Last Updated : 14 Jul, 2017 11:12 AM

 

Published : 14 Jul 2017 11:12 AM
Last Updated : 14 Jul 2017 11:12 AM

தமிழகத்தில் முதல்முறையாக கோவை வனக்கோட்டத்தில் வனத்துறை ‘ஹெல்ப் லைன்’ - புகார்கள் மீது விரைவான நடவடிக்கை எடுக்க புதிய முயற்சி

வனவிலங்குகள் பிரச்சினைகள் அதிகமுள்ள கோவை மாவட்டத்தில், முதல்முறையாக வனத்துறை ‘ஹெல்ப்லைன்’ வசதி தொடங்கப்பட உள்ளது. காவல்துறையைப் போலவே வனம் சார்ந்த புகார்களைப் பெற்று துரித நடவடிக்கை எடுக்க இந்த வசதி உதவும் என வனத்துறையினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

மேற்குத் தொடர்ச்சி மலையடிவார மாவட்டங்களான கோவை, நீலகிரியில் வனச்சூழல் பிரச்சினைகள் அதிகமாக உள்ளன. குறிப்பாக கோவையில் வனவிலங்கு ஊடுருவல், மனித - மிருக எதிர்கொள்ளல் போன்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், எல்லையோர கிராமங்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றன. இதைக் கட்டுப்படுத்தவும், தடுக்கவும் வனத்துறை நடவடிக்கை எடுக்கிறது. ஆனாலும் நிரந்தரத் தீர்வு கிடைப்பதில்லை.

7 வனச்சரகங்களைக் கொண்டுள்ள கோவை வனக் கோட்டத்தில் கடந்த ஆண்டு மட்டும் 23 யானைகள் பலியாகின. இந்த ஆண்டில் 6 மாதங்களில் மட்டும் இறந்த யானைகளின் எண்ணிக்கை 10-ஐ தாண்டிவிட்டது. இது தவிர மற்ற வனவிலங்குகளும் இறப்பது தொடர்கதையாக உள்ளது. வறட்சியால் தண்ணீர், தீவனம் தேடி கிராமங்களுக்குள் வரும் விலங்குகளால் மனிதர்கள் தாக்குதலுக் குள்ளாவது, கொல்லப்படுவதும் அவ்வப்போது நிகழ்ந்து வருகின்றன.

இதைக் கருத்தில் கொண்டு, வன, வன விலங்குகள் பிரச்சினைகளை உடனுக்குடன் தெரிந்து கொண்டு, தீர்வு காண வசதியாக ‘ஹெல்ப்லைன்’ திட்டத்தை வனத்துறை அறிமுகப்படுத்துகிறது. யானைகளைப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட ‘களிறு’ திட்டத்தின் ஒருபகுதியாக, கொண்டு வரப்படும் இத்திட்டம் ஒருவார காலத்தில் பயன்பாட்டுக்கு வரும் என வனத்துறையினர் கூறுகின்றனர்.

ரூ.1.38 கோடி நிதி ஒதுக்கீடு

கோவை மண்டல வனப்பாதுகாவலர் ராமசுப்பிரமணியம் ‘தி இந்து’ விடம் கூறியதாவது: ‘களிறு’ திட்டத்தில் ஒதுக்கப்பட்ட ரூ.1.38 கோடி நிதியில் ‘ஹெல்ப்லைன்’ உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. காவல்துறையில் அவசர உதவி எண் இருப்பது போல தமிழக வனத்துறையிலும் முதல்முறையாக ‘ஹெல்ப்லைன்’ உருவாக்கப்படுகிறது. ‘ஹெல்ப்லைன்’ தொலைபேசி எண் மூலம் வனம், வனவிலங்குகள் சார்ந்த புகார்களை, தகவல்களை உடனுக்குடன் வனத்துறைக்கு தெரிவிக்க முடியும்.

கட்டுப்பாட்டு அறையில் உள்ள ஊழியர்கள் அதை பதிவு செய்து, சம்பந்தப்பட்ட பகுதி வனத்துறையினருக்கு தெரிவிப்பார்கள். அதன் அடிப்படையில் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு பதிவு செய்யப்படும். இதன் மூலம் தகவல்களும், தீர்வுகளும் விரைவாக இருக்கும். ‘ஹெல்ப்லைன்’ எண்ணுக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. ஒருவாரத்தில் எண் கிடைத்ததும் முறைப்படி திட்டம் தொடங்கும். 24 மணி நேரமும் இயங்கும் ஹெல்ப்லைன் கட்டுப்பாட்டு மையத்தில் 3 ஊழியர்கள் சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுவார்கள். அவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. கோவை கோட்டத்தில் உள்ள 7 சரகங்கள் மட்டுமல்லாமல், அருகாமை வனப்பகுதிகளில் இருந்து பெறப்படும் புகார்களும் அந்தந்த பகுதிகளுக்கு தெரிவிக்கப்படும் என்றார்.

கோவை வனக் கோட்டத்தில் சராசரியாக ஒரு வாரத்துக்கு 20 புகார்கள் பதிவாகின்றன. ஆனால் ஆள் பற்றாக்குறை, பட்டாசு, வாகன வசதி இல்லாமை போன்ற காரணங்களால் பல புகார்களுக்கு, வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் நிலவுகிறது. ‘ஹெல்ப்லைன்’ திட்டம் கொண்டு வரப்பட்டால், இதுபோன்ற பிரச்சினைகளும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்திலேயே முதல்முறையாக இத்திட்டம் கோவையில் அறிமுகமாவது பெருமையாக இருந்தாலும், வனச்சூழல் பாதிப்பின் வெளிப்பாடாகவே இத்திட்டத்தை பார்க்க முடிகிறது என்கின்றனர் சூழலியல் ஆர்வலர்கள். இருந்தாலும், பிரச்சினைகள் மீது விரைவான தீர்வு காண இத்திட்டம் உதவியாக இருக்கும் என்பது வனத்துறையினரின் நம்பிக்கையாக உள்ளது.

கேமரா கண்காணிப்பு

யானைகள் அதிகம் விபத்துக்குள்ளாகும் பகுதியான மதுக்கரை - வாளையாறு ரயில்பாதையில், வனத்துறை, பாலக்காடு கோட்ட ரயில்வே இணைந்து முன் எச்சரிக்கை திட்டத்தை தொடங்க உள்ளன. யானைகள் கடக்கும் பகுதியில் அகச்சிவப்பு கதிர்கள் மூலம் இயங்கும் 4 அதிநவீன கேமராக்கள் பொருத்தி முன்னோட்டம் பார்க்கப்பட்டு வருகிறது. 15 நாட்களில் இத்திட்டம் முழுமையாக தொடங்குகிறது. இதற்கென அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையை, அகஇணைய வசதி மூலம் (இண்ட்ராநெட்) ‘ஹெல்ப்லைன்’ கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்க வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x