அதைத்தொடர்ந்து அதிமுக ஜானகி அணி, ஜெயலலிதா அணி என இரண்டாக உடைந்தது. பெரும்பாலான எம்எல்ஏக்கள் எம்ஜிஆரின் மனைவி ஜானகி அம்மாளுக்கு ஆதரவாக இருந்ததால் அவர் முதல்வரானார். சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க அவருக்கு 3 வாரம் அவகாசம் அளிக்கப்பட்டது.

1988 ஜனவரி 28-ம் தேதி காலை 10 மணிக்கு பெரும்பான்மையை நிரூபிக்க சட்டப்பேரவை கூடியது. அன்றைய பேரவைத் தலைவர் பி.எச்.பாண்டியன், ஜானகி ஆதரவாளராக இருந்தார். அதிமுக எம்எல்ஏக்களில் ஜானகி அணியில் 98 பேரும், ஜெயலலிதா அணியில் 28 பேரும் இருந்தனர். காலை 10 மணிக்கு பேரவை கூடியதும், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 5 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக பி.எச்.பாண்டியன் அறிவித்தார். இதனால் அமளி ஏற்படவே பேரவை நடவடிக்கைகளை பகல் 12 மணி வரை தள்ளி வைத்தார். மீண்டும் 12 மணிக்கு பேரவை கூடியதும் கட்சித் தாவல் சட்டத்தின் கீழ் வி.ஆர்.நெடுஞ்செழியன், பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரன், சு.திருநாவுக்கரசு, ஆர்.சவுந்தரராஜன், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், சி.அரங்கநாயகம் ஆகிய 6 பேரை தகுதி நீக்கம் செய்வதாக பி.எச்.பாண்டியன் அறிவித்தார். இதனால் பேரவையில் கூச்சல், குழப்பம், அமளி ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து பேரவை மாலை 3 மணிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

மாலை 3 மணிக்கு பேரவை கூடியதும் மீண்டும் அமளி ஏற்பட்டது. ஜானகி ஆதரவு உறுப்பினர்களைத் தவிர மற்றவர்கள் அனைவரும் அமளியில் ஈடுபட்டனர். மேஜைகள் கவிழ்க்கப்பட்டன. நாற்காலிகள் தூக்கி வீசப்பட்டன. காவல் துறையினர் உள்ளே வந்து தடியடி நடத்தும் அளவுக்கு நிலைமை மோசமானது. பிறகு மாலை 3.15 மணிக்கு பேரவை கூடியபோது ஜெயலலிதா அணி உட்பட முக்கிய எதிர்க்கட்சிகள் அதில் பங்கேற்கவில்லை. மாலை 3.37 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. ஜானகி அம்மாளுக்கு ஆதரவாக 98 பேரும், எதிராக 8 பேரும் வாக்களித்தனர். 3 பேர் நடுநிலை வகித்தனர். நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜானகி அரசு வெற்றி பெற்றதாக பி.எச்.பாண்டியன் அறிவித்தார்.

அரசு கொறடா துரை கோவிந்தராஜனின் பரிந்துரையின்படி நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அவைக்கு வராத ஜெயலலிதா அணி எம்எல்ஏக்கள் 27 பேரை பி.எச்.பாண்டியன் தகுதி நீக்கம் செய்தார். ஆனால், நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்த 2-வது நாளில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

1988-ல் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 27 எம்எல்ஏக்களில் இன்றைய பேரவைத் தலைவர் பி.தனபாலும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனும் அடங்குவர். தனபால் சங்ககிரி (தனி) தொகுதியிலிருந்தும், செங்கோட்டையன் கோபிச்செட்டிப்பாளையத்தில் இருந்தும் எம்எல்ஏவாக இருந்தனர். அன்று தகுதி நீக்கம் செய்யப்பட்ட தனபாலிடம், 19 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யுமாறு அரசு கொறடா எஸ்.ராஜேந்திரன் பரிந்துரை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. அன்று தகுதி நீக்கம் செய்யப்பட்டவர், இன்று என்ன செய்யப் போகிறார் என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x