Published : 11 Aug 2017 08:35 AM
Last Updated : 11 Aug 2017 08:35 AM

கோவை - பெங்களூரு இடையே விரைவில் உதய் ரயில் சேவை: ஜோலார்பேட்டை வரை இரண்டு அடுக்கு ரயில் சோதனை ஓட்டம்

கோவை - பெங்களூரு இடையேயான இரவு நேர ரயில் சேவை வேண்டுமென்ற கோவை மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறும் தருணம் நெருங்கியுள்ளது. இந்த வழித்தடத்தில் இரட்டை அடுக்கு ரயிலை இயக்குவதற்காக சாத்தியக் கூறுகள் குறித்த ஆய்வு தொடங்கியுள்ளது.

தொலைதூர இடங்களுக்கு ஒரே இரவில் பயணிக்கும் வகையில் உதய் எனப்படும் இரட்டை அடுக்கு ரயில் திட்டம் கடந்த பட்ஜெட்டில் அறிவிக் கப்பட்டது. 120 பேர் அமர்ந்து பயணிக்கக்கூடிய ஏசி வசதி கொண்ட இந்த ரயிலில், மற்ற விரைவு ரயில்களைக் காட்டிலும் கட்டணம் குறைவாகவும், வசதிகள் அதிகமாகவும் உள்ளது. இருக்கைகள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் ஒரே நேரத்தில் அதிகம் பேர் பயணிக்கவும், 110 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படுவதால் தொலைதூரங்களை எளிதில் கடக்கவும் இந்த ரயில் சேவை உதவும் என எதிர்பார்க் கப்படுகிறது.

ஏற்கெனவே சென்னை - பெங்களூரு இடையே இரட்டை அடுக்கு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் உதய் திட்டத்தின் கீழ் 3 முக்கிய வழித்தடங்களில் இந்த ரயில் சேவைகள் தொடங்க உள்ளதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. தொழில்நகரமான கோவையில் இருந்து பெங்களூருவுக்கும் இதேபோன்ற இரவு நேர ரயில் இயக்கப்பட வேண்டுமென, கோவை மாவட்ட மக்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின் றனர்.

கடந்த மாதம் கோவை வந்த மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபாகர் பிரபு, செப்டம்பர் மாதத் துக்குள் கோவை - பெங்களூரு இடையே உதய் திட்டத்தின் கீழ் ரயில் சேவை தொடங்கப்படும் என உறுதியளித்தார். அதன் தொடர்ச்சியாக கோவை ரயில் நிலையத்தில் இரட்டை அடுக்கு ரயிலை இயக்குவதற்கு வசதியாக நடைமேடை மேற்கூரை, மின்சார இணைப்புகள் உள்ளிட்டவை சீரமைக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், இரண்டு பெட்டிகள், ஒரு ஜெனரேட்டர் பெட்டியுடன் கூடிய இரட்டை அடுக்கு ரயில் நேற்று கோவை ரயில்நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. இரட்டை அடுக்கு ரயில் சேவைக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்ட வசதிகள் சரியாக இருக்கின்றனவா என்பது குறித்து சோதனை நடத்தப்பட்டது.

அதையடுத்து கோவை ரயில்வே பணிமனையில் இந்த ரயில் நிறுத்தப்பட்டது. இன்று (ஆக.11) கோவை - ஜோலார்பேட்டை இடையே இந்த ரயில் மூலம் சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளதாக ரயில்வே துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, ‘இதுவரை அறிமுகப்படுத்தப்பட்ட இரட்டை அடுக்கு ரயில்களும், இன்று சோதனை ஓட்டத்துக்கு வந்துள்ள ரயிலும் முழுவதும் இருக்கைகளேயே கொண்டுள்ளன. படுக்கை வசதிகள் இல்லை.

இது வெறும் சோதனைக்கான ரயில் மட்டுமே. கோவை - பெங்களூரு இடையே இரவு நேர ரயில் இயக்க முடிவு செய்யப்பட்டிருப்பதால், அதற்கேற்ற வசதி கொண்ட ரயில் இங்கு இயக்கப்பட அதிக வாய்ப்பிருக்கிறது.

சென்னையில் அதற்கான தயாரிப்புப் பணிகள் நடப்பதாகவும் கூறப்படுகிறது. சோதனை ஓட்டங்கள் முடிந்தபிறகு அமைச்சர் உறுதியளித்தது போல அடுத்த மாதம் ரயில் சேவை தொடங்க வாய்ப்புள்ளது’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x