Published : 12 Aug 2017 09:52 AM
Last Updated : 12 Aug 2017 09:52 AM

தனியார் மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்கு இலவச சிகிச்சை: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்கு இலவசமாக சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நேற்று அமைச்சர்கள் விஜயபாஸ்கர், செங்கோட்டையன், கருப்பணன் ஆகியோர் டெங்கு காய்ச்சல் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து அமைச் சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை முதன்மை செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அனைத்து விதமான காய்ச்சல்களும் டெங்கு காய்ச்சல் என்று மக்கள் தவறாக கருதி வருகின்றனர். காய்ச்சலுக்கு சிகிச்சைக்கு வருபவர்களின் 10 சதவீதத்துக்கும் குறைவானவர்களுக்கு மட்டுமே டெங்கு பாதிப்பு உள்ளது. தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் முழு கட்டுப்பாட்டுக்குள் உள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம், சுகாதாரத் துறையினர் தொடர் நடவடிக்கையால், தற்போது டெங்கு கட்டுக்குள் உள்ளது. டெங்கு காய்ச்சல் பாதிப்பினால் 100 சதவீதம் உயிரிழப்பை தடுக்கும் வகையில் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

தமிழகத்தில் 5 ஆயிரம் பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து தற்போது வரை டெங்கு பாதிப்பினால் 15 பேர் உயிரிழந்துள்ளனர். 20 பேர் பிற நோய்களின் தாக்குதல் காரணமாக உயிரிழந்துள்ளனர். மாநிலம் முழுவதும் 90 மையங்களில், எலிசா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

தனியார் மருத்துவமனைகளில் டெங்கு சிசிச்சைக்காக சேர்க்கப்படும் நோயாளிகளின் நிலைமை சுகாதாரத்துறை ஆய்வாளர்கள் மூலமாக தினந்தோறும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. டெங்கு காய்ச்சலுக்கு அங்கீகரிக்கப்பட்ட 870 தனியார் மருத்துவமனைகளில் முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின்கீழ் இலவசமாக சிகிச்சை பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x