Published : 11 Aug 2017 08:50 AM
Last Updated : 11 Aug 2017 08:50 AM

திருவண்ணாமலை ‘மூக்குபொடி’ சித்தரிடம் ஆசி பெற்ற தினகரன்: ‘தானே’ புயலையும், பணமதிப்பு நீக்கத்தையும் முன்கூட்டியே குறிப்பால் உணர்த்திய ருசிகர தகவல்கள்

திருவண்ணாமலையில் வாழும் ‘மூக்குபொடி’ சித்தரிடம் டிடிவி தினகரன் நேற்று ஆசி பெற்றார்.

இரட்டை இலை சின்னத்தை மீட்க தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறி அதிமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டார். அவர், சிறையில் இருந்து விடுதலையான பிறகு, கட்சிப் பணியில் ஈடுபட போவதாக அறிவித்தார். இதையடுத்து, 2 அணியாக இருந்த அதிமுக, 3 அணிகளாக பிளவுபட்டது.

இந்நிலையில், திருவண்ணாமலையில் ‘மூக்குபொடி’ சித்தரை நேற்று சந்தித்து தினகரன் ஆசி பெற்றார்.

திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் எதிரே உள்ள உணவகத்தின் முதல் தளத்தில் உள்ள வரவேற்புப் பிரிவு முன்பு தரையில் அமர்ந்து இருந்த ‘மூக்குபொடி’ சித்தரை, தினகரன் வணங்கினார். சுமார் 10 நிமிட தரிசனத்துக்குப் பிறகு, அண்ணாமலையை காரில் சுற்றி வந்து தரிசனம் செய்தார். பின்னர், தஞ்சைக்கு புறப்பட்டுச் சென்றார்.

‘மூக்குபொடி’ சித்தர் யார்?

‘மூக்குபொடி’ சித்தரின் பக்தரும் உணவக உரிமையாளருமான ஆகாஷ் முத்துகிருஷ்ணன் கூறும்போது, ‘‘மூக்குபொடி’ சித்தரின் இயற்பெயர் மொட்டையக் கவுண்டர். ‘மூக்குபொடி’யை விரும்பி பயன்படுத்துவதால் ‘மூக்குபொடி’ சித்தர் என்று அழைக்கப்படுகிறார்.

விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள ராஜபாளையம் என்ற கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர். அவருக்கு வயது 85-க்கு மேல் இருக்கும். ஒரு மகன் உள்ளார். மனைவி இறந்த பிறகு ஆன்மிகத்தை தேடிச் சென்றுள்ளார். வீரபத்திரசாமியை வழிபட்டு வந்துள்ளார்.

திருவண்ணாமலையில் சுமார் 40 ஆண்டுகளாக வாழ்கிறார். அவர் யாரிடமும் பற்று செலுத்துவது இல்லை. தன் மகன் மற்றும் பேரப் பிள்ளைகளிடமும் அப்படித்தான் இருப்பார். அதேபோல், அவரது ஆளுமைக்குள் யாரையும் அனுமதிப்பதும் கிடையாது.

ஒரு இடத்தில் 3 மாதங்களுக்கு மேல் இருக்கமாட்டார். சிதம்பரத்தில் அதிக காலம் தங்கியிருந்தார். பல நாட்கள் உணவு உட்கொள்ளாமல் இருப்பார். திடீ ரென சாப்பிடத் தொடங்குவார்.

புயலும், பணமதிப்பு நீக்கமும்

ஒவ்வொரு நிகழ்வுகள் மற்றும் தனிமனிதப் பிரச்சினைகளை ‘மறைபொருள்’ மூலமாக சுட்டிக்காட்டுவார். ‘தானே’ புயல் வருவதற்கு முதல் நாள் மதியம் கடலூருக்குச் சென்று, கடலைப் பார்த்து, ‘அமைதியாக இரு, சத்தம் போடாதே’ என்று பேசினார். மறுநாள், தானே புயல் தாக்கியது.

பணம் மதிப்பு நீக்கம் செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு ரூ.500, ரூ.1000 தாள்களை கிழித்துப்போட்டார். கூடங்குளம் போராட்டம் தொடர்பான நிகழ்வையும் சுட்டிக்காட்டினார்.

மனதில் அமைதி தவழ்கிறது

அவரது அனுமதி இல்லாமல் அவரை யாரும் தரிசிக்க முடியாது. ‘மூக்குபொடி’ சித்தரை டிடிவி தினகரன் பலமுறை சந்தித்துள்ளார். ஆனால், ஒருமுறை கூட வெளியே தெரியவில்லை. இப்போது காட்சிப்படுத்துவதற்கான காரணம் புரியவில்லை. அவரை தரிசிக்க வரும் பக்தர்கள் (வெளிநாட்டினர் உட்பட) சிந்தனையில் குழப்பம் ஏதும் இல்லாமல் அமைதி ஏற்படுகிறது என்று கூறுவார்கள்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x