Published : 31 Aug 2017 08:56 AM
Last Updated : 31 Aug 2017 08:56 AM

பலத்தை நிரூபித்து ஆட்சியை தக்க வைக்க கடும் முயற்சி: எம்எல்ஏக்களுக்கு முதல்வர் திடீர் அழைப்பு - தலைமைச் செயலகத்தில் இன்று முக்கிய ஆலோசனை

தலைமைச் செயலகத்துக்கு இன்று வருமாறு அதிமுக எம்எல்ஏக்களுக்கு முதல்வர் கே.பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். எம்எல்ஏக்களை சென்னை அழைத்து வரும் பொறுப்பு அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

முதல்வர் பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெறுவதாக தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் ஆளுநரிடம் கடிதம் அளித்துள்ளனர். தற்போது தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 21 ஆக உள்ளது. இதையடுத்து, பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வருக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதற்கிடையே, அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் வரும் 12-ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கப் போவதாக தெரிவித்துள்ளனர்.

இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வென்ற மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ், கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு ஆகியோர் அதிமுகவில் இருந்து சசிகலா, தினகரன் ஆகியோரை ஒதுக்குவதற்கு எதிர்ப்பு தெரிவி்த்துள்ளனர். இந்த மூவரும் நேற்று முன்தினம் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தினகரன் ஆகியோரை சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஆளுநர் வித்யாசாகர் ராவை மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விசிக தலைவர் திருமாவளவன், மமக தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர் நேற்று சந்தித்து மனு அளித்தனர். அப்போது ‘ஆதரவை திரும்பப் பெறுவதாக கடிதம் அளித்த 19 எம்எல்ஏக்கள் இன்னும் அதிமுகவில் நீடிக்கின்றனர். அதிமுக உள்கட்சி விவகாரத்தில் தலையிட முடியாது’ என ஆளுநர் கூறியதாக திருமாவளவன் தெரிவித்தார்.

ஆளுநரின் இந்தக் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், “ஆளுநர் தனது கடமையை மறந்து செயல்படுகிறார். தன்னிடம் பந்து இல்லை என ஆளுநர் கூறியிருக்கிறார். அவர் நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழக நலனைக் காப்பாற்ற திமுக முயற்சிகளை மேற்கொள்ளும்” என தெரிவித்துள்ளார். அதாவது சட்டப்பேரவையில் பெரும்பான்மயை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிடாவிட்டால் திமுக சார்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என்பதையே ஸ்டாலின் மறைமுகமாக தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் பிரச்சினை தொடர்பாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் எம்பிக்கள் இன்று சந்தித்து முறையிட உள்ளனர்.

இந்நிலையில், தங்களது ஆதரவு எம்எல்ஏக்களின் பலத்தை நிரூபித்து ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள முதல்வர் பழனிசாமி தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து ஆலோசிப்பதற்காக எம்எல்ஏக்கள் அனைவரும் இன்று தலைமைச் செயலகம் வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். எம்எல்ஏக்களை சென்னை அழைத்து வரும் பொறுப்பு அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் நேரடியாகவும், தொலைபேசி மூலமும் அதிமுக எம்எல்ஏக்களை தொடர்பு கொண்டு சென்னை வந்து முதல்வரை சந்திக்குமாறு கூறியுள்ளனர். தலைமைச் செயலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்க உள்ளனர். இதன் மூலம் தங்களது பலத்தை காட்ட முதல்வர் பழனிசாமி தரப்பு தயாராகி வருகிறது.

கடந்த 28-ம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் 100-க்கும் குறைவான எம்எல்ஏக்களே பங்கேற்றதாகக் கூறப்படுகிறது. பெரும்பான்மை குறித்து குடியரசுத் தலைவரிடம் எதிர்க்கட்சிகள் முறையிடவுள்ள நிலையில் அதிமுக எம்எல்ஏக்களுக்கு முதல்வர் பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x