Last Updated : 19 Jul, 2017 08:55 AM

 

Published : 19 Jul 2017 08:55 AM
Last Updated : 19 Jul 2017 08:55 AM

பொதுமக்களுக்காக உயிரைக் கொடுத்து பணிபுரிந்தும் அடிப்படை உரிமைகள்கூட கிடைக்காத தீயணைப்பு வீரர்கள்: ஒரே ஒரு பதவி உயர்வுக்கு 27 ஆண்டுகள் காத்திருப்பு

உயிரைக் கொடுத்து பணிபுரிந் தாலும் எங்களுக்கான அடிப்படை உரிமைகளை கொடுப்பதற்குகூட தமிழக அரசுக்கு விருப்பம் இல்லை என்று தீயணைப்பு வீரர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

சென்னை கொடுங்கையூரில் உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏகராஜ்(54) என்ற தீயணைப்பு வீரர் உயிரிழந்தார். அவரது இறுதி ஊர்வலத்தின்போது, ‘27 ஆண்டுகள் பணிபுரிந்தும் பதவி உயர்வே இல்லாமல் உயிரி ழந்த வீரனே’ என்று சக தீயணைப்பு வீரர்கள் கண்ணீர் அஞ்சலி பலகையை வைத்திருந்தனர். தீயணைப்பு துறையில் பணிபுரிபவர்களின் அவலநிலையை இந்த கண்ணீர் அஞ்சலி வாசகம் பலருக்கு உணர்த்தியது.

இதுகுறித்து அவர்களிடம் கேட்டபோது, "தீயணைப்பு வீரனாக பணியில் சேரும் ஒருவருக்கு 10 ஆண்டுகள் பணி முடிந்த பின்னர் முதல் நிலை தீயணைப்பு வீரர் என்ற பதவி உயர்வும், அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளில் நிலைய அதிகாரி என்ற பதவி உயர்வும் கொடுக்க வேண்டும். ஆனால் கடந்த 27 ஆண்டுகள் பணிபுரிந்தும் இதுவரை எங்களுக்கான அடிப் படை உரிமையை கூட கொடுப்ப தற்கு அரசுக்கு விருப்பமில்லை.

போலீஸ் வேலையில் சேருபவர்களுக்கான அனைத்து தகுதிகளையும் எங்களுக்கும் வைத்து தேர்வு செய்வார்கள். ஆனால் சம்பளம் மட்டும் குறைவாக வழங்குவார்கள். ஒரே ஒரு பதவி உயர்வு வழங்கினால் ஆயிரம் ரூபாய் முதல் ஆயிரத்து 500 ரூபாய் வரை கூடுதலாக கிடைக்கும். இதைக்கூட கொடுப்பதற்கு அரசுக்கு விருப்பம் இல்லை. சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் அடிமட்ட வேலையாக தீயணைப்பு துறை இருக்கிறது.

முதல்வர் ஜெயலலிதா இருந்த போது, போலீஸாரின் கேண்டீனை தீயணைப்பு துறையினரும் பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளித்ததால், இன்றைய காலத்தில் எங்களது குடும்பத்தை நடத்த முடிகிறது. காவல் துறையினருக்கு போதுமான குடியிருப்பு உள்ளது. ஆனால், தீயணைப்பு துறைக்கு குடியிருப்பு ஒதுக்குவதிலும் பாரபட்சம் உள்ளது.

10 ஆண்டுகள் தீயணைப் பாளராக பணி புரிந்தால், ஆயிரத்து 900 ரூபாயில் இருந்து, 2 ஆயிரத்து 400 ரூபாய் தர ஊதியமாக தர வேண்டும். 15 ஆண்டுகள் பணியாற்றினால் 2 ஆயிரத்து 800 ஆகவும், 25 ஆண்டுகள் பணியாற்றினால் 4 ஆயிரத்து 200 ரூபாயாகவும் வழங்க வேண்டும். ஆனால் கடந்த பல ஆண்டுகளாக எந்தவித தர ஊதியமும், பதவி உயர்வும் வழங்கப்படவில்லை. பலர் பதவி உயர்வு கிடைக்காமலேயே பணி ஓய்வு பெற்றுவிட்டனர். சிலர் இறந்தும் விட்டனர்.

ஆபத்துக் காலங்களிலும், இயற்கை பேரிடர் காலங்களிலும் நாங்கள் உயிரைக் கொடுத்து பணிபுரிகிறோம். ஆனால், அதற்கான பலனை அரசு கொடுக்க மறுக்கிறது. தமிழகம் முழுவதும் 315 தீயணைப்பு நிலையங்கள் உள்ளன. ஒரு தீயணைப்பு வாகனத்துக்கு 15 வீரர்கள் பணியில் இருக்க வேண்டும் என்பது விதி. ஆனால் 7 வீரர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். ஆட்கள் பற்றாக்குறையால் ஏற்படும் கூடுதல் பணிச்சுமையையும் நாங்கள்தான் சமாளிக்கிறோம்.

முதல்வரின் துறையாக தீயணைப்பு துறை இருந்தபோதும், ஒரு தீயணைப்பு வீரனின் நியாயமான கோரிக்கைக்குகூட அரசு செவி சாய்க்காமல் இருப்பது வருத்தமளிக்கிறது" என்றனர்.

சட்டப்பேரவை கூட்டத்தில் கடந்த 22-ம் தேதி பேசிய மயிலாப்பூர் தொகுதி எம்எல்ஏ ஆர்.நடராஜ், தீயணைப்பு வீரர்களுக்கு பதவி உயர்வு அளிப்பது குறித்து பேசினார். தீயணைப்பு துறை இயக்குநராக ஆர்.நட்ராஜ் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x