Published : 19 Jul 2017 09:07 AM
Last Updated : 19 Jul 2017 09:07 AM

நீட் தேர்வுக்கு யார் காரணம்: பேரவையில் அமைச்சர்களுடன் கடும் வாக்குவாதம் - திமுக, காங்கிரஸ், முஸ்லிம் லீக் வெளிநடப்பு

நீட் தேர்வுக்கு யார் காரணம் என்பது தொடர்பாக அமைச்சர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்தப் பிரச்சினையில் அமைச்சரின் பதில் திருப்தி அளிக்கவில்லை எனக் கூறி திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் நீட் தேர்வு தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்தார். அதன்மீது நடந்த விவாதம் வருமாறு:

மு.க.ஸ்டாலின்:

நீட் தேர்வால் ஏழை, எளிய கிராமப்புற மாணவர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். தமிழகத்தில் சுமார் 88,400 பேர் நீட் தேர்வு எழுதியுள்ளனர். அதில் 4,600 பேர் மட்டுமே சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்தவர்கள். எனவே, மாநிலப் பாடத் திட்டத்தில் படித்தவர்களையும் சிபிஎஸ்இ மாணவர்களையும் ஒரே தட்டில் வைத்து பார்க்க முடியாது.

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வகை செய்யும் 2 சட்ட மசோதாக்கள் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால், அவற்றை குடியரசுத் தலைவருக்கு மத்திய அரசு அனுப்பவே இல்லை. மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க, குடியரசுத் தலைவர் தேர்தலை அதிமுக அரசு ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி இருக்கலாம். நீட் தேர்வு பிரச்சினையில் மத்திய, மாநில அரசுகள் தமிழக மாணவர்களுக்கு மன்னிக்க முடியாத துரோகத்தை செய்துள்ளன. குடியரசு துணைத் தலைவர் தேர்தலை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தியாவது மத்திய அரசுக்கு முழுமையான அழுத்தம் கொடுக்க வேண்டும்.

அமைச்சர் சி.விஜயபாஸ்கர்:

அனைத்து மாநிலங்களும் நீட் தேர்வை ஏற்றுக்கொண்ட நிலையில் தமிழகம் மட்டுமே அதை கடுமையாக எதிர்த்து அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் போராடி வருகிறது. கடந்த 2010-ல் திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில்தான் நீட் தேர்வு முறை கொண்டுவரப்பட்டது. நீட் தேர்வு கட்டாயம் என்ற நிலை ஏற்பட்டதும் அதிலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரி சட்டப்பேரவையில் 2 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டன. அவற்றுக்கு ஒப்புதல் பெறுவதற்காக மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மாநில பாடத் திட்ட மாணவர்களுக்கு 85 சதவீதமும், சிபிஎஸ்இ உள்ளிட்ட இதர பாடத் திட்ட மாணவர்களுக்கு 15 சதவீதமும் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதை எதிர்த்து உயர் நீதிமன்ற அமர்வில் தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ளது.

நீட் தேர்வு பிரச்சினையில் 2010-ல் இருந்த திமுக அரசு தும்பை விட்டுவிட்டது. இதனால் தற்போது அதிமுக அரசு வாலை பிடித்து ஒற்றைக் காலில் இழுத்துக் கொண்டிருக்கிறது. நாளை (ஜூலை 19) சட்டப்பேரவைக் கூட்டம் முடிந்ததும் டெல்லி சென்று மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க இருக்கிறோம்.

மு.க.ஸ்டாலின்:

2010-ல் நீட் தேர்வு முறை கொண்டு வரப்பட்டபோது அதை திமுக கடுமையாக எதிர்த்தது. இது தொடர்பாக அன்றைய மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத்துக்கு திமுக தலைவர் கருணாநிதி கடிதம் எழுதினார். நீட் தேர்வுக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக தடையாணை பெற்றது. தமிழகத்தில் திமுக ஆட்சியில் இருக்கும் வரையிலும், மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியிலும் இருக்கும் வரையிலும் நீட் தேர்வு நடக்கவில்லை. நீட் தேர்வு விவகாரத்தில் நீதிமன்றங்களை நம்ப முடியாது. எனவே, நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

அமைச்சர் விஜயபாஸ்கர்:

திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில்தான் நீட் தேர்வு முறை கொண்டு வரப்பட்டது. நீட் தேர்வை எதிர்த்து நீதிமன்றங்களில் அரசு போராடிக் கொண்டிருக்கிறது. ஆனால், சிபிஎஸ்இ மாணவர்களுக்காக முன்னாள் மத்திய அமைச்சரின் மனைவி வாதாடிக் கொண்டிருக்கிறார்.

எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன்:

ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு அனுமதி பெற்றதைப்போல நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் சட்டத்துக்கு அனுமதி பெறாதது ஏன்? இதற்கு பொறுப்பேற்று சுகாதாரத் துறை அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும். தமிழக அரசும் பதவி விலக வேண்டும்.

அமைச்சர் கே.ஏ.செங்கோட் டையன்:

இப்போது தமிழக அரசு பதவி விலக வேண்டும் என்கிறீர்கள். 2010-ல் நீட் தேர்வு முறையை கொண்டுவந்தபோது மத்திய அரசில் இருந்து திமுக ராஜினாமா செய்யாதது ஏன்?

அமைச்சர் சி.வி.சண்முகம்:

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் வாஜ்பாய் அரசுக்கு கொடுத்து வந்த ஆதரவை திரும்பப் பெற்றவர் ஜெயலலிதா. ஆனால், 2010-ல் நீட் தேர்வை எதிர்த்து மத்திய அரசில் இருந்து திமுக விலகவில்லை. எனவே, இப்போது தமிழக அரசு பதவி விலகுமாறு கேட்பதில் எந்த நியாயமும் இல்லை.

மு.க.ஸ்டாலின்:

நீட் தேர்வு விவகாரத்தில் அமைச்சரின் பதில் திருப்தி அளிக்கவில்லை. எனவே, வெளிநடப்பு செய்கிறோம்.

இவ்வாறு ஸ்டாலின் கூறியதைத் தொடர்ந்து அவர் தலைமையில் திமுக உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளியேறினர். அவர்களைத் தொடர்ந்து காங்கிரஸ், முஸ்லிம் லீக் உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர். சிறிது நேரத்தில் அவர்கள் அனைவரும் பேரவைக்கு திரும்பி அவை நடவடிக்கைகளில் பங்கேற் றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x