Published : 12 Aug 2017 10:06 AM
Last Updated : 12 Aug 2017 10:06 AM

புதிய ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் பணியாற்றும் ஊழியர்கள்: கணக்குத் தாள்களை பதிவிறக்கம் செய்யலாம் - தமிழக அரசு அறிவிப்பு

தமிழக அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட கணக்குத் தாள்களை இணையளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர் களுக்கு கடந்த 2003-ம் ஆண்டு முதல் பழைய ஓய்வூதியத் திட்டம் மாற்றப்பட்டு, பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தை மாற்றி, பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து கடந்த 2011-ல், அதிமுக தேர்தல் அறிக்கையில் பழைய ஒய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்று கூறப்பட்டது. ஆனால், கடந்த 2016-ல் அதிமுக, மீண்டும் ஆட்சியைப் பிடித்த நிலையில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தும் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வதற்கான குழு அமைக்கப்பட்டது.

குழுவின் புதிய தலைவர்

குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சாந்தா ஷீலா நாயர் நியமிக்கப்பட்டார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப்பின், சாந்த ஷீலா நாயர் பதவி விலகிவிட, தற்போது அந்தக் குழுவுக்கு ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஸ்ரீதர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக மத்திய அரசு அமைத்துள்ள குழுவின் பரிந்துரைகளை அறிந்து, அதன்படி குழுவின் அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் பணியாற்றுவோர், தங்கள் கணக்குத் தாள்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசின் தகவல் தொகுப்பு விவர மையம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் பணியாற்றும் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான 2016-17-ம் ஆண்டு பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட கணக்குத் தாள்கள் அரசு தகவல் தொகுப்பு விவர மையத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது.

பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் கணக்குத் தாள்களை ‘http://cps.tn.gov.in’ என்ற இணையதள முகவரியிலும், சந்தாதாரர்கள் ‘http://cps.tn.gov.in/public’ என்ற இணையதள முகவரியிலும் பதிவிறக்கம் செய்யலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x