Published : 30 Jul 2017 01:04 PM
Last Updated : 30 Jul 2017 01:04 PM

சூரிய ஒளி மின்சார உற்பத்தியில் தமிழகம் பின்தங்கிய நிலையில் உள்ளது: வாசன்

மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது சூரிய ஒளி மின்சார உற்பத்தியில் தமிழகம் பின் தங்கிய நிலையில் உள்ளது என்று தமாகா தலைவர் வாசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தில் சூரிய ஒளி மின்சாரத்தை அதிக அளவில் உற்பத்தி செய்து மாநிலத்தின் மின் தேவையைப் பூர்த்தி செய்ய அரசு அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட வேண்டும். கடந்த 2016 - 17ல் தமிழகத்தில் மிகக்குறைந்த அளவே சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு, பயன்படுத்தப்பட்டது.

ஆனால் ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் சூரிய ஒளி மின்சாரத்தின் உற்பத்தியையும், பயன்பாட்டையும் ஒப்பிடும் போது தமிழகம் பின் தங்கிய நிலையில் உள்ளது. குறிப்பாக தமிழகத்தில் 2015 - 16 ல் 919 மெகா வாட் மின்சாரம் சூரிய ஒளியின் மூலம் உற்பத்தி செய்யப்பட்டது. ஆனால் 2016 - 17ல் 638 மெகா வாட் சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.

2015 - 16 ஐ ஒப்பிடும் போது 2016 - 17ல் சூரிய ஒளி மின்சார உற்பத்தி குறைந்ததற்கு காரணம் மாநில அரசுதான். அதே சமயம் 2016 - 17ல் ஆந்திராவில் 1,294 மெகாவாட், தெலங்கானாவில் 759 மெகாவாட், கர்நாடகாவில் 882 மெகாவாட் மற்றும் ராஜஸ்தானில் 543 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.

இவ்வாறு நாடு முழுவதும் உற்பத்தி செய்யப்பட்ட சூரிய ஒளி மின்சாரத்தின் அளவு 2015 - 16 ஐ ஒப்பிடும் போது 2016 - 17ல் 66 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் இதன் உற்பத்தி குறைந்துள்ளது. காரணம் மற்ற மாநிலங்களில் சூரிய ஒளி மின்சாரத்தை உற்பத்தி செய்வதில் அம்மாநில அரசு கொடுக்கும் முக்கியத்துவம் போல் தமிழக அரசு கொடுக்கவில்லை.

உதாரணத்திற்கு நம் நாட்டில் உள்ள பிற மாநிலங்களில் சூரிய ஒளி மின்சாரத்தை உற்பத்தி செய்ய முன்வருவோருக்கு நில ஒதுக்கீடு, நியாயமான கொள்முதல் விலை ஆகியவற்றில் அம்மாநில அரசுகள் உதவி செய்கின்றன. இதனால் அம்மாநிலங்களில் அரசின் உதவியுடன் சூரிய ஒளி மின்சாரத்தை உற்பத்தி செய்ய தனியார் அதிக ஆர்வத்துடன் முன்வந்து செயல்படுகிறார்கள்.

ஆனால் தமிழ்நாட்டில் சூரிய ஒளி மின்சாரத்தை உற்பத்தி செய்ய முன்வருவோருக்கு நிலம் ஒதுக்கீடு செய்யாமலும், உற்பத்தி செய்த மின்சாரத்தை கொள்முதல் செய்யும்போது அதற்கான நியாயமான விலையை உரிய காலத்தில் கொடுக்காமல், காலம் தாழ்த்தி கொடுப்பதும் ஆகிய முக்கிய காரணங்களால் ஆர்வமுள்ள தனியார் நிறுவனங்கள் சூரிய ஒளி மின்சாரத்தை உற்பத்தி செய்ய முன்வரவில்லை. குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர தனியார் நிறுவனம் தாங்களே நிலத்தை வாங்கி, முன்பணம் செலுத்தி, சூரிய ஒளி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் போது அவர்களுக்கு பெரும் சிரமம் ஏற்படும்.

எனவே தமிழக அரசு சூரிய ஒளி மின்சார உற்பத்தியைப் பெருக்க ஆர்வமுள்ள தனியாரை ஊக்கப்படுத்தும் விதமாக அறிக்கையை வெளியிட வேண்டும். முக்கியமாக இந்த அறிக்கையில் சூரிய ஒளி மின்சாரத்திற்கு நிலம் ஒதுக்கீடு செய்து தரப்படும், வங்கிக்கடன் வசதி செய்து தரப்படும், மானியம் வழங்கப்படும், மின்சாரத்தை நியாயமான விலையில் கொள்முதல் செய்து காலம் தாழ்த்தாமல் அதற்கான தொகை உடனே வழங்கப்படும் போன்ற அறிவிப்பை வெளியிட்டு சூரிய ஒளி மின்சாரத்தின் உற்பத்தியைப் பெருக்கிட வேண்டும்.

இதன் மூலம் நமது மாநிலத்திலேயே அதிக அளவில் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் போது பிற மாநிலங்களில் இருந்து மின்சாரத்தை அதிக கொள்முதல் விலைக்கு வாங்க வேண்டிய அவசியம் இருக்காது. மேலும் அரசு அலுவலகங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் அடுக்கு மாடி கட்டிடங்களில் சூரி ஒளி மின்சாரத்தைப் பயன்படுத்த கட்டாயப்படுத்தலாம்.

எனவே தமிழக அரசு மாநிலத்தின் மின் தேவையை பூர்த்தி செய்வதற்கு பல்வேறு முயற்சிகளை எடுத்து, தனியார் நிறுவனங்களை ஊக்கப்படுத்தி, சூரிய ஒளி மின்சாரத்தின் உற்பத்தியைப் பெருக்கி மாநில மக்கள் நலன் காக்க வேண்டும்'' என்று வாசன் தெரிவித்துள்ளார்.

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x