Published : 17 Aug 2017 11:10 AM
Last Updated : 17 Aug 2017 11:10 AM

சென்னை வார விழா நாளை தொடங்குகிறது: கண்காட்சிகள், பாரம்பரிய நடை, சொற்பொழிவுகளுக்கு ஏற்பாடு

சென்னை வார விழாவையொட்டி (மெட்ராஸ் வீக்) சென்னை நகரின் பாரம்பரியத்தை நினைவுகூறும் கண்காட்சிகள், பாரம்பரிய நடைகள், சொற்பொழிவுகள் என பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இது தொடர்பாக சென்னை வார விழா கொண்டாட்ட குழு ஒருங்கிணைப்பாளரும், வரலாற்று ஆய்வாளருமான எஸ்.முத்தையா சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: சென்னை நகரின் வரலாற்றுச் சிறப்புகளையும், பாரம்பரியத்தையும் நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் சென்னை வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் ஒரு நாள், அதன் பிறகு ஒரு வாரம் தற்போது ஒரு மாதம் என கொண்டாட்ட காலம் நீண்டு கொண்டே செல்கிறது.

இந்த நிகழ்ச்சிக்கு சென்னை வாசிகளிடமிருந்து நல்ல வரவேற்று கிடைத்துள்ளது. மக்கள் தாங்களாகவே வெவ்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்கிறார்கள். அந்த வகையில், 75-க்கும் மேற்பட்ட பாரம்பரிய நடைபயணம், புகைப்படம் மற்றும் வரைபடக் கண்காட்சி, சிறப்பு சொற்பொழிவுகள், மாணவர்களுக்கு விநாடி-வினா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இந்த ஆண்டு கொண்டாட்டத்திலும் இடம்பெற்றுள்ளன. ஆகஸ்டு 18-ம் தேதி (நாளை) தொடங்கி ஏப்ரல் 9-ம் தேதி வரை வெவ்வேறு இடங்களில் இந்த நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இவ்வாறு முத்தையா கூறினார். மற்றொரு ஒருங்கிணைப் பாளரும், மயிலாப்பூர் டைம்ஸ் ஆசிரியருமான வின்சென்ட் டி சவுஸா கூறும்போது, இந்த ஆண்டு நிகழ்ச்சிகள் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அமைந்திருக்கும். பாரம்பரிய நடைபயணங்களில் குழந்தைகளும் பங்கேற்பார்கள். குழந்தைகளுக்கு ஆங்கிலம் மற்றும் தமிழில் விநாடி-வினா போட்டியும் நடத்தப்படுகிறது. சென்னை நகரின் புதிய போக்குவரத்தாக திகழும் மெட்ரோ ரயில் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களைப் பற்றிய புகைப்படக் கண்காட்சி இந்த ஆண்டு நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக இருக்கும் என்றார்.

இன்-டேக் அமைப்பின் நிர்வாகியும் கட்டிடக்கலை நிபுணருமான சுஜாதா சங்கர் கூறும்போது, சென்னை நகரின் பாரம்பரியத்தையும் வரலாற்றுச் சிறப்பையும் இன்றைய குழந்தைகளுக்கு எடுத்துச்சொல்வது அவசியம். அந்த வகையில் சென்னை வார விழா குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் என்றார். முன்னதாக, சென்னை வார விழா கொண்டாட்ட ஒருங்கிணைப்பாளர்கள் எஸ்.முத்தையா, வின்சென்ட் டி சவுஸா, எஸ்.ஆர்.மது, சுஜாதா சங்கர் ஆகியோர் சென்னை வாரவிழாவை குறிக்கும் சிறப்பு டீ சர்ட்டை அறிமுகப்படுத்தினர். இதில் சென்னை நகரின் பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் சென்ட்ரல் ரயில் நிலையம், கலங்கரை விளக்கம், எலியட்ஸ் கடற்கரை, சினிமா உள்ளிட்டவற்றின் படங்கள் அச்சிடப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x