Published : 25 Jul 2017 07:25 PM
Last Updated : 25 Jul 2017 07:25 PM

நீட் விவகாரத்தில் தற்காலிகத் தீர்வுக்கு தமிழக அரசு முயற்சிக்கக் கூடாது: ஸ்டாலின்

நீட் தேர்வு விவகாரத்தில் தற்காலிக தீர்வு காண்பதற்கு மட்டுமே அடிபணிந்து மாநில உரிமைகளை முழுவதுமாக அடகு வைக்க எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு நிச்சயம் முயற்சிக்கக் கூடாது என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''திமுக முன்னெடுப்பில் தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகள், சமுதாய இயக்கங்கள், மாணவர் சமூகம் ஆகியன நீட் எனும் அநீதிக்கு எதிராகத் தொடர்ந்து தங்களது கொந்தளிப்பை வெளிப்படுத்தி வருகின்றன. இதை உணர்ந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு தற்போது கடைசி நேரத்தில் விழித்துக் கொண்டு எதையாவது செய்து நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு முயற்சிக்கிறது.

தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களை நமது மாநிலத்தின் நிதி ஆதாரத்தில் நடத்தும் மருத்துவ, பல் மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்க மத்திய அரசு ஏன் தேர்வு நடத்த வேண்டும்? இதுதான் நாம் எழுப்பும் அடிப்படைக் கேள்வி?. மாநில உரிமைப் பறிப்புக்கு எதிராகக் கொந்தளித்து எழ வேண்டிய அரசு, டெல்லி ஆட்சியாளர்களிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறது. நெருக்கடியில் இருந்து தப்பித்துக் கொள்ளும் இதுபோன்ற தந்திரங்களைக் கைவிட்டு, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாக்க உரத்துக் குரல் கொடுக்க வேண்டும்.

இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு மட்டும் தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கலாம் என்ற பாஜகவின் கருத்து ஏற்கத்தக்கது அல்ல. நீட் தேர்வே கூடாது என்பதுதான் எங்கள் உறுதியான நிலைப்பாடு. நீட்டைத் திணிக்காதீர்கள் என்று நாம் கேட்பது நம் மாநில உரிமை. நுழைவுத் தேர்வுகள் ஏழை, ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு பாதகமானவை என்ற கோணத்தில், சமூக நீதி மற்றும் மாநில உரிமை என்ற இரு ஜீவாதார அடிப்படையில்தான் திமுக நீட் தேர்வை தொடர்ந்து எதிர்த்து வருகிறது.

எனவே, தற்காலிக தீர்வு காண்பதற்கு மட்டுமே அடிபணிந்து மாநில உரிமைகளை முழுவதுமாக அடகு வைக்க எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு நிச்சயம் முயற்சிக்கக் கூடாது. அப்படிச் செய்வது, தமிழ்நாடு மாணவர்களுக்கு செய்கிற நிரந்தர துரோகமாக அமைந்துவிடும். சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றிய சட்ட மசோதாக்களை நீர்த்துப் போகச் செய்து, சமூக நீதிக்கு சவக்குழி தோண்டுவதாக ஆகிவிடும்.

தமிழ்நாட்டின் கல்வித்தரம் குறைபாடு கொண்டது என்று சொத்தை வாதத்தை முன்வைத்து தமிழக மாணவர்களின் அறிவுத்திறனை கொச்சைப்படுத்தும் போக்கை பாஜகவினர் நிறுத்திக் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டின் மருத்துவக் கல்வி முறையைப் பாதுகாக்கவும், சமூக நீதி பறிபோகும் ஆபத்தை முறியடிக்கவும், ஏழை, எளிய ஒடுக்கப்பட்ட மாணவர்களின் எதிர்காலக் கனவு சிதைந்து போகாமல் தடுக்கவும் எல்லோரும் ஓர் அணியில் திரள வேண்டும்.

ஜனநாயகம், சமூக நீதியில் நம்பிக்கை கொண்டவர்கள், மாநில உரிமைகளைப் பாதுகாக்கும் எண்ணம் கொண்டோர் என அனைவரையும் கட்சி பேதமின்றி, நீட் எதிர்ப்பு முழக்கமிட அழைக்கிறேன். திமுக அறைகூவல் விடுத்து, ஜூலை 27 நடைபெறும் மனித சங்கிலி போராட்டத்தில் கரம் கோர்த்து, உரிமை முழக்கமிட வாருங்கள். தமிழ்நாட்டில் நாம் கோர்க்கும் கரங்களும், விண்ணதிர ஒலிக்கும் முழக்கங்களும் நீட் எனும் வல்லாதிக்கத்தை முறியடிக்கும்'' என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x