Published : 17 Aug 2017 09:40 AM
Last Updated : 17 Aug 2017 09:40 AM

கீழ்மட்ட பொறுப்புகளில் இருந்து மேலே வந்திருக்கிறோம்; நாங்கள் கொல்லைப்புறமாக ஆட்சிக்கு வரவில்லை: கடலூர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் பழனிசாமி பேச்சு

கட்சியின் கீழ் மட்ட பொறுப்புகளில் இருந்து உழைத்து வந்தவர்கள் நாங்கள். கொல்லைப்புறமாக வந்தவர்கள் இல்லை. இந்த இயக்கத்தையும் ஆட்சியையும் யாராலும் அசைக்கவும், ஆட்டவும் முடியாது என்று கடலூரில் நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்றுப் பேசிய முதல்வர் கே.பழனிசாமி தெரிவித்தார்.

தமிழக அரசு சார்பில் மாவட்டங்கள் தோறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெறுகிறது. கடலூர் மாவட்டத்துக்கான விழா மஞ்சக்குப்பம் மைதானத்தில் நேற்று மாலை நடந்தது. சபாநாயகர் தனபால் தலைமை தாங்கினார். தொழில்துறை அமைச்சர் சம்பத், கடலூர் எம்பி அருண்மொழிதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் வெங்கடேசன் வரவேற்று பேசினார்.

இதில் முதல்வர் கே.பழனிசாமி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:

பணம் ஈட்ட பல வழிகள் உண்டு, உணவு உண்ண ஒரே வழி விவசாயம்தான் என்று உணர்ந்து. முதலாம் பராந்தக சோழன் வீராணம் ஏரியை வெட்டி இந்தப் பகுதியை பசுமையான பூமியாக மாற்றினான். புதிய வீராணம் திட்டத்தின் மூலம் ஜெயலலிதா சென்னை மக்களின் தாகத்தை தீர்த்தார். இது தாகத்துக்கு தண்ணீர் கொடுத்த புண்ணிய பூமி.

ஜெயலலிதாவின் அரசியல் பிரவேசம் கடலூரில் தான் தொடங்கியது. என்எல்சி தனியார் மயம் ஆவதை தடுத்தவர் ஜெயலலிதா.கடலூர் கழகத்தின் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ளது.

கடலூர் துறைமுகத்தை மேம்படுத்த ரூ.115 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம் 500 பேருக்கு மறைமுகமாகவும், நேரடியாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும். ரூ.260 கோடியில் கொள்ளிடம் கூட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. விவசாயம் செழிக்க 100 கோடியில் குடிமராமத்து திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

நாங்கள் தொடர்ந்து பிரதமரை சந்திப்பது மீனவர்களின் விடுதலைக்காகத்தான். நாங்கள் கொல்லைப்புறமாக வந்தவர்கள் இல்லை. கீழ் மட்ட பொறுப்புகளில் இருந்து உழைத்து வந்தவர்கள். இந்த இயக்கத்தையும், ஆட்சியையும் யாராலும் அசைக்க முடியாது.

காட்டுமன்னார்கோவில் கொள்ளிடம் ஆற்றில் ஜெயலலிதா ரூ 400 கோடியில் அறிவித்த தடுப்பணைத் திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x