Last Updated : 02 Aug, 2017 03:10 PM

 

Published : 02 Aug 2017 03:10 PM
Last Updated : 02 Aug 2017 03:10 PM

திருச்சி ஜங்ஷனில் பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணம் இருமடங்கு உயர்வு: அனைத்து ரயில் நிலையங்களிலும் அமல்படுத்த திட்டம்? - ரயில் உபயோகிப்பாளர்கள் சங்கத்தினர் வேதனை

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் நேற்று முதல் பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணம் இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகத்தின் இந்த அதிரடி நடவடிக்கை, அனைத்து ரயில் நிலையங்களிலும் விரைவில் பிளாட்பார்ம் டிக்கெட் கட்டண உயர்வை அமல்படுத்துவதற்கான முன்னோட்டமாக இருப்பதாக ரயில் உபயோகிப்பாளர்கள் சங்கத்தினர் வேதனை தெரிவிக்கின்றனர்.

“திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகத்தின் கீழ் வரும் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ஆகஸ்ட் 1-ம் தேதி (நேற்று) முதல் செப்டம்பர் 30-ம் தேதி வரையும் வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், திருவாரூர், கும்பகோணம், தஞ்சா வூர் ஆகிய 5 ரயில் நிலையங்களில் வரும் 15-ம் தேதி முதல் செப்டம்பர் 15 வரையும் பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணம் ரூ.10-க்குப் பதிலாக ரூ.20 ஆக உயர்த்தி வசூலிக்கப்படும்” என்று திருச்சி ரயில்வே கோட்ட நிர்வாகம் நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

ரயில்வே துறையில் நாடு முழுவதும் கட்டணங்கள் ஒரே மாதிரியாக நிர்ணயிக்கப்படுவது வழக்கமாக உள்ள நிலையில், திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் தனது ஆளுகைக்குட்பட்ட சில ரயில் நிலையங்களில் மட்டும் பிளாட்பார்ம் டிக்கெட் கட்ட ணத்தை உயர்த்தியுள்ளது ரயில் உபயோகிப்பாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அதிர்ச்சி யையும் வேதனையையும் ஏற்படுத் தியுள்ளது.

இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே வட்டாரங்களில் கேட்ட போது, “பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணத்தை பிரத்யேக காரணங்களுக்காக உயர்த்திக் கொள்ள அந்தந்த கோட்ட ரயில்வே மேலாளர்களுக்கு அதி காரம் அளித்து 2015-லேயே ரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. கடந்தாண்டில் பிற மாதங்களைக் காட்டிலும் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் பிளாட்பார்ம் டிக்கெட் விற்பனை மூலம் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் வருவாய் அதிகமாக இருந்தது.

dhakshinajpgதட்சிணாமூர்த்தி

எனவே, நிகழாண்டு வருவாயை அதிகரிக்கும் நோக்கிலும், ரயில் நிலையங்களில் பயணிகளைத் தவிர மற்றவர்கள் வருவதைத் தடுக்கவும், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், தரமான சேவை வழங்கவும் முன்னோட்டமாக தற்காலிகமாக பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் சாதக- பாதகங்களைக் கொண்டு அடுத்தக் கட்ட முடிவு எடுக்கப்படும்” என்றனர்.

இதுதொடர்பாக திருவாரூர் மாவட்ட ரயில் மற்றும் பயணிகள் சங்கத் தலைவர் தட்சிணாமூர்த்தி கூறியது: ரயில் நிலையங்களில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், ரயில் நிலையத்துக்குள் அத்துமீறி நுழைபவர்களைத் தடுக்கவும் ரயில்வே போலீஸார், ரயில்வே பாதுகாப்புப் படையினர், டிக்கெட் பரிசோதகர்கள் என பல்வேறு வழிமுறைகள் ரயில்வே நிர்வாகத்திடம் உள்ள நிலையில், பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தியது சரியல்ல.

இந்தக் கட்டண உயர்வு ரயில் நிலையத்துக்கு வரும் மக்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையாகவே பார்க்கிறோம். எனவே, கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்றார்.

தஞ்சாவூர் மாவட்ட ரயில் உபயோகிப்பாளர் சங்க துணைத் தலைவர் வெ.ஜீவக்குமார் கூறும் போது, “அனைத்து ரயில் நிலையங்களிலும் படிப்படியாக நடைமுறைப்படுத்துவதற்கான முன்னோட்டமாகவே பிளாட்பார்ம் டிக்கெட் கட்டண உயர்வைப் பார்க்க முடியும். கட்டண உயர்வை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது” என்றார்.

 

திருச்சி கோட்ட ரயில்வே உபயோகிப்பாளர் ஆலோசனைக் குழு உறுப்பினர் கிரி கூறும் போது, “ஒரு பகுதியில் மட்டும் கட்டண உயர்வு என்பது இதுவரை தெற்கு ரயில்வேயில் அமல்படுத்தப்பட்டதில்லை.

வேளாங்கண்ணி திருவிழாவையொட்டி ரயில் நிலையங்களில் தங்குபவர்களைத் தடுக்கும் நோக்கில் இந்தத் நடவடிக்கையை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.

வருமானத்தை ஈட்டும் நோக்கில் நடைமுறைப்படுத்தியுள்ளதாகக் கூறினாலும், இந்த நடவடிக்கையை இதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x