Published : 27 Aug 2017 01:15 PM
Last Updated : 27 Aug 2017 01:15 PM

அரசியல், சட்ட கடமையை ஆளுநர் பொறுப்புடன் நிறைவேற்ற வேண்டும்: முத்தரசன்

தமிழக பொறுப்பு ஆளுநர் தனது அரசியல் சட்ட கடமையை நிறைவேற்றும் விதத்தில், காலதாமதமின்றி உடனடியாக சட்டப் பேரவைக் கூட்டத்தை கூட்டி அரசுக்குரிய பெருபான்மையை நிரூபிக்கச் சொல்லவேண்டிய கடமை உள்ளது என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "கடந்த 2017 பிப்ரவரியில் தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்று எடப்பாடி பழனிச்சாமி செயல்பட்டு வருகின்றார். அவரது அரசுக்கு ஆதரவளித்த அஇஅதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களில் 21 உறுப்பினர்கள் தங்களது ஆதரவை விலக்கிக் கொண்டுள்ளனர்.

19 அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுநரை நேரில் சந்தித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று கடிதம் கொடுத்துள்ளனர். இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு அறுதிப்பெருபான்மை பலத்தை இழந்துவிட்டது வெளிப்படையானதாகும்.

இந்நிலையில் ஆளுநரிடம் கடிதம் கொடுத்த 19 உறுப்பினர்களுக்கு பேரவைத் தலைவர் மூலம் நோட்டீஸ் கொடுக்கப்பட்டு, அவர்களை பதவி நீக்கம் செய்யும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதுடன், கடந்த பேரவைக்கூட்டத் தொடரில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட குட்கா பகிரங்கமாக விற்பனை செய்யப்பட்டு வருவதை அரசின் கவனத்திற்கு கொண்டு வரும் நோக்கில், அவையில் குட்காவை காண்பித்தார்கள் என்ற காரணம் காட்டி, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான முயற்சிகளையும் மேற்கொள்வதாக தெரிகின்றது.

இத்தகைய குறுக்கு வழிகளை மேற்கொண்டு தங்களது ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள ஜனநாயக விரோதமான செயல்களில் அரசு ஈடுபட்டு வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்நிலையில் தமிழக பொறுப்பு ஆளுநர் தனது அரசியல் சட்ட கடமையை நிறைவேற்றும் விதத்தில், காலதாமதமின்றி உடனடியாக சட்டப் பேரவைக் கூட்டத்தை கூட்டி அரசுக்குரிய பெருபான்மையை நிருபிக்கச் சொல்லவேண்டிய கடமை அவருக்கு உள்ளது.

அத்தகைய கடமையை ஆளுநர் மேற்கொள்ள வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்" இவ்வாறு முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x