Published : 30 Aug 2017 08:05 AM
Last Updated : 30 Aug 2017 08:05 AM

தமிழக துணை முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றதுசெல்லாது என அறிவிக்க கோரி வழக்கு

தமிழக துணை முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றது அரசியலமைப்பு சட்டப்படி செல்லாது என அறிவிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வி.இளங்கோவன் என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

தமிழக முதல்வராக பதவி வகித்த ஜெயலலிதா கடந்த 2016 டிசம்பர் 5-ம் தேதி மரணமடைந்தார். அதைத் தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பதவியேற்றார். பின்னர் கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது பதவியை கடந்த பிப்ரவரி மாதம் ராஜினாமா செய்தார்.

அதையடுத்து, தமிழக முதல்வராக கே.பழனிசாமி கடந்த பிப்ரவரி16-ம் தேதி பதவியேற்றார். இந்நிலையில் இரு அணிகளாக பிரிந்து செயல்பட்ட ஓ.பன்னீர்செல்வமும், முதல்வர் கே.பழனிசாமியும் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒன்றாக இணைந்தனர். கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி தமிழக துணை முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றுக் கொண்டார்.

அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள விதிகளின்படி பதவிப் பிரமாணத்தின்போது பிரதமர், அமைச்சர்கள் அல்லது முதல்வர் மற்றும் அமைச்சர்கள் என்ற முறையில் மட்டுமே பதவியேற்க முடியும். அரசியலமைப்புச் சட்டத்தில் துணை முதல்வர் அல்லது துணைப் பிரதமர் என்ற பதவிகளுக்கு சட்டப்படி பதவிப்பிரமாணம் செய்வது என்பது கிடையாது.

சட்டப்படி செல்லாது

கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் தமிழகத்தின் துணை முதல்வர் என்ற அடிப்படையில் பதவியேற்றார். துணை முதல்வராக உறுதிமொழியும் ஏற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநரும் துணை முதல்வராக பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பிலும் ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வராக பதவியேற்றுக் கொண்டார் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இது சட்டப்படி செல்லாது. ஓ.பன்னீர்செல்வம் ஒரு அமைச்சர் என்ற முறையில்தான் உறுதிமொழியும், பதவியும் ஏற்றிருக்க வேண்டும்.

நேரு பிரதமராக இருந்தபோது வல்ல பாய் படேல் துணைப் பிரதமராக பதவி வகித்தார். அப்போது அவருக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைக்கவில்லை. அதுபோல மொரார்ஜி தேசாய் துணைப் பிரதமராக பதவி வகித்தார். அது வெறும் நிர்வாக ரீதியிலான பதவிதானே அன்றி அரசியலமைப்புச் சட்ட ரீதியிலான பதவி கிடையாது.

எனவே ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வராக பதவியேற்றது சட்டப்படி செல்லாது என அறிவிக்க வேண்டும். துணை முதல்வர் என்ற அடிப்படையில் பதவியேற்றதன் மூலம் அவர் தொடர்ந்து அமைச்சராகவும் பதவி வகிக்க தகுதியற்றவர் ஆகிவிடுகிறார். எனவே எந்த தகுதியின் அடிப்படையில் துணை முதல்வராக பதவி வகிக்கிறார் என்பது குறித்து ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் அளிக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கோரியுள்ளார்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x