Published : 01 Aug 2017 09:57 AM
Last Updated : 01 Aug 2017 09:57 AM

பார்வை பாதிப்பு.. கால்களில் ரணம்.. இளமையில் முதுமை.. சொல்ல முடியாத சோகத்தில் உப்பளத் தொழிலாளர்கள்!

'உப்பிட்டவரை உள்ளளவும் நினை' என்கிறோம். ஆனால், அந்த உப்பை நமக்குச் சேகரித்துத் தரும் உப்பளத் தொழிலாளர்களின் பரிதாப நிலையை நினைக்கத்தான் ஆளில்லை.

தமிழகத்தின் மிகமுக்கியமான உப்பு உற்பத்திக் கேந்திரம் தூத்துக்குடி மாவட்டம். இங்கு சுமார் அறுபதுக்கும் மேற்பட்ட கடற்கரை கிராமங்களில் சுமார் 25 ஆயிரம் ஏக்கரில் உப்பளங்கள் உள்ளன. இங்கு சுமார் 35 ஆயிரம் உப்பளத் தொழிலாளர்கள் இரவு பகலாக பணி செய்கிறார்கள். இவர்களின் உழைப்பில் ஆண்டுக்கு சராசரியாக 25 லட்சம் டன் உப்பு விளைகிறது.

வெள்ளைப் பளிங்கு போல்..

தூத்துக்குடி - ராமேஸ்வரம் கிழக்கு கடற்கரைச் சாலையில் வெள்ளைப் பளிங்கு போல் சாலையின் இருபுறமும் கண்ணைப் பறிக்கின்றன உப்பளங்கள். சாலையின் ஓரத்தில் நின்றாலே, கடும் வெய்யிலோடு கலந்து வரும் உப்பளக் காற்று நம்மை தெரிக்க வைக்கிறது. ஆனால், அதையெல்லாம் பொருட்படுத் தாமல், பாத்திகளில் விளைந்து கிடக்கும் உப்பை சுமந்தபடி விரைவு காட்டுகிறார்கள் உப்பளத் தொழிலாளர்கள்.

அங்கே அரை மணி நேரம் நின்றாலே நமது உடம்பு சோர்ந்து விடுகிறது. ஆனால், வயிறு நிறைக்கும் போராட்டம் என்பதால் மணிக்கணக்கில் உழல்கிறார்கள் உப்பளத் தொழிலாளர்கள். பல இடங்களில் கணவனும் மனைவியும் சில இடங்களில் தாயும் மகளும் என இங்கே உப்பளத் தொழிலில் இருக்கிறார்கள் மக்கள். ஆனாலும் பெரிதாக ஏற்றம் காணாத இவர்கள், போதாக்குறைக்கு தொழில்முறை நோய்களுக்கும் ஆளாகி வருவது விவரிக்க முடியாத சோகம்.

சலுகை அளிக்கும் குஜராத் அரசு

தங்களின் சோகத்தைப் பகிர்ந்து கொண்ட கல்லூரணி ஞானதுரை, “தமிழகம் மட்டுமில்லாமல் கேரளா, கர்நாடகா, ஆந்திராவுக்கும் இங்கிருந்துதான் உப்பு போகுது. பதினஞ்சு வருசத்துக்கு முந்தி, மேற்கு வங்கம், பீகார், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் இங்கிருந்து உப்பு போச்சு. ஆனா, அதுக்கப்புறம் குஜராத் உப்பு வர ஆரம்பிச்சிருச்சு.

குஜராத்தில் உப்பு உற்பத்திக்கு மாநில அரசு பல்வேறு சலுகைகளை அளிக்குது. மின் கட்டணத்திலும் மானியம் உண்டு. அங்கே உப்பு உற்பத்திக்கு கடல் நீரை மட்டுமே பயன்படுத்துறாங்க. ஆனா தூத்துக்கு டியில், உப்பளங்களில் போர்வெல் போட்டு தண்ணீர் எடுத்து உப்பு விளைவிக்கிறாங்க. இதனால் உப்பு உற்பத்தியாளர்களுக்கு ஏற்படும் கூடுதல் செலவை ஈடுகட்டும் வகையில் குஜராத்தைப் போல தமிழக அரசும் சலுகைகளை வழங்க வேண்டும்” என்றார்.

40 ஆண்டுகளாக போராடுகிறோம்

தொடர்ந்து பேசிய தூத்துக்குடி மாவட்ட உப்பு தொழி லாளர்கள் சங்க தலைவர் (சி.ஜ.டி.யு) பொன்ராஜ் “ தொழிற்சாலைகள் சட்டத்துக்குள் உப்புத் தொழிலும் வரும். தொழிலாளர் நலச் சட்டங்கள் உப்பளத் தொழிலாளர்களுக்கும் பொருந்தும் என 1957-லேயே உச்சநீதிமன்றத் தீர்ப்பு வந்த்கிருந்தும் இன்றுவரை அதை அமல்படுத்தவில்லை. உப்பளத் தொழிலாளர் களுக்கு அடையாள அட்டை, பெண்களுக்கு பிரசவகால விடுப்பு, வருங்கால வைப்பு நிதி பிடித்தம், இ.எஸ்.ஐ வசதி, வார விடுமுறை சம்பளம் என எந்த அடிப்படை கட்டமைப்புகளும் இங்கு இல்லை.

மாவட்டத்திலேயே ரெண்டே ரெண்டு உப்பளத்தில்தான் சம்பள ரசீதே கொடுக்கிறார்கள். மழைக்காலங்களில் உப்பளத்தில் வேலை இருக்காது. அந்த சமயங்களில் மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என 40 ஆண்டுகளாக போராடுகிறோம்: யாரும் கண்டுகொள்ளவில்லை. போனஸ், பி.எஃப். பிடித்தம் உள்ளிட்ட விவகாரங்களும் இங்கு தொழிலாளர் நலன் சார்ந்ததாக இல்லை.” என்றார்.

துரத்தும் நோய்கள்

வெயிலின் தாக்கத்தை சமாளிக்க உப்பளங்களில் கருப்புக் கண்ணாடி அணிந்துதான் வேலை செய்ய வேண்டும் என்பது விதி. ஆனால், ஒரு சில உப்பளங்களில் மட்டுமே கண்ணாடி தருகிறார்கள். ஒருசிலர், கண்ணாடிக்காக ஆண்டுக்கு 100 ரூபாய் தருகிறார்கள். கண்ணாடி அணியாமல் உப்பளத்தில் நிற்பதால் 40 வயதிலேயே பார்வைக் கோளாறுகளுக்கு ஆளாகிறார்கள் தொழிலாளர்கள். இதேபோல், கடும் வெயிலில் உப்பில் நடந்துகொண்டே இருப்பதால் கால்களில் ஆறாத புண்கள் உருவாகி, ரணப்படு கிறார்கள். கடுமையான வெப்பத்தால் மூல நோயின் தாக்கத்துக்கும் ஆளாகிறார்கள் தொழிலாளர்கள்.

இதுகுறித்துப் பேசினார் தொழிலாளி முனியம்மாள். “ ராத்திரி ஒண்ணரை மணிக்கு உப்பளத்துக்கு வேலைக்கு வந்தா, காலையில் 9 மணிக்குத்தான் வேலை முடியும். பகல் வேலைக்கு வர்றவங்களும் இருக்காங்க. உப்புக் காத்துல, உப்பு மேலய நின்னு வேலை செய்யுறதால எங்களை வியாதிகள் துரத்துது. அதையெல்லாம்விட கொடுமை, அவசர ஆத்திரத்துக்கு ஒதுங்கக்கூட பெரும்பாலான உப்பளங்கள்ல கக்கூஸ், தண்ணீர் வசதி எதுவும் இல்லை. ஆம்பளைங்க எங்கயாச்சும் எப்படியாச்சும் போயிருவாங்க. பொம்பளைங்கள நினைச்சுப் பாருங்க!” என்கிறார் முனியம்மாள்.

இவ்வளவுதான் சம்பளம்

ஆணுக்கு 290 ரூபாய், பெண்ணுக்கு 280 ரூபாய் இதுதான் இப்போது தூத்துக்குடி உப்பளத் தொழிலாளர்களின் தினப்படி சம்பளம். இதுவே தொழிலாளர்களின் கடும் போராட்டங்களுக்குப் பிறகு அமலுக்கு வந்த ஊதிய விகிதமாம்.

“உப்பளத் தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணம் வழங்கப்படும்ன்னு தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் சொன்னது தேர்தல் அறிக்கையோட நிக்கிது. அப்பாவி உப்பளத் தொழிலாளர்களின் உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்படுகின்றன. வெயிலில் கிடந்து வதங்குவதால் தொழிலாளர்கள், இளம் வயதிலேயே முதுமைதட்டிப் போகும் அவலமும் நடக்குது” என்கிறார் சிவந்தாகுளம் மணவாளன்.

இவர்களின் பிரச்சினைகள் குறித்து மத்திய அரசின் உப்பு இலாகாவின் தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் கஸ்தூரியிடம் பேசினோம். “ பாதுகாப்பான முறையில் உப்பளத்தில் பணி செய்வது குறித்து அடிக்கடி உப்பளத் தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு அளிக்கிறோம். தொழிலாளர்களுக்கான கழிப்பறை, காத்திருப்பு அறை, குடிநீர் வசதி உள்ளிட்டவைகள் அமைக்கப்பட்டுள்ளதா என்பதை மாநில அரசின் தொழிலாளர் துறையினரே ஆய்வு செய்ய வேண்டும். சிலர், ஒரே உப்பளத்தில் பணி செய்யாமல் மாறி மாறி பல இடங்களில் பணி செய்வதால்தான் அவர்களுக்கான பி.எஃப். உள்ளிட்ட வைகளை முறைப்படுத்துவதில் சிக்கல் ஏற்படுகிறது” என்று சொன்னார் கஸ்தூரி.

‘தரை மேல் பிறக்க வைத்தான்’ என்று பாடியது மீனவர்களுக்கு மாத்திரமல்ல.. உப்புக்குள் வாழ்க் கையைத் தேடும் உப்பளத் தொழிலாளர்களுக்கும் சேர்த்துத்தான் போலும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x