Last Updated : 27 Aug, 2017 11:57 AM

 

Published : 27 Aug 2017 11:57 AM
Last Updated : 27 Aug 2017 11:57 AM

திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் 1,403 பேர் மீண்டும் பள்ளியில் சேர்ப்பு: அனைவருக்கும் கல்வி இயக்கம் நடவடிக்கை

திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் 1,403 பேர் மீண்டும் பயிற்சி மையங்கள் மற்றும் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் கண்டறியப்பட்ட 1,403 பள்ளி செல்லா குழந்தைகள் மீண்டும் பயிற்சி மையங்கள் மற்றும் பள்ளிகளில் சேர்க்கப்பட்டு கல்வி பயிலும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராஜேந்திரன் தெரிவித்ததாவது:

திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், வறுமை, பள்ளிக்குச் செல்வதற்கு ஆர்வமின்மை, பெற்றோரின் தொழில் காரணமாக புலம் பெயர்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பள்ளிக்கும் செல்லும் வயது வந்தும் கூட, பல குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாமல் இருப்பது வழக்கமாக உள்ளது.

அப்படி பள்ளிக்கு செல்லாமல் இருக்கும் குழந்தைகளைக் கணக்கெடுத்து, அவர்கள் மீண்டும் பள்ளிக்குச் செல்வதற்கான நடவடிக்கைகள் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் ஆண்டுதோறும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவ்வகையில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லி, மீஞ்சூர் உள்ளிட்ட 14 ஊராட்சி ஒன்றியங்களிலும் 6 முதல் 14 வயது உடைய பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நடந்தது.

தொழிலாளர்களின் குழந்தைகள்

ஆசிரியர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள், கிராம கல்விக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களைக் கொண்ட குழுவினர் மேற்கொண்ட அந்த கணக்கெடுப்பு பணியில், 1,403 குழந்தைகள் பள்ளி செல்லாமல் இருப்பது கண்டறியப்பட்டது. அந்தக் குழந்தைகளில், செங்கல் சூளைகளில் பணிபுரியும் திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகள் 167 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது, இந்த 1,403 பள்ளி செல்லா குழந்தைகளில், 328 பேர் நேரடியாக பள்ளிகளில் வயதுக்கேற்ற வகுப்புகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். 672 பேர், பூந்தமல்லி, மீஞ்சூர், ஆர்.கே.பேட்டை உள்ளிட்ட 14 ஊராட்சி ஒன்றியங்களில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் செயல்படும் 34 நீண்ட கால சிறப்பு பயிற்சி மையங்களில் சேர்க்கப்பட்டு கல்வி பயின்றுவருகின்றனர்.

புலம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகள் உள்ளிட்ட 257 பேர், இம்மாவட்டத்தில் உள்ள 12 குறுகிய கால பயிற்சி மையங்களில் சேர்க்கப்பட்டுள்ளனர். 146 குழந்தைகள் திருவெள்ள வாயல், காவேரிராஜபுரம் ஆகிய இடங்களில் உள்ள இரு உண்டு உறைவிடப் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்இந்தச் சிறப்பு பயிற்சி மையங்கள் மற்றும் உண்டு உறைவிடப் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ள பள்ளி செல்லா குழந்தைகள் கல்வி தன்னார்வலர்கள் மூலம் எழுத்துப் பயிற்சி, வாசிப்பு பயிற்சி உள்ளிட்ட அடிப்படை பயிற்சிகளையும் பெற்றுவருகின்றனர்.

இப்பயிற்சி மையங்கள் மற்றும் உண்டு உறைவிடப் பள்ளிகளில் பயிற்சி பெறும் குழந்தைகளுக்கு, அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உபகரணங்கள் யாவும் வழங்கப்பட்டு, அவர்கள் தொடர்ந்து பள்ளிக்குச் செல்வதற்கான சூழல் உருவாக்கப்பட்டுவருகின்றன. இந்த 1,403 பள்ளி செல்லா குழந்தைகளுக்கான பயிற்சிகள் யாவும் முடிந்தவுடன், அவர்கள் அரசுப் பள்ளிகளில் வயதுக்கேற்ற வகுப்புகளில் சேர்க்கப்படுவர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x