Published : 21 Jul 2017 05:52 PM
Last Updated : 21 Jul 2017 05:52 PM

குட்கா ஊழல் புகார் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: ஸ்டாலின்

குட்கா ஊழல் புகார் பற்றியும், அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள அதிகாரிக்கு டிஜிபி பதவி உயர்வு வழங்கியதில் உள்ள முறைகேடுகள் குறித்தும் உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், '' தமிழக டிஜிபியாக டி.கே. ராஜேந்திரன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் 'குட்கா ஊழல்' குறித்து வருமான வரித்துறை எழுதிய கடிதத்தையும், அறிக்கையையும் 36 வருடங்கள் தமிழக அரசு நிர்வாகத்தில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி நேர்மையான அதிகாரி என்று பெயரெடுத்த தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உயர் நீதிமன்றத்தில் மறைத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

'தி இந்து' ஆங்கிலப் பத்திரிக்கையில் இன்று வெளியிடப்பட்டிருக்கும் கட்டுரையில், 12.8.2016 அன்று வருமான வரித்துறையின் புலனாய்வு துறை முதன்மை இயக்குநர் பி.ஆர். பாலகிருஷ்ணன் அன்று இருந்த தலைமைச் செயலாளர் பி. ராம மோகனராவை சந்தித்து 11.8.2016 தேதியிட்ட குட்கா தொடர்பான அறிக்கையை நேரடியாக கொடுத்தார் என்றும், அப்போது தமிழக காவல்துறை தலைவராக இருந்த அசோக்குமாரிடமும் அறிக்கையின் நகலைக் கொடுத்தார் என்றும் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் விட்டுவிடாமல் மறுநாள்- அதாவது 12.8.2016 அன்று வருமான வரித்துறை முதன்மை இயக்குநர், 'குட்கா அறிக்கையில் கூறப்பட்டுள்ள 39.91 கோடி ரூபாய் மாமூல் குறித்து விசாரியுங்கள்' என்று தலைமை செயலாளருக்கு கடிதம் எழுதி, அந்த கடிதத்திற்கான ஒப்புகையை தலைமைச் செயலாளர் அலுவலத்தில் உள்ள மூத்த உதவி நிர்வாக அலுவலர் டி.பாபுவிடம் 16.8.2016 அன்று பெற்றுள்ளார் என்றும் அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அது மட்டுமின்றி, லஞ்ச ஊழல் ஒழிப்புத்துறை இயக்குநராக இருக்கும் மஞ்சுநாத் குட்கா டைரி தொடர்பான விவரங்களை வருமான வரித்துறையிடம் கேட்டு கடிதம் எழுதியதற்கும், 'குட்கா தொடர்பான விவரமான அறிக்கை உங்கள் தலைமைச் செயலாளரிடமும், டிஜிபியிடமும் ஏற்கெனவே கொடுக்கப்பட்டுள்ளது' என்று வருமான வரித்துறை முதன்மை இயக்குநர் பாலகிருஷ்ணன் பதில் எழுதியிருக்கிறார் என்பதையும் தெளிவாகக் கோடிட்டு காட்டியிருக்கிறது.

குட்கா ஊழல் தொடர்பான வருமான வரித்துறையின் அறிக்கை தலைமைச் செயலாளரிடம் கொடுக்கப்பட்டுவிட்டது என்று இவ்வளவு ஆதாரங்கள் இருந்தும், டிஜிபி ராஜேந்திரன் நியமனம் தொடர்பான வழக்கில் தலைமைச் செயலாளர் இப்படியொரு நிலைப்பாட்டை உயர் நீதிமன்றத்தில் எடுத்திருப்பது மிகவும் வேதனையளிக்கிறது. குறிப்பிட்ட தேதியிட்ட கடிதம் பற்றி மட்டும் கூறியிருக்கும் தலைமை செயலாளர் தன்னிடம் உள்ள குட்கா ஊழல் பற்றிய வருமான வரித்துறையின் அறிக்கையை மறைத்திருப்பது தமிழக ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு எல்லாம் தலைவராக இருக்கும் தலைமைச் செயலாளருக்கு உகந்த செயல்தானா என்று கேள்வி எழுப்ப விரும்புகிறேன்.

டிஜிபியை நியமிக்க 'பதவி உயர்வு பட்டியல்' தயாரிக்கும் பணி, அப்பதவி உயர்வு கோப்புடன் இணைக்க வேண்டிய படிவங்களில் 'விஜிலென்ஸ் விசாரணை நடக்கிறதா அல்லது ஏதேனும் விசாரணை நிலுவையில் இருக்கிறதா' என்ற விவரங்களை தெரிவிக்க வேண்டிய பொறுப்பு அனைத்தும் தலைமைச் செயலாளருக்கு இருக்கிறது. பதவி உயர்வு பட்டியலில் உள்ள அதிகாரி மீது துறை ரீதியாகவோ, விஜிலென்ஸ் ரீதியாகவோ விசாரணை ஏதுமில்லை என்று 'தடையில்லா சான்றிதழ்' வழங்க வேண்டிய கடமை லஞ்ச ஊழல் ஒழிப்புத் துறைக்கு இருக்கிறது.

இவ்வளவு விதிமுறைகள் இருந்தும், குட்கா விசாரணையை எதிர்கொள்ள வேண்டிய போலீஸ் அதிகாரிக்கு எப்படி டிஜிபி பதவி உயர்வு அளிக்க தலைமை செயலாளர் ஒப்புக் கொண்டார் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது. ஓய்வு பெற்ற பிறகு இரு வருடங்கள் பணி நீட்டிப்பு என்பதை ஒப்புக்கொள்ள மாட்டோம் என்று உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ள மத்திய அரசும், யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனும் ஓய்வு பெறும் தினத்தில் எப்படி இரு வருட நியமனத்திற்கு ஒப்புக்கொண்டது என்பதும் 'மர்மமாகவே' இருக்கிறது.

இந்நிலையில் உயர் நீதிமன்றத்தில் தலைமைச் செயலாளர் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் குட்கா விவகாரம் அடியோடு மூடி மறைக்கப்பட்டுள்ளது கடும் கண்டனத்திற்குரியது. குட்கா விசாரணையை லஞ்ச ஒழிப்புத்துறை மேற்கொண்டு வருகிறது என்று சட்டப்பேரவையில் முதல்வர் தெரிவித்த பிறகு, தலைமைச் செயலாளர் எப்படி உயர் நீதிமன்றத்தில் இப்படியொரு பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தார்?

நீதி பரிபாலனத்தை தடுக்கும் முயற்சியில் ஏன் தலைமைச் செயலாளரை இந்த குதிரை பேர அரசு ஈடுபட வைக்கிறது? டிஜிபி பதவி வழங்கியதில் 'அகில இந்திய போலீஸ் சர்வீஸ் விதிகளையும்', 'தமிழக அரசின் விஜிலென்ஸ் விதிகளையும்' குதிரை பேர அரசு முற்றிலும் மீறியதை மறைக்கும் விதமாகவே இந்த பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று கருதுகிறேன்.

ஆகவே குட்கா ஊழல் விசாரணையை லஞ்ச ஊழல் ஒழிப்புத்துறையால் சுதந்திரமாக செய்ய முடியாது என்பதற்கு தலைமைச் செயலாளரின் பிரமாண பத்திரமே வாக்குமூலமாக இருக்கிறது. குட்கா ஊழல் புகார் பற்றியும், அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள அதிகாரிக்கு டிஜிபி பதவி உயர்வு வழங்கியதில் உள்ள முறைகேடுகள் குறித்தும் உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

அப்படியொரு விசாரணை மட்டுமே தடை செய்யப்பட்ட குட்காவை விற்க அனுமதிப்பதற்கு 40 கோடி ரூபாய் லஞ்சம் பெற்று மத்திய அரசுக்கு 250 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு முறைகேடுகள் குறித்த முழு உண்மைகளும் வெளிச்சத்திற்கு வரும்'' என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x