Published : 12 Jul 2017 12:30 PM
Last Updated : 12 Jul 2017 12:30 PM

திருச்சி உறையூர் பகுதியிலுள்ள எம்ஜிஆர் பங்களாவிலிருந்து மரம் வெட்டி கடத்தல்?

திருச்சியிலுள்ள எம்ஜிஆர் வீட்டிலிருந்த மரத்தை மர்ம நபர்கள் வெட்டி கடத்தியுள்ளனர். அது, சந்தனமரமா என வனத் துறை உதவியுடன் விசாரிக்க காவல் துறை முடிவு செய்துள்ளது.

திருச்சி உறையூரிலிருந்து கோணக்கரை வழியாக குடமுருட்டி செக்போஸ்ட் செல்லும் சாலையோரத்தில் மறைந்த முதல்வர் எம்ஜிஆர் பங்களா உள்ளது. அவரது மறைவுக்குபின், அதிமுகவினரால் கண்டுகொள்ளப்படாததால், அந்த வீடு கவனிப்பாரற்று கிடந்தது. ஆறுமுகம் என்பவர் தனது குடும்பத்துடன் அங்கேயே தங்கியிருந்து காவல் பணியில் ஈடுபட்டிருந்தார். தென்னை, வேம்பு, தேக்கு உட்பட பல்வேறு வகையான மரங்கள் அந்த வீட்டின் வளாகத்துக்குள் உள்ளன. அவற்றில் ஒரு மரத்தை, கடந்த வாரம் மர்ம நபர்கள் இரவுநேரத்தில் வெட்டியுள்ளனர். இதைக்கண்ட ஆறுமுகம் கூச்சலிட்டபடி அங்கு ஓடிவந்ததால், மர்ம நபர்கள் தப்பிச் சென்றனர். அவர்கள் மரத்தின் சில பகுதிகளை எடுத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், எம்ஜிஆர் வீட்டில் வெட்டப்பட்டது சந்தன மரம் என தகவல் பரவியது. இதையறிந்த அதிமுக பிரமுகர்கள், மாநகர போலீஸார், உளவுத்துறை அதிகாரிகள் அங்குசென்று விசாரணை நடத்தினர். அப்போது, வெட்டப்பட்ட மரத்தின் மேல் பகுதியிலுள்ள கிளைகளும், நடுப்பகுதியிலுள்ள 2 துண்டுகளும் அங்கு கிடந்தன. அவற்றை கைப்பற்றி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக போலீஸார் கூறும்போது, ‘‘வெட்டப்பட்ட மரத்தின் பெரும்பகுதி அங்கேயே உள்ளது. சில அடி உயரம் கொண்ட துண்டுகள் மட்டும் திருடிச் செல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம். அதேசமயம், இது சந்தனமரம்தானா என விசாரிக்க வனத் துறையினர் உதவியைக் கேட்டுள்ளோம். இதுதொடர்பாக யாரும் புகார் அளிக்கவில்லை. எனினும், மரத்தை வெட்டிய நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x