Last Updated : 18 Jul, 2017 12:57 PM

 

Published : 18 Jul 2017 12:57 PM
Last Updated : 18 Jul 2017 12:57 PM

சுமார் 60 அடி உயரத்திலிருந்து உருண்டு விழும் பாறைகளால் பொள்ளாச்சி ரயில் பாதைக்கு ஆபத்து?

ரயில்பாதையில் பாறைகள் விழுந்து ரயில்கள் நிறுத்தப்படுவது நீலகிரியில் மட்டுமல்ல, கோவை யிலும் நடக்கும் என எச்சரிக்கின்றனர் கிணத்துக்கடவு பகுதி மக்கள். கோவை செட்டிபாளையம் அருகே கல்குவாரிகளுக்கு நடுவே சுமார் 60 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ள ரயில்பாதையில்தான் இந்த ஆபத்தான சூழல் இருப்பதாகவும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.

8 ஆண்டுகளுக்கு பிறகு கோவை - பொள்ளாச்சி அகல ரயில்பாதை கடந்த வாரம் திறக்கப்பட்டது. 40 கி.மீ. தொலைவுக்குள், 30-க்கும் மேற்பட்ட லெவல் கிராசிங்குகளைக் குறைத்தது, 110 இடங்களில் சிறு பாலங்கள் அமைத்தது என பல்வேறு பணிகள் இதில் இடம் பெற்றுள்ளன. பொதுமக்களின் கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு 6 மாதங்களுக்கு திருச்சூர் பயணிகள் ரயிலை, எஞ்சியுள்ள மதிய நேரத்தில் கோவை - பொள்ளாச்சிக்கு சிறப்பு ரயிலாக இயக்கப்போவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தேவைப்படும் நேரத்தில் ரயில் சேவையை வழங்காமல், மதிய நேரத்தில் இயக்குவது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அதேசமயம், மிகப்பெரிய நிதி ஒதுக்கியும் பாதுகாப்பற்ற முறையில் இந்த ரயில்பாதை நிறுவப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கோவை செட்டிபாளையம் - கிணத்துக்கடவு இடையே உள்ள கிருஷ்ணராயபுரம் அருகே மேடான பகுதியில் இருந்த தண்டவாளம், தற்போது சுமார் 70 அடிக்கு கீழாக கொண்டு செல்லப்பட்டுள்ளது. வெட்டப்பட்ட பாறைகளுக்கு நடுவே மலைரயில் பாதையைப் போல தண்டவாளம் அமைத்திருப்பது அசாத்தியமான வேலை என்றாலும், அங்குள்ள புறச்சூழல்களால் ரயில் போக்குவரத்து கடும் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளது.

அங்குள்ள தனியார் கல்குவாரிகளில் வைக்கப்படும் வெடிகளால், ரயில்பாதையில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

கல்குவாரி பிரச்சினை

இப்பிரச்சினை குறித்து அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி கணேஷ் என்பவர் ‘தி இந்து’-விடம் கூறும்போது, ‘கிருஷ்ணராயபுரம் தோட்டத்துத்துச் சாலை என்ற இடத்தில் பாறைப்பகுதி உள்ளது. அதன்மேலே மீட்டர்கேஜ் தண்டவாளம் இருந்தது. அதன் இருபுறத்திலும் உள்ள தனியார் கல்குவாரிகளால் இப்பகுதியே பாதிக்கப்பட்டிருக்கிறது. மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் பல முறை புகார்கள் தெரிவித்தும் குவாரிகள் பிரச்சினையில் தீர்வு காணப்படவில்லை.

இப்பிரச்சினைகள் எதையுமே ஆய்வு செய்யாமல், ஆபத்தான வகையில் புதிய அகல ரயில்பாதையை பாலக்காடு கோட்ட அதிகாரிகள் அமைத்துள்ளனர். பாறைகளின் குறுக்கே சுமார் 60 அடி ஆழத்துக்கு வெட்டி எடுத்து, அதில் தண்டவாளம் அமைத்துள்ளனர். சுற்றியுள்ள இரு குவாரிகளில் ஒவ்வொரு முறை வெடி வைக்கப்படும்போது, ரயில்பாதையில் பாறைகள் உருண்டு விழுவது வாடிக்கையாகிவிட்டது. இதுவரை பிரச்சினை இல்லை. ஆனால் பெரிய பாறைகள் பல ஆபத்தான நிலையில் தொங்கிக் கொண்டிருக்கின்றன. ரயில் வரும்போது எதிர்பாராதவிதமாக பாறைகள் விழுந்தால் பெரிய விபத்தே ஏற்படும்.

முதலில் ரயில்பாதை ஓரமாக ஆபத்தான வகையில் இயங்கும் கல்குவாரிகளை மூட வேண்டும். ரயில் போக்குவரத்துக்கு உரிய பாதுகாப்பை உருவாக்க வேண்டும்’ என்றார்.

அப்பகுதி விவசாயிகள் கூறும்போது, ‘தற்போது விடப்பட்டுள்ள சிறப்பு ரயில் கோவை - செட்டிபாளையம் வரை 40 கி.மீ. வேகத்தில்தான் இயக்கப்படுகிறது. அதற்குப் பின்னரே மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் இயக்குகிறார்கள். இதுபோன்ற அச்சுறுத்தல்கள் இருப்பதே வேகக் குறைப்புக்கு காரணம் எனவும் கூறப்படுகிறது. தேவைப்படும் நேரத்தில் ரயில்களை இயக்காததும், ரயில்பாதையை பாதுகாப்பாக அமைக்காததும் இந்த ரயிலை நம்பியுள்ள கிராமப்புற மக்களுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. இதைக் கண்டித்தும், பிரச்சினைகளுக்குத் தீர்வு கேட்டும் போராட்டம் நடத்த உள்ளோம்’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x