Published : 04 Jul 2017 10:05 AM
Last Updated : 04 Jul 2017 10:05 AM

‘வழக்கை முடிக்க ரூ.6 கோடி கேட்டது போலீஸ்’- சர்ச்சையைக் கிளப்பும் சுபாஷ் கபூர் கடிதம்

போலீஸ் அதிகாரிகள் சிலர் சிலைக் கடத்தல் கும்பலோடு கைகோர்த்து பழங்கால சிலைகளை கடத்திய விவகாரம் நீதிமன்ற விசாரணைக்கு வந்திருக்கும் நிலையில், நடராஜர் சிலை கடத்தல் விவகாரம் ஒன்றை சுமூகமாக முடிக்க தமிழக போலீஸார் தன்னிடம் ரூ. 6 கோடி கேட்டதாக சுபாஷ் கபூர் எழுதியதாக சொல்லப்படும் கடிதம் ஒன்று இப்போது வெளியாகி சர்ச்சையை கிளப்புகிறது.

அரியலூர் மாவட்டம் ஸ்ரீபுரந்தான் கைலாசநாதர் கோயிலில் இருந்த நடராஜர் உள்ளிட்ட எட்டு ஐம்பொன் சிலைகள் 2006-ல் மர்ம நபர்களால் கொள்ளையடிக் கப்பட்டது. சென்னையைச் சேர்ந்த சிலைக் கடத்தல் புள்ளி சஞ்சீவி அசோகன் மூலமாக இந்தச் சிலைகள் சர்வதேச சிலைக் கடத்தல் மன்னன் சுபாஷ் கபூரிடம் கொண்டு சேர்க்கப்பட்டது பிற்பாடு விசாரணையில் தெரியவந்தது.

அக்கறை காட்டாத போலீஸ்

இதற்காக 2009-ல் கைது செய்யப்பட்ட சஞ்சீவி அசோகன் சீக்கிரமே ஜாமினில் விடப்பட்டார். கடத்தப்பட்ட ஸ்ரீபுரந்தான் கோயில் நடராஜர் உள்ளிட்ட சிலைகள் சுபாஷ் கபூரின் கைக்கு போய்விட்டது தெரிந்தும், அவற்றை மீட்டு வரவோ, வழக்கை துரிதப்படுத்தவோ தமிழக போலீஸ் போதிய அக்கறை காட்டவில்லை. இந்த நிலையில், சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி-யாக பொன் மாணிக்கவேல் பொறுப்பேற்றதும் கடத்தல் வழக்குகள் சூடுபிடித்தன.

இதனையடுத்து, 2011 அக்டோபர் 30-ல் ஜெர்மனியில் ’இன்டர்போல்’ போலீஸாரால் வளைக்கப்பட்டார் சுபாஷ் கபூர். அதிலிருந்து கிட்டத்தட்ட ஐந்தரை ஆண்டுகளுக்கும் மேலாக ஜாமின் கிடைக்கவிடாமல் கபூரை திருச்சி சிறையில் முடக்கிப் போட்டிருக்கிறார் பொன் மாணிக்கவேல். கபூரை சிறைக்குள் வைத்துக் கொண்டே, வெளியில் இருந்த அவரது சிறகுகளை ஒவ்வொன்றாக முறித்தார்.

கபூர் எழுதிய கடிதம்

கடத்தப்பட்ட ஸ்ரீபுரந்தான் நடராஜர் சிலையை, தான் கைதாகும் முன்பாக, ஆஸ்திரேலியாவில் உள்ள ’நேஷனல் கேலரி ஆஃப் ஆஸ்திரேலியா (என்.ஜி.ஏ)’ அருங்காட்சியகத்துக்கு 50 லட்சம் (அப்போதைய இந்திய மதிப்புக்கு சுமார் ரூ.31 கோடி) அமெரிக்க டாலருக்கு பிப்ரவரி 2008-ல் விற்றிருக்கிறார் கபூர். விசாரணையின் முடிவில், இது ஸ்ரீபுரந்தான் கோயிலுக்குச் சொந்தமான சிலைதான் என்பதை புதுச்சேரி ‘ஃபிரெஞ்சு இன்ஸ்டி டியூட்’ ஆவணம் உறுதிப்படுத்தியது. இதையடுத்து, நடராஜரை இந்தியாவிடம் ஒப்படைக்கச் சம்மதித்தது என்.ஜி.ஏ. அருங்காட்சியகம். இதற்கான வேலைகள் தொடங்கிய சமயத்தில் தான், கபூர் கடிதம் ஒன்றை எழுதியதாக கூறப்படுகிறது.

ஆஸ்திரேலியாவின் அட்டர்னி ஜெனரலுக்கு முகவரியிடப்பட்ட அக் கடிதத்தில், ’அந்த நடராஜர் சிலை குறித்து முடிவெடுக்க உங்களுக்கு முழு உரிமை உள்ளது. ஆனால், அது திருடப்பட்ட சிலை இல்லை என்பதை என்னால் உறுதிபடக் கூறமுடியும். அது திருடப்பட்ட சிலை என்பதை இந்திய அரசால் இன்னமும் நீதிமன் றத்தில் நிரூபிக்க முடியவில்லை. அவர்களால் எந்தக் காலத்திலும் அப்படி நிரூபிக்கவே முடியாது என்பதை என்னால் உறுதியாகக் கூறமுடியும். அதனால் தான் அந்த வழக்கில் இன்னமும் குற்றப்பத்திரிகையும் வழங்காமல், வழக்கையும் விரைவுபடுத்தாமல் வைத்திருக்கிறார்கள்.

சுபாஷ் கபூர் கபூர் எழுதிய கடிதம்

ஆறு கோடி கேட்கிறார்கள்

அது திருட்டு சிலை இல்லை என்பது போலீஸுக்குத் நன்றாகத் தெரியும். அதனால்தான் இந்த வழக்கை முடிக்க அவர்கள் என்னிடம் ஆறு கோடி ரூபாய் கேட்டு நிர்பந்திக்கிறார்கள். லஞ்சம் கொடுக்கக்கூடாது, அச்சுறுத்தலுக்கு அடிபணியக்கூடாது என்பதை கொள்கையாக வைத்திருக்கும் நான் அதற்கு உடன்படவில்லை. அது திருட்டு சிலை இல்லை என்பதை சட்டத்தின் முன் என்னால் நிரூபிக்க முடியும். எனவே, தாங்கள் சற்று பொறுமை காத்து, வழக்கின் விசாரணை முடியும்வரை அந்த நடராஜர் சிலையை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்’ என்று சொல்லப்பட்டுள்ளது.

கபூரால் 02-05-2014-ல் எழுதியதாகச் சொல்லப்படும் இந்தக் கடிதமானது அவரது வழக்கறி ஞர் கிங்ஸ்டன் ஜெரால்டு மூலமாக ஆஸ்தி ரேலியாவின் அட்டர்னி ஜெனரலுக்கும் என்.ஜி.ஏ. அருங்காட்சியக பொறுப்பா ளர் ரான் ரெட்ஃபோர்டுக்கும் அனுப்பப்பட் டிருக்கிறது. இந்தக் கடிதத்தை ஆஸ்தி ரேலிய அரசு பொருட்படுத்த வில்லை. கடந்த 05-09-2014-ல் டெல்லி வந்த அப்போதைய ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபாட், ஸ்ரீபுரந்தான் நடராஜர் உள்ளிட்ட மூன்று சிலைகளை இந்திய பிரதமர் மோடியிடம் ஒப்படைத்தார்.

இந்தச் சூழலில், சிலைக் கடத்தல் வழக்குகளை தோண்டித் துருவிய பொன் மாணிக்கவேல் ஐ.ஜி., சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவிலிருந்து சில தினங்களுக்கு முன்பு திடீரென மாற்றப்பட்டார். இதற்கான உத்தரவு வருவதுக்கு சில தினங்கள் முன்னதாக உயர் நீதிமன்றத்தில், சிலைக் கடத்தல் வழக்குகளில் போலீஸ் அதிகாரிகளின் தொடர்பு குறித்த பொதுநல வழக்குத் தாக்கலாகிறது.

சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்

இதையெல்லாம் சுட்டிக்காட்டும் ’தி இந்தியா ப்ரைடு புராஜெக்ட்’ அமைப்பின் எஸ்.விஜய்குமார், ’’இந்தியாவி லிருந்து சுமார் 3000 சிலைகள் உள்ளிட்ட கலைப் பொருட்களை சுபாஷ் கபூர் வெளிநாடுகளுக்குக் கடத்தி இருக்கிறார். ஆனால், அவர் மீது தமிழகத்தில் மட்டும் தான் அதுவும் 4 வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. வேறு வழக்குகள் ஏதும் பதிவு செய்யாதபடி கபூரின் வட இந்திய நண்பர்கள் அவரைக் காப்பாற்றுகிறார்கள்.

தமிழகத்தில்கூட சஞ்சீவி அசோகன், தீனதயாள் கூட்டணியின் கடத்தல் தொடர்புகள் குறித்து நாங்கள் தகவல் கொடுத்து இரண்டு ஆண்டுகள் கழித்துத்தான் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தார்கள். அப்படி இருந்தும் சஞ்சீவி அசோகனை ஜாமினில் விட்டு விட்டார்கள். சினிமா இயக்குநர் வி.சேகரை எதற்காக கைது செய்தார்கள் அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்பதெல்லாம் மர்மமாகவே நீடிக்கிறது.

ஜெர்மனியில் கைதானபோது, ’ஷான்டூ-வை தொடர்பு கொண்டு பேசும்படி’ தனது மேலாளரிடம் கடிதம் கொடுத்திருக்கிறார் கபூர். அமெரிக்க போலீஸின் குற்ற பதிவேடுகளில் ’ரஞ்சித் கன்வர்’ என குறிப்பிடப்படும் இந்த ஷான்டூ நேரடியாக கபூரின் கடத்தல் தொடர் புகளில் இருந்தவர். இவரைப் பற்றி தமிழக போலீஸ் எந்த விசாரணையும் நடத்தவில்லை. சிலைக் கடத்தல் விவகாரங்களில் எழுப்பப்படும் இந்த சந்தேகங்கள் எல்லாம் விலக வேண்டுமானால் இந்த விவகாரத்தை சி.பி.ஐ. கையில் எடுக்க வேண்டும்’’ என்கிறார்.

ஸ்ரீபுரந்தான் நடராஜர் சிலை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x