Published : 10 Aug 2017 09:29 AM
Last Updated : 10 Aug 2017 09:29 AM

ஸ்பேஸ் கிட்ஸ் - மாஸ்கோ விமான நிறுவனம் இணைந்து நட்புறவு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த திட்டம்

இந்தியாவைச் சேர்ந்த ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பு மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த மாஸ்கோ விமான நிறுவனம் ஆகியவை இணைந்து நட்புறவு செயற்கைக்கோளை உருவாக்கி செலுத்த திட்டமிட்டுள்ளன.

இது தொடர்பாக ஸ்பேஸ் கிட்ஸ் அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

அறிவியல், தொழில்நுட்பம், கலை மற்றும் கலாச்சாரம் குறித்து சர்வதேச அளவில் அனுபவ ரீதியிலான பயிற்சி மாணவர்களுக்கு கிடைக்கச் செய்யும் நோக்குடன் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா (எஸ்கேஐ) அமைப்பு செயல்படுகிறது. மேலும் நாசா, மாஸ்கோ யூரி காகரின் விண்வெளி மையம், ஐரோப்பிய விண்வெளி மையம் ஆகியவற்றின் தூதராக செயல்படுகிறது.

தற்போது புதிய முயற்சியாக மாஸ்கோ விமான நிறுவனத்துடன் (எம்ஏஐ) இணைந்து சர்வதேச அளவில் இளம் விஞ்ஞானிகளுக்கு வாய்ப்புகளை வழங்க உள்ளது. மாணவர்களால் உருவாக்கப்படும் செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்படவுள்ளன. ஸ்பேஸ் கிட்ஸ் நிறுவனர் ஸ்ரீமதி கேசனின் இந்த யோசனையை எம்ஏஐ உடனடியாக ஏற்றுக்கொண்டது.

பின்னர் ஸ்பேஸ் கிட்ஸ் மற்றும் எம்ஏஐ பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. அப்போது இரு அமைப்புகளும் இணைந்து செயற்கைக்கோள்களை ஏவ நீண்டகால ஒத்துழைப்பு வழங்க முடிவு செய்யப்பட்டது. இந்தியா - ரஷ்யாவின் நெருங்கிய நட்பை குறிக்கும் வகையில் அடுத்த 3 மாதங்களில், அதாவது வரும் அக்டோபர் மாதம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு நட்புறவு செயற்கைக்கோள் செலுத்தப்படுகிறது. அங்கு 2 மாதங்களுக்கு அந்த செயற்கைக்கோள் இருக்கும். பொதுவான தொடர்பு செயற்கைக்கோளான இதன் மூலம் பல்கலைக்கழக மற்றும் உயர்நிலை பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகளை நடத்தவும், இந்திய-ரஷ்ய தேசிய கீதங்களை ஒலிக்கச் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

திறமை வாய்ந்த புதிய தலைமுறை இளைஞர்கள் இதில் முக்கிய பங்கேற்பாளர்களாக பங்கேற்கின்றனர். ஸ்பேஸ் கிட்ஸ் மற்றும் எம்ஏஐ-யின் இந்த கூட்டாண்மை முதல் கூட்டு கல்வி திட்டமாக இருக்கும். மேலும் அடுத்த 2 ஆண்டுகளில் மாணவர் செயற்கைக்கோள் ஒன்று உருவாக்கப்பட்டு ஏவப்படும்.

இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x