Published : 11 Jul 2017 08:19 AM
Last Updated : 11 Jul 2017 08:19 AM

ஐஐடி மாணவர் சேர்க்கைக்கு தடையை நீக்கியது உச்ச நீதிமன்றம்

ஐஐடி மாணவர் சேர்க்கைக்கு விதிக்கப் பட்டிருந்த இடைக்காலத் தடையை உச்ச நீதிமன்றம் நேற்று நீக்கியது.

இந்திய தொழில்நுட்பக் கல்லூரிகளில் (ஐஐடி) பிஇ, பிடெக் மாணவர் சேர்க்கைக்காக ஜெஇஇ அட்வான்ஸ்டு என்ற அகில இந்திய அளவிலான நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. அந்த வகையில், நடப்பு கல்வி ஆண்டு (2017-2018) மாணவர் சேர்க்கைக்கான ஜெஇஇ அட்வான்ஸ்டு நுழைவுத்தேர்வை சென்னை ஐஐடி நடத்தி அதன் அடிப்படையில் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில், தேர்வில் தவறாக கேட்கப்பட்டிருந்த 2 கேள்விகளுக்கு கருணை மதிப்பெண் (கிரேஸ் மார்க்) வழங்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு, நீதிபதி தீபக் மிஸ்ரா, ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு கடந்த 7-ம் தேதி விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், கலந்தாய்வு நடத்தவும், மாணவர் சேர்க்கைக்கும் இடைக்காலத் தடை விதித்தனர். இந்த வழக்கு, உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை ஐஐடி சார்பில் ஆஜரான மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், “தேர்வெழுதிய 2 லட்சத்து 50 ஆயிரம் மாணவர்களின் விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்வது தற்போதைய சூழலில் இயலாத காரியம். இந்தி வழியிலான கேள்வித்தாள் தொகுப்பில் 10 கட்டுகளில் ஒரு கட்டில் 2 தவறான கேள்விகள் இடம்பெற்றிருந்தன. இந்தி வழியில் தேர்வெழுத விருப்பம் தெரிவித்த மாணவர்களைக் கண்டறிவது என்பது முடியாத செயல். இந்த இக்கட்டான சூழலில், ஒன்று தவறான கேள்விகளை நீக்கிவிடுவது அல்லது அந்த கேள்விகளுக்கு கருணை மதிப்பெண் வழங்குவது என்ற இந்த 2 வாய்ப்புகள் மட்டுமே இருந்தன. இதையெல்லாம் கருத்தில்கொண்டுதான், தவறான கேள்விகளுக்காக அனைத்து மாணவர்களுக்கும் ஒட்டுமொத்தமாக கருணை மதிப்பெண் அளிக்க முடிவுசெய்யப்பட்டது. ஏற்கெனவே கலந்தாய்வு மூலம் 33 ஆயிரம் மாணவர்கள் கல்லூரியைத் தேர்வுசெய்துவிட்டனர். புதிய தரவரிசைப்பட்டியல் வெளியிட்டால், ஒட்டுமொத்த மாணவர் சேர்க்கைப் பணிகளை புதிதாக மேற்கொள்ள வேண்டியிருக்கும்” என்றார்.

அவரது வாதத்தைத் தொடர்ந்து, தவறான கேள்விகளுக்காக அனைத்து மாணவர்களுக்கும் 18 கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட ஐஐடி-யின் முடிவை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மாணவர் சேர்க்கை மீதான இடைக் காலத் தடையை நீக்கி உத்தரவு பிறப்பித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x