Published : 27 Jul 2017 12:09 PM
Last Updated : 27 Jul 2017 12:09 PM

சேலம் கட்சராயன் ஏரியைப் பார்வையிடச் சென்ற ஸ்டாலின் கோவையில் கைது

சேலம் எருமைப்பட்டியில் திமுகவினர் தூர்வாரிய கட்சராயன் ஏரியைப் பார்வையிடச் சென்ற ஸ்டாலின் கோவையில் கைது செய்யப்பட்டார்.

அவர் கோயம்புத்தூர், கணியூர் சுங்க சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டு காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''மனித சங்கிலிக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏரியைப் பார்வையிடத் தடை இல்லை. ஆனால் என்னைத் தடுத்து நிறுத்துகின்றனர். அரசியல் நோக்கமின்றி மக்களுக்காகத்தான் திமுக ஏரியைத் தூர் வாரியது. அதை நிச்சயம் பார்வையிடச் செல்வேன்'' என்றார்.

மேலும், ''சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் எருமைப்பட்டியில் உள்ள கட்சராயன் ஏரியை திமுக வினரும் பொதுமக்களும் இணைந்து தூர்வாரி, கரைகளை செம்மைப்படுத்தி உள்ளனர். சுமார் ஏழரை ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி தற்போது புதுப் பொலிவுடன் காட்சியளிக்கிறது. இன்று (ஜூலை 27) இந்த ஏரியை நான் பார்வையிடுவதாக இருந்தேன்.

இந்நிலையில், அந்த ஏரிக்குள் நுழைந்த அதிமுகவினர் கரைகளை உடைத்து, சேதப்படுத்தி சட்ட விரோதமாக மண் அள்ளிச் சென்றுள்ளனர். முதல்வர் பழனிசாமியின் தொகுதியிலேயே இது போல நடந்திருப்பது கண்டனத்துக்குரியது. இந்த அராஜகத்தை காவல் துறையும், மாவட்ட நிர்வாகமும் வேடிக்கை பார்த்ததால் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் அமைதிப் பேச்சு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதிமுகவினர் மணல் அள்ளுவதும் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், அமைதிப் பேச்சு திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. அதிமுகவினர் மணல் அள்ளுவதை காவல்துறை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்த அராஜகத்தை எதிர்த்து சேலம் மாவட்ட திமுகவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அராஜகம் செய்பவர்களை கண்டுகொள்ளாத காவல் துறை, போராடும் திமுகவினரை கைது செய்து வருகிறது.

முதல்வர் தொகுதியில் எப்படி ஏரியைத் தூர் வாரலாம் எனக் கேட்டு அதிமுகவினர் பிரச்சினை செய்கிறார்கள். தனது தொகுதியில் உள்ள ஏரியை முதல்வரே தூர்வாரியிருந்தால் திமுகவுக்கு அந்த அவசியமே ஏற்பட்டிருக்காது'' என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x