Published : 28 Jul 2017 04:35 PM
Last Updated : 28 Jul 2017 04:35 PM

ரூ.8,333 மாதவருவாய் ஈட்டினால் ரேஷன் ரத்து; நியாய விலைக்கடைக்கு மூடுவிழாவா?- ராமதாஸ் காட்டம்

மாத வருவாயாக ரூ.8,333 ஈட்டினால் ரேஷனில் முன்னுரிமை இல்லை என்னும் அறிவிப்பு நியாய விலைக் கடைக்கான மூடுவிழாவா என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழ்நாட்டில் பொது விநியோகத் திட்டத்தின்படி பயனடையும் மக்களை முன்னுரிமைப் பிரிவினர், முன்னுரிமை இல்லாத பிரிவினர் என இருவகைகளாக பிரிக்கும் பணியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. இதனால் மக்களுக்கு பாதிப்பு இல்லை என அரசு கூறினாலும் மோசமான ஆபத்துக்கள் காத்திருக்கின்றன.

தமிழ்நாட்டில் பொது விநியோகத் திட்டம் என்பது காலம் காலமாக அனைவருக்கும் பொதுவானத் திட்டமாக இருந்து வருகிறது. கடந்த காலங்களில் இதை சீர்குலைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளாலும், பொதுமக்களாலும் முறியடிக்கப்பட்டிருக்கின்றன. இப்போது தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்ட விதிகளின்படி பொது விநியோகத் திட்டப் பயனாளிகளை முன்னுரிமைப் பிரிவினர், முன்னுரிமையில்லாத பிரிவினர் என வகைப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு இருப்பதாகவும், அதன்படியே இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்படுவதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அதன்படி, குடும்பத்தில் எவராவது வருமான வரி செலுத்தினாலோ, வீட்டில் குளிரூட்டி அல்லது மகிழுந்து வைத்திருந்தாலோ அவர்கள் முன்னுரிமையற்ற பிரிவினராக வகைப்படுத்தப்படுவார்கள். இதையெல்லாம் விடக் கொடுமை என்னவென்றால் குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்தால் அக்குடும்பமும் முன்னுரிமையற்றதாக அறிவிக்கப்படும். அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுபவர்கள், தொழில்வரி கட்டுபவர்கள், 5 ஏக்கருக்கும் கூடுதலாக நிலம் வைத்திருப்பவர்கள் ஆகியோரும் அதிக வருவாய் ஈட்டும் பிரிவினராக கருதப்பட்டு அவர்களும் முன்னுரிமையற்ற பிரிவினராகக் கருதப்படுவர்.

தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின்படி மத்திய அரசிடம் கணக்குக் காட்டப்படுவதற்காக மட்டும்தான் இந்த வகைப்படுத்தல் நடைபெறுவதாகவும், இதைப் பொருட்படுத்தாமல் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அனைவருக்கும் உணவு தானியம் வழங்கும் தற்போதைய நடைமுறையே தொடரும் என்றும் தமிழக அரசு அறிவித்திருக்கிறது. அரசின் இந்த உறுதிமொழியை தண்ணீரில் தான் எழுதி வைக்க வேண்டும்.

ஏனெனில், மத்திய அரசு அதன் உணவு மானியத்தை படிப்படியாக குறைத்து வருகிறது. அதேபோல், மாநிலங்களும் உணவு மானியத்தைக் குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு கட்டாயப்படுத்தி வருகிறது. தமிழக அரசின் நிதிநிலை நாளுக்கு நாள் மோசமாகி வரும் சூழலில் பொது விநியோகத்திட்டம் அனைவருக்கும் தொடரும் என அரசு கூறுவது வெற்று சமாதானமாகவே இருக்கும்.

தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின்படி தமிழகத்தில் 50.55% மக்கள் மட்டுமே மானிய விலையில் உணவு தானியம் பெறுவதற்கு தகுதியுடையவர்கள் என்று மத்திய அரசு கூறிவருகிறது. தமிழ்நாடு அரசு இப்போது அதன் சொந்த செலவில் மானியம் வழங்கி அனைவருக்கும் உணவு தானியங்களை வழங்கினாலும் இதைப் படிப்படியாக குறைக்க வேண்டும் என்பதுதான் மத்திய அரசின் நோக்கமாகும். இதற்கேற்ற வகையில்தான் உணவுப் பாதுகாப்புத் திட்ட விதிகள் வகுக்கப்பட்டிருக்கின்றன. அதன்படியே தமிழகத்தில் இப்போது முன்னுரிமைப் பிரிவினரை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

பொது விநியோகத் திட்டத்தின்படி பயனடைய ஆண்டு வருமானம் ஒரு லட்சத்துக்கும் குறைவாக இருக்க வேண்டும், 5 ஏக்கருக்கும் கூடுதலாக நிலம் இருக்கக் கூடாது என்பன உள்ளிட்ட விதிகள் மிகவும் கடுமையானவை... பொருத்தமற்றவை. இந்த விதிகள் பின்பற்றப்பட்டால் தமிழகத்தில் தகுதியுடைய பலருக்கு பொது விநியோகத் திட்டத்தின் பயன்கள் கிடைக்காமல் போவதற்கு வாய்ப்பிருக்கிறது. பொது விநியோகத் திட்டத்தின் பலன்கள் அனைவருக்கும் கிடைக்கும் என்று தமிழக அரசின் சார்பில் கூறப்படுவதை ஏற்க முடியாது. அதனால்தான் தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தில் தமிழகம் ஒருபோதும் சேரக்கூடாது என்று தமிழக அரசை பாமக தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

மின்வாரியத்தின் கடன்களை அடைப்பதற்கான உதய் திட்டத்தில் சேர தமிழக அரசு திட்டமிட்டபோது, அத்திட்டத்தில் இணைந்தால் அடிக்கடி மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்பதால் அதில் சேர வேண்டாம் என்று பாமக வலியுறுத்தியது. ஆனால், அதை மதிக்காமல் அத்திட்டத்தில் இணைந்த தமிழக அரசு, மின்கட்டணம் உயர்த்தப்படாது என்று உறுதியளித்தது.

ஆனால், உதய் திட்ட விதிகளைக் காட்டி வரும் மார்ச் மாதத்தில் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று அறிவித்து அதற்கான நடவடிக்கைகளில் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஈடுபட்டிருக்கிறது. அதேபோல்தான் பொது விநியோகத் திட்டத்தின் பயன்கள் அனைவருக்கும் தொடரும் என்று அரசு உறுதியளித்தாலும், அடுத்த சில ஆண்டுகளில் முன்னுரிமையற்ற பிரிவினருக்கு இச்சலுகை நிறுத்தப்படுவது உறுதியாகும்.

எனவே, தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களை வகைப்படுத்தும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். தமிழகத்திலுள்ள அனைவரும் முன்னுரிமைப் பிரிவினர் என அறிவித்து அவர்களுக்கு பொது விநியோகத் திட்ட சலுகைகள் தொடர்ந்து கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x