Published : 23 Jul 2017 11:29 AM
Last Updated : 23 Jul 2017 11:29 AM

விவசாயம் செழிக்க வேண்டி ஆயிரக்கணக்கான மாட்டு வண்டிகளில் திரண்ட விவசாயிகள்

திருப்பூர் மாவட்டம், உடுமலையில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் நடுவே திருமூர்த்திமலை அமைந்துள்ளது. முன்பு சமணர்கள் வாழ்ந்த இடமாக இருந்து பின்னாளில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய தெய்வ வழிபாடு அங்கு நடைபெற்று வருகிறது.

ஆண்டுதோறும் மகா சிவராத்திரி, ஆடி, தை அமாவாசை நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடை பெறுவது வழக்கம். ஆடி அமாவாசை தினத்தில், முன்னோர் வழிபாடு இக்கோயிலில் மிகவும் பிரபலம் என்பதால் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இருந்து கலந்து கொண்டு வழிபடுவர்.

அதிலும் குறிப்பாக 200-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் உழவுக்கு உதவும் கால்நடைகளுட னும், மாட்டு வண்டிகளிலும் வந்து வழிபாடு மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த ஆண்டுக்கான ஆடி அமாவாசை வழிபாட்டில் பங்கேற்பதற்காக நேற்றே பல்வேறு ஊர்களில் இருந்து விவசாயிகள் ஏராளமான மாட்டு வண்டிகளில் திரண்டுள்ளனர்.

இது குறித்து விவசாயி ஒருவர் கூறும்போது, ‘திருமூர்த்திமலையில் ஆடி அமாவாசையில் முன்னோர் களை நினைத்து வழிபாடு செய்து விட்டு, கோயிலில் வழங்கப்படும் தீர்த்தத்தை மாடுகளுக்கு தெளிப்போம். பின் அதே தீர்த்தத்தை விவசாய நிலங்களிலும் தெளித்து ஆடி பட்டத்துக்கான உழவுப் பணியை மேற்கொள்வோம். இதனால் தேவையான மழை பெய்து, கால்நடைகளின் நோய்நொடி நீங்கி, விவசாயம் செழிக்கும் என்பது எங்கள் நம்பிக்கை’ என்றார்.

கோயில் நிர்வாகிகள் கூறும் போது, ‘முன்னோர் வழிபாட்டுக்கு இத்தலம் புகழ்பெற்றது. ஆடி அமாவாசை வழிபாட்டில் பங்கேற்க சுமார் 50,000 பேர் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று காலை 5 மணிக்கே நடை திறந்து சிறப்பு வழிபாடு நடைபெறும். இரவு வரை நடை திறந்திருக்கும்.

மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மழைப் பொழிவு இல்லாததால் திருமூர்த்தி மலையில் உள்ள பஞ்சலிங்க அருவி வறண்டு காணப்படுகிறது. குடிப்பதற்குக்கூட போதிய தண்ணீர் இல்லாததால் ஆழ்குழாய் நீரையே பயன்படுத்தும் சூழல் உள்ளது’ என்றனர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x