Published : 16 Nov 2014 10:41 AM
Last Updated : 16 Nov 2014 10:41 AM

பெரம்பலூர் தனியார் மருத்துவக் கல்லூரியை இணையதளம் வாயிலாக ‘விற்க’ நூதன முயற்சி: சென்னையைச் சேர்ந்த 2 பேர் கைது

பெரம்பலூர் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை இணையதளம் வாயிலாக ‘விற்க’ முயன்றதாக சென்னையைச் சேர்ந்த 2 பேரை பெரம்பலூர் போலீஸார் கைது செய்தனர்.

தனலட்சுமி சீனிவாசன் குழுமம் என்ற பெயரில் பெரம்பலூர், திருச்சி, சென்னை, கோவை என தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் கல்வி மற்றும் இதர தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இக்குழுமத்தின் அங்கமாக பெரம்பலூரில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனை குறித்து இணையதளம் ஒன்றில் ‘ரூ.700 கோடிக்கு பெரம்பலூர் தனியார் மருத்துவக் கல்லூரி விற்பனைக்கு’ என்ற விளம்பரம் வெளியாகி இருந்ததாம்.

இதுதொடர்பாக பெரம்பலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாரிடம் கல்லூரி நிர்வாகத்தினர் புகார் அளித்ததோடு, தங்கள் பங்குக்கும் விசாரணையில் இறங்கினர். கல்லூரி தரப்பினர் 2 குழுவாகப் பிரிந்து மருத்துவக் கல்லூரியை வாங்க விரும்புவதாக ஒரு குழுவினரும், ‘ஏன் இப்படிச் செய்தீர்கள்?’ என்ற கேள்வியோடு கல்லூரி தரப்பில் இருந்து பேசுவதாக மற்றொரு குழுவினரும் விளம்பரம் வெளியிட்டவர்களுடன் தொடர்பு கொண்டனர்.

மருத்துவமனையை வாங்க விரும்புவதாக தொடர்பு கொண்ட குழுவினரிடம் உரிய ஆவண நகல்களைப் பார்வையிட முன்பணமாக சில கோடி ரூபாய் தரவேண்டும் எனவும், கல்லூரியின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விளம்பரத்தை அகற்றுமாறு கோரிய மற்றொரு குழுவினரிடம் அதற்கென சில கோடிகளைக் கேட்டும், இணைய தளத்தில் விளம்பரம் செய்த கதிர் என்ற கதிரவன், முருகன், பட்டாபிராமன் ஆகிய 3 பேர் செல்போனில் பேரம் பேசியுள்ளனர்.

இதற்கிடையே பெரம்பலூர் மாவட்ட போலீஸார், சைபர் க்ரைம் பிரிவு போலீஸார் உதவியுடன் இணைய தளத்தில் வெளியாகி இருந்த ‘பெரம்பலூர் கல்லூரி விற்பனைக்கு’ என்ற விளம்பரத்தை அகற்றச் செய்தனர். ஆனால், அதே கல்லூரி படம் மற்றும் விவரங்களுடன் திருச்சி மருத்துவக் கல்லூரி என்ற பெயரில் புதிய விளம்பரம் உடனடியாக இணைய தளத்தில் வெளியானது.

இந்நிலையில், மருத்துவக் கல் லூரியை வாங்குவதாக பேச்சுவார்த்தை நடத்தி வந்த குழுவினர், விளம்பரத்தை வெளியிட்ட 3 பேர் குழுவுடன் விழுப்புரத்தில் நேரடியாக சந்தித்து பேசுவது என முடிவானது. அதன்படி, உணவு விடுதி ஒன்றில் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்தபோது, அங்கே மறைந்திருந்த பெரம்பலூர் குற்றப்பிரிவு போலீஸார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த சென்னையைச் சேர்ந்த முருகன்(37), கதிரவன்(29) ஆகிய இருவரை கைது செய்தனர். போலீஸாரிடமிருந்து புதுச்சேரி பட்டாபிராமன் தப்பினார்.

9-ம் வகுப்பு படித்த மவுலிவாக்கம் முருகன், கம்ப்யூட்டர் முதுநிலை பட்டம் பெற்ற கதிரவனுடன் சேர்ந்து சிறிய அளவில் ரியல் எஸ்டேட் தொடர்பாக இணையதளங்களில் விளம்பரம் செய்து தரகு தொகை பெற்று வந்துள்ளனர். இருவரையும் தொடர்புகொண்ட பட்டாபிராமன், குறுகிய காலத்தில் கோடிகளை சம்பாதிக்கும் உத்தி என்று கூறி இதுபோல புதுச்சேரியில் செயல்படும் ஒரு தனியார் மருத்துவக் கல்லூரி மற்றும் ஹோட்டல் தொடர்பாக விற்பனைக்கு விளம்பரங்களை வெளியிடச் செய்திருக்கிறார். வாங்க விரும்புவதாக பேசுவோரிடம் முன்பணம் என்ற பெயரிலும், தங்கள் நிறுவனம் பெயரை நீக்குமாறு அணுகுபவரிடம் அதற்கு விலையாக ஒரு தொகையையும் மிரட்டிப் பெற்றுள்ளது போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த மோசடியில் மூளையாகச் செயல்பட்ட பட்டாபிராமன் சிக்கினால் மேலும் பல புதிய விவரங்கள் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட கதிரவன், முருகன் ஆகியோர் நேற்று பெரம்பலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x