Published : 18 Aug 2017 09:19 AM
Last Updated : 18 Aug 2017 09:19 AM

காவிரியில் கர்நாடகம் புதிய அணை: உச்ச நீதிமன்றத்தின் யோசனைக்கு டெல்டா விவசாயிகள் கடும் எதிர்ப்பு - ‘இதுவே தீர்ப்பானால் விளைநிலங்கள் பாலைவனமாகும்’

காவிரியின் குறுக்கே கர்நாடகம் புதிய அணை கட்ட உச்ச நீதிமன்றம் அளித்துள்ள யோசனைக்கு, தமிழக காவிரி உரிமைக்காகப் போராடும் இயக்கங்களின் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தமிழகத்துக்கு தண்ணீர் பிரச்சினை ஏற்படாத வகையில் காவிரியில் அணை கட்டலாம் என்ற கருத்தை உச்ச நீதிமன்றம் நேற்று தெரிவித்துள்ளது.

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு நேற்று வந்தது.

அப்போது நீதிபதி, தமிழகத்துக்கு பாதிப்பில்லாத வகையில் கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே அணை கட்டிக் கொள்ளலாம் என்றும், தேவைப்பட்டால் மேற்பார்வைக் குழு ஒன்றை அமைத்து தமிழக அரசு கண் காணிக்கலாம் என்றும் கருத்து தெரிவித்திருந்தார்.

மேகேதாட்டுவில் கர்நாடகம் அணை கட்ட, தமிழக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், உச்ச நீதிமன்றம் இத்தகைய கருத்தை முன்வைத்துள்ளது, தமிழக காவிரி உரிமைக்காகப் போராடும் இயக்கங்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தமிழக காவிரி டெல்டா பாசன விவசாயிகள் நலச் சங்கப் பொதுச் செயலாளர் மன்னார்குடி எஸ்.ரெங்கநாதன் தெரிவித்ததாவது: உச்ச நீதிமன்ற யோசனை காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை முழுமையாக மழுங்கடித்து விடும். கர்நாடகம் இதுவரை, உபரி நீரை மட்டுமே கொடுத்து வந்தது. உச்ச நீதிமன்ற ஆணைகளை துச்சமாக மதித்து, தண்ணீர் திறக்க மறுத்து வருகிறது. நிலைமை இப்படி இருக்க, கர்நாடகம் அணையை கட்டிக்கொண்டு, தமிழகத்துக்கு நன்மை செய்யும் என்று எதிர்பார்ப்பது விந்தையானது. கண்டனத்துக்குரியது என்றார்.

தமிழக அனைத்து விவசாய சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்ததாவது: தமிழக காவிரி டெல்டா விவசாயிகள் கடந்த 6 ஆண்டுகளாக குறுவையை இழந்து, கடந்த ஆண்டு சம்பாவையும் இழந்து பேரிழப்பை சந்தித்து வரும் நிலையில், உச்ச நீதிமன்றத்தின் கருத்து துரதிர்ஷ்டமானது. வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றார்.

அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் துணைத் தலைவர் வழக்கறிஞர் வெ.ஜீவக்குமார் தெரிவித்தது:

தமிழகத்தை ஆளும் கட்சி, தனது அரசையும், ஆட்சியையும் பாதுகாத்துக்கொள்வதிலேயே கவனம் செலுத்தி, காவிரி உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளில் நமது நியாயமான நிலைப்பாட்டை மத்திய அரசுக்கு வலியுறுத்த தவறிவிட்டது. இந்த நிலையில் உச்ச நீதிமன்றம் கூறியுள்ள கருத்து, தமிழக காவிரி டெல்டா மக்களின் தலையில் பேரிடியாக இறங்கியுள்ளது.

இருக்கின்ற அணைகளில் இருந்து, காவிரி நடுவர்மன்ற உத்தரவுப்படி, தமிழகத்துக்கு உரிய தண்ணீரைத் தர மறுத்து வரும் கர்நாடகம், புதிதாக அணையைக் கட்டித், தமிழகத்துக்கு தண்ணீர் தரும் என்று எதிர்பார்ப்பது நகைப்புக்கும், கண்டனத்துக்கும் உரியதாகும். இதுவே, உச்ச நீதிமன்ற உத்தரவானால், டெல்டா மாவட்டங்களின் விளைநிலங்கள் பாலைவனமாகும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x