Published : 24 Jul 2017 10:57 AM
Last Updated : 24 Jul 2017 10:57 AM

ஸ்மார்ட் வகுப்பறை, கணினி அறை, சுகாதார வளாகம்: அசத்தும் நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப் பள்ளி

தலைமை ஆசிரியரின் முயற்சி..முன்னாள் மாணவர்களின் எழுச்சி

நாகர்கோவில் நாகர்கோவிலின் முக்கியமான அடையாளம் சேது லெக்குமிபாய் அரசு மேல்நிலைப் பள்ளி. கம்பீரமாய் காட்சியளிக்கும் இது, திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கட்டிடக் கலைக்கும் சான்றாக திகழ்கிறது. தொன்மை வாய்ந்த இக்கட்டிடத்தை பழமை மாறாமல் புதுப்பித்ததது, எலைட் வகுப்புகளை அறிமுகப்படுத்தி கல்வித் தரத்தை உயர்த்தியது, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், ஸ்மார்ட் வகுப்பறை, கணினி அறை என இப்பள்ளி முழுக்கவே தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும் ரகம்.

1860ல் உதித்த பள்ளிக்கூடம்

‘‘1860ம் ஆண்டில் அகஸ்தீஸ்வரம் தாலுகா பள்ளிக்கூடம் என்னும் பெயரில் சுசீந்திரம் அருகில் உள்ள ஆஸ்ரமத்தில் தொடங்கப்பட்டது. தொடர்ந்து கோட்டாறு அரசு மகளிர் பள்ளியில் இருந்தது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தை ராஜா சித்திரை திருநாள் பாலராமவர்மாவின் பிரதிநிதியாக ஆட்சி நடத்திய சேது இலக்குமிபாய் மகாராணியாக இருந்தபோது இக்கட்டிடம் உருவானது. 28.11.1928ம் ஆண்டு முதல் இக்கட்டிடத்தில் செயல்பட்டு வரும் இப்பள்ளி, 1978ம் ஆண்டு மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்ந்தது. ஆங்கில எழுத்தான ‘ஈ’ வடிவில் காட்சியளிக்கும் இந்த கட்டிடம் தொன்மையான பல வரலாறுகளின் சாட்சியும் கூட.

ஒற்றை விடுமுறையும், 9 கையெழுத்தும்!

18 ஏக்கர் 42 சென்ட்டில் கம்பீரமாய் காட்சியளிக்கும் எஸ்.எல்.பி. பள்ளி முன்பு, தனியார் பள்ளிகளில் சீட் கிடைக்காதவர்களின் கடைசி புகலிடம். ஆனால் இன்று பிரமிப்பூட்டும் நிலைக்கு மாறியிருக்கிறது. மாணவர்கள் விடுப்பு விண்ணப்பத்துக்கே பிரத்யேக படிவம். அதில் விடுப்புக்கான காரணம், பெற்றோர் கையொப்பம், வகுப்பாசிரியர் கையொப்பம், பாடவாரியாக ஆசிரியர்கள் கையொப்பம், உடற்கல்வி ஆசிரியர் கையொப்பம், உதவித் தலைமை ஆசிரியர் கையொப்பம், கடைசியில் தலைமை ஆசிரியர் கையொப்பம் என இத்தனைக்கும் பின்பே விடுமுறை கிடைக்கிறது.

1,671 மாணவ, மாணவிகள்

எஸ்.எல்.பி. அரசுப் பள்ளியில் 6 முதல் 12ம் வகுப்பு வரை உள்ளது. இப்போது 1,671 பேர் படிக்கின்றனர். 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான எலைட் வகுப்பும் நடக்கிறது. இதில் மொத்தம் 198 பேர் படிக்கின்றனர். இப்பள்ளியில் நடப்பாண்டில் எலைட் வகுப்பில் படித்த மாணவர் ஜெயராமன் பொறியியலில் 199.25 கட் ஆப் மதிப்பெண் பெற்று அசத்தினார். தற்போது 56 ஆசிரியர்கள். 7 அலுவலக பணியாளர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சில ஆசிரியர்களோடு இப்பள்ளி இயங்கி வருகிறது. பள்ளியின் சுற்றுச்சுவர் முழுவதும் திருக்குறள் எழுதப்பட்டுள்ளது.

நூலகத்துக்கு தனி வகுப்பு

எஸ்.எல்.பி. பள்ளியின் நூலகர் மது கூறுகையில், ‘‘மொத்தம் 16,855 புத்தகங்கள் உள்ளன. இதில் 18ம் நூற்றாண்டில் வெளிவந்த புத்தகங்களும் உள்ளது. 6 முதல் 9-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு சுழற்சி முறையில் தினசரி நூலக வகுப்பும் உண்டு. புத்தகத்தை வாசித்து, அதன் நூலாசிரியர், நூலின் மையக்கருத்தை எழுதி கையெழுத்து வாங்க வேண்டும். இதை ஒழுக்கப் பயிற்சியாக செய்கிறோம்”என்கிறார்.

2pngபள்ளியின் ஸ்மார்ட் வகுப்பறை

பழமை மாறாத கட்டிடங்கள்..

நாகர்கோவில் எஸ்.எல்.பி. பள்ளியின் தனித்துவத்தில் முக்கியமானது கட்டிடக்கலை. இடையில் இதை கவனிக்காமல் விட்டுவிட பாழ்பட்டு கொண்டிருந்தது. இதனைத் தொடர்ந்து பள்ளித் தலைமை ஆசிரியர் விஜயன், பள்ளியின் முன்னாள் மாணவர்களிடம் இது குறித்து தெரிவித்தார். அதன் பின்னர் நடந்தவை குறித்து தலைமை ஆசிரியர் விஜயன் ‘தி இந்து’விடம் கூறுகையில், ‘‘பிரேம், விவேக் உள்ளிட்ட முன்னாள் மாணவர்கள் கட்டிடத்தை பழமை மாறாமல் புதுப்பிக்க நண்பர்கள் குழுவில் நிதி பிரித்து 7 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சீரமைத்தனர். 1995ம் ஆண்டு 12ம் வகுப்பு ‘பி’ பிரிவில் படித்த சபரீஷ் குழுவினர் அவர்கள் படித்த வகுப்புக்கு 100 எழுத்துப் பலகை, சேர்களை தந்தனர். முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் செல்வின் குமார் முயற்சியால் அவர் நண்பர்கள் சேர்ந்து செமினார் அரங்கம், 30 கம்ப்யூட்டர்கள் வாங்கிக் கொடுத்து கணினி அறையும் ஏற்பாடு செய்தனர். முன்னாள் மாணவர் உமாகணேஷும் அவரது நண்பர்களுமாக சேர்ந்து 4 லட்ச ரூபாயில் சுகாதார வளாகம் கட்டுகின்றனர். ஒரு பக்கத்தில் படியும், இன்னொரு பக்கத்தில் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்துவதற்கு வசதியாக சாய்வு தளமும் வருகிறது. கழிவறையில் இருந்து வெளியேறும் சிறுநீர் நேரடியாக செடிகளுக்கு உரமாக்குற மாதிரியும் வடிவமைப்பு செய்யப்பட உள்ளது. முன்னாள் மாணவர் ரெகுராம் குழுவினர் 3 லட்ச ரூபாய் மதிப்பில் பள்ளியை சுற்றி கண்காணிப்பு கேமராக்கள் வைக்கின்றனர். முன்னாள் மாணவர் குற்றாலிங்கம், காலச்சுவடு கண்ணன் குழுவினர் சேர்ந்து அவர்களது ரோட்டரி சங்கத்தின் மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டி, மூலிகைத் தோட்டம் அமைத்து தந்தனர். பொதுவாக அரசுப் பள்ளிகளில் என்சிசி, என்எஸ்எஸ் இருக்கும். எங்கள் பள்ளியில் அதோட ரெட் ரிப்பன் கிளப், சுற்றுச்சூழல் கிளப், நுகர்வோர் சங்கம், ரோட்டரி இன்ட்ராக்ட் கிளப், என்.சி.சி.யிலேயே ஆர்மி, நேவி, ஜே.ஆர்.சி, ஸ்கவுட், ஹெல்த் கிளப், இலக்கிய மன்றம், கணித மன்றம், ஆங்கில மன்றம், தொன்மை காக்கும் மன்றம் என நிறைய அமைப்புகள் உள்ளன. 1971லயே இந்த பள்ளிக் கூடத்துல படிச்ச சுவாமிநாதன் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்றார். பள்ளி முழுவதும் வண்ண, வண்ண ஓவியங்களை அவரது சொந்த செலவில் வரைந்து இங்கு வைத்திருக்கிறார் ஓவிய ஆசிரியர் சந்திரன். படிப்போட சேர்த்து மாணவர்களின் கவனத்தை திசைமாறாமல் பார்த்துக்குறது புறச் சூழல்கள் தானே’’ என்றார்.

1pngதொன்மையான கட்டிங்களுடன் கூடிய நாகர்கோவில் சேது லெக்குமிபாய் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகம்

ஸ்மார்ட் வகுப்பறை

ரோட்டரி கிளப் சார்பில் பெண் களுக்கு கழிப்பறை கட்டப்பட்டுள்ளது. இதுபோக ஸ்மார்ட் வகுப்பறையும் உள்ளது. இதில் அகண்ட திரையில் வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. நேர லையில் வீடியோ கான்பரன்ஸ் மூலமும் வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. மாணவர்கள் சீருடையின் சட்டை பாக்கெட்டில் எஸ்.எல்.பி. என எழுதப் பட்டுள்ளது. கழுத்தில் அழகான அடையாள அட்டை அணிந்திருக் கிறார்கள். இத்தனையும் அரசுப் பள்ளியில் அமைந்துவிட்ட நிலையில், இனி கல்வி விளிம்பு நிலையோருக்கும் இனிப்பானது தானே!

தலைமை ஆசிரியரை தொடர்பு கொள்ள: 9443681815

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x