Published : 05 Aug 2017 09:59 AM
Last Updated : 05 Aug 2017 09:59 AM

கச்சத்தீவை மீட்பது மட்டும்தான் மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு: தாயகம் திரும்பிய மீனவர்களை வரவேற்ற அமைச்சர் உறுதி

கச்சத்தீவை மீட்பதுதான் தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக அமையும் என்று தமிழக மீன்வளம் மற்றும் நிதித்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நாகை மாவட்ட மீனவர்கள் 8 பேர், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 24 பேர், ராமேசுவரம் பகுதியைச் சேர்ந்த 16 பேர், மண்டபம் பகுதியைச் சேர்ந்த 12 பேர், காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த 17 பேர் என மொத்தம் 77 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கடந்த 3 மாதங்களில் வெவ்வேறு நாட்களில் கைது செய்தனர்.

இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த இம்மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட முயற்சியால், நல்லெண்ண அடிப்படையில் இலங்கை நீதிமன்றம் கடந்த ஜூலை 29-ம் தேதி விடுதலை செய்து உத்தரவிட்டது.

இதையடுத்து, விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் 77 பேரும் இந்திய தூதரகம், இந்திய கடலோர காவல்படையிடம் ஒப்படைக்கப்பட்டு, காரைக்கால் தனியார் துறைமுகத்துக்கு நேற்று முன்தினம் இரவு வந்து சேர்ந்தனர்.

தமிழக மீன்வளம் மற்றும் நிதித் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், நாகை மாவட்ட ஆட்சியர் சீ.சுரேஷ்குமார் ஆகியோர் மீனவர்களை வரவேற்று உணவு, புதிய உடைகள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கி அரசு செலவில் சொந்த ஊருக்கு அனுப்பிவைத்தனர்.

பின்னர் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியது:

கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை மீட்பது குறித்து தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பிரதமரிடம் நேரிலும், கடிதம் மூலமும் அழுத்தம் கொடுத்தனர். இதையடுத்து 77 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டு, சொந்த ஊர்களுக்குத் திரும்பியுள்ளனர்.

இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள 139 படகுகளில் 39 படகுகளை விடுவிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த படகுகளை மீட்டு தமிழகம் கொண்டு வர சிறப்புக் குழு அனுப்பி வைக்கப்பட உள்ளது. மற்ற படகுகளையும் விடுவிக்க அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கச்சத்தீவை மீட்பதுதான் தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக அமையும். தமிழக அரசைப் பொறுத்தவரை கச்சத்தீவை மீட்பதே லட்சியம். இப்பிரச்சினை குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றார்.

500 படகுகள் கட்ட திட்டம்

அமைச்சர் டி.ஜெயக்குமார் மேலும் கூறியது: ஆழ் கடல் மீன்பிடிப்பை ஊக்கப்படுத்தி மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள் நீலப்புரட்சி என்ற திட்டத்தை உருவாக்கி உள்ளன. இத்திட்டத்துக்கு முதல் கட்டமாக மத்திய அரசு ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

ஆழ் கடல் மீன்பிடிப்புக்கு ஏற்ற வகையிலான ஒரு படகு அமைக்க ரூ.80 லட்சம் செலவாகும். இதில், 50 சதவீதம் மத்திய அரசு மானியமாகவும், 20 சதவீதம் மாநில அரசின் மானியமாகவும், 20 சதவீதம் வங்கிக் கடனாகவும், 10 சதவீதம் மீனவர்களின் பங்களிப்பாகவும் இருக்கும்.

இந்த வகையில், நிகழாண்டு 500 படகுகள் கட்டமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 3 முதல் 6 மாதங்களுக்குள் படகுகள் கட்டி முடிக்கப்படும். புதிய படகுகள் கட்டுவதால் பழைய படகுகளைப் பயன்படுத்த முடியாது. இதனால் வேலை இழப்பு ஏற்படும். எனவே, 3 மாதங்களுக்கு மீனவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் நிவாரணமாக வழங்கப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x