Published : 12 Jul 2017 07:21 PM
Last Updated : 12 Jul 2017 07:21 PM

அமர்நாத் யாத்ரிகர்கள் மீது பயங்கரவாத தாக்குதல்: திருமாவளவன் கண்டனம்

அமர்நாத் யாத்ரிகர்கள் மீது பயங்கரவாத அமைப்பினர் தொடுத்த தாக்குதலுக்கு விசிக தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''இமயமலையில் உள்ள பனிலிங்கத்தை வழிபடுவதற்காக ஆண்டுதோறும் அமர்நாத்துக்கு இந்து பக்தர்கள் பயணம் செல்வது வழக்கம். அவ்வாறு வழிபட சென்ற பக்தர்கள் மீது பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாத அமைப்பினர் தாக்குதல் தொடுத்துள்ளனர். அதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 7 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையில் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் பக்தர்கள் பலியாகிவிட்டதாக சொல்லப்படுகிறது. பனிலிங்கத்தை வழிபடச் சென்ற அப்பாவி பக்தர்கள் மீது நடத்தப்பட்டுள்ள இந்த பயங்கரவாத தாக்குதலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். அப்பாவி மக்களை படுகொலை செய்த பயங்கரவாதிகளைக் கண்டுபிடித்துக் கடுமையான தண்டனை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்றுவரும் பாஜக கூட்டணி ஆட்சி அந்த மக்களுக்கு பாதுகாப்பையும் அளிக்கவில்லை. அது பதவியேற்றதிலிருந்தே காஷ்மீர் மாநிலத்தில் அமைதி வாழ்க்கை முற்றாக சீர்குலைந்துவிட்டது. ராணுவ துருப்புகள் அளவுக்கதிகமாக குவிக்கப்பட்டுள்ளன. அப்படியிருந்தும் இந்த பயங்கரவாத தாக்குதல் நடந்துள்ளது. இதற்கு காஷ்மீர் மாநில அரசு பொறுப்பேற்க வேண்டும்.

மதத்தின் பெயரால் மக்களின் அமைதியை சீர்குலைக்கும், வன்முறையில் ஈடுபடும் அனைத்து விதமான பயங்கரவாதிகளையும் சட்டத்தின் துணையோடு ஒடுக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது. பொதுவாக, மத அடிப்படைவாதம் பொதுமக்களின் அமைதியான வாழ்க்கைக்கு எதிராகவே உள்ளது. அந்தவகையில், மதவாதிகள் ஒருவரைஒருவர் ஊட்டி வளர்க்கிறார்கள் என்பதற்கு இந்த பயங்கரவாத தாக்குதலும் சான்றாக இருக்கிறது.

பயங்கரவாதிகளின் இந்த கொடூரத் தாக்குதலில் பலியான அமர்நாத் பயணிகளுக்கு எமது அஞ்சலியை தெரிவித்துகொள்கிறோம். அவர்களை இழந்துவாடும் அவர்களது குடும்பத்தினருக்கு எமது இரங்கலை தெரிவித்துகொள்கிறோம்.

ஜனநாயக நாட்டில் பயங்கரவாதம் தலையெடுக்க அனுமதிக்கக் கூடாது. அதைத் தடுத்திட அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒருங்கிணைய முன்வரவேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறோம்'' என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x