Published : 16 Jul 2017 03:19 PM
Last Updated : 16 Jul 2017 03:19 PM

நீட் விலக்கு மசோதாவை ஏற்கச் செய்ய வேண்டும்; ஏற்காவிடில் நாமே நீட்டை விலக்கிட வேண்டும்: வேல்முருகன்

மத்திய அரசை உடனடியாக நீட்-விலக்கு மசோதாவை ஏற்கச் செய்ய வேண்டும்; ஏற்காவிடில் நாமே நீட்டை விலக்கிவிட வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் பண்ருட்டி தி வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "மாநில உரிமைப் பறிப்பு மற்றும் மருத்துவக் கல்வி மறுப்பு. இதுதான் மத்திய அரசு கொண்டுவந்த நீட்டின் உள்நோக்கம். இந்த உள்நோக்கம் நிரூபிக்கப்பட்டுவிட்டது.

அதாவது நீட் அடிப்படையில் 98 விழுக்காடு தமிழ்நாடு அரசுப் பாடத்திட்ட மாணவர்களுக்கு வெறும் 5 விழுக்காடு மருத்துவப் படிப்பு இடங்களே கிடைக்கும்; அதே நேரம் 1.6 விழுக்காடு மத்திய அரசுப் பாடத்திட்ட மாணவர்களுக்கே மீதி 95 விழுக்காடு இடங்களும்.இந்த உள்நோக்கத்திற்கே வலுசேர்த்தது உயர் நீதிமன்றத் தீர்ப்பு. இதனை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்கிறது.

அங்கேயும் "85 : 15" என்ற இட ஒதுக்கீடு ஏற்கப்படும் என்பதற்கு என்ன உத்தரவாதம்? இதை எண்ணிப் பார்த்ததா தமிழக அரசு?

உச்ச நீதிமன்றத்திலும் "85 : 15"க்கு இசைவாக தீர்ப்பு வராவிட்டால் பிறகு என்ன செய்யும்?

பிறகு ஏன், இப்போதே, உடனடியாகவே தமிழக அரசு செய்ய வேண்டியது இதுதான்:

அதாவது, மத்திய அரசை உடனடியாக நீட்-விலக்கு மசோதாவை ஏற்கச் செய்ய வேண்டும்; ஏற்காவிடில் நாமே நீட்டை விலக்கிவிட வேண்டும்! அரசியலமைப்புச் சட்டத்தின்படி நீட்-விலக்கு மசோதாவை மத்திய அரசு ஏற்றுத்தான் ஆகவேண்டும்; அதுதான் நியதி! அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமாகவே மாநிலப்பட்டியலில் இருந்த கல்வி பிடுங்கப்பட்டு பொதுப்பட்டியலில் இருக்கிறது.

பொது என்பதன் பொருள் என்ன? அதில் தமிழகத்தின் உரிமை எப்படி இல்லாமல் போகும்?

எனவே தமிழக அரசு உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்; அதில் எட்டப்படும் ஒருமித்த கருத்துடன் தமிழக எம்.பிக்கள் அனைவரும் சேர்ந்து மோடியிடம் போய் நீட்-விலக்கு மசோதாவை ஏற்கச் செய்ய வேண்டும்.

அவர் மறுப்பாரானால், தமிழக அமைச்சரவை கூடி நீட்டை விலக்குவதுடன், தமிழக அரசு மருத்துவக் கல்லூரி இடங்கள் அனைத்தையும் தமிழ்நாடு அரசுப் பாடத்திட்ட மாணவர்களுக்கே ஒதுக்கி ஆணை பிறப்பிக்க வேண்டும்.

எய்ம்ஸ், ஜிப்மர், வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி போன்றவற்றில் நீட்டுக்கு வேலையில்லை என்பதை தமிழக அரசு எண்ணிப்பார்க்க வேண்டும். மாநில உரிமைப்படி, தமிழக அரசின் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை தமிழக அரசுதான் முடிவு செய்ய வேண்டும். இதைச் செய்யாத அரசு எப்படி தமிழக மக்களின் அரசாக இருக்க முடியும்? இதையும்தான் தமிழக அரசு எண்ணிப்பார்க்க வேண்டும். எனவே நீட்-விலக்கு மசோதாவை மத்திய அரசை ஏற்கச் செய்தாக வேண்டும்; அது ஏற்காது போனால் நாமாகவே நீட்டை விலக்கிவிட வேண்டும்.

இதனைச் செய்து நம் மாணவர்களின் கல்வி உரிமையை நிலைநாட்டுமாறு தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி" எனக் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x