Published : 23 Nov 2014 13:44 pm

Updated : 23 Nov 2014 13:44 pm

 

Published : 23 Nov 2014 01:44 PM
Last Updated : 23 Nov 2014 01:44 PM

அரசின் பார்வை பட்டால் சாத்தியமாகும் மேட்டூர் காவிரி உபரி நீர் திட்டம்

தமிழக மக்களின் வாழ்வாதாரமாய், உணவுப் பஞ்சத்தை தீர்க்கும் ஜீவாதாரமாய் விளங்கும் காவிரி, தென் தமிழகத்தை செழிப்படைய வைக்கிறது. காவிரி கரை புரண்டோடும் சேலம் மாவட்ட விவசாயிகளின் பாசன கனவுக்கு கானல் நீராய் காட்சியளிக்கிறது. ஆறு மாவட்ட மக்களின் நீராதாரத்தை மேம்படுத்தக் கூடிய காவிரி உபரிநீர் மேலாண்மை திட்டத்தை அரசு ஏன் நிறைவேற்றக்கூடாது என்று விவசாய சங்கங்களும், தன்னார்வலர்களும் கேள்வி எழுப்புகின்றனர்.

காவிரியும், தமிழகமும்

பண்டைய தமிழக அரசர்களின் கோலாட்சியின் கீழ் மேற்கு மண்டலத்தில் இருந்த குடகு மலை, மகிஷநாடு என்றழைக்கப்பட்டது. ‘மகிஷம்’ என்றால் எருமை என வடமொழியில் வழங்கப்பட்ட நிலையில், இது எருமை நாடாக இருந்தது. மகிஷம் மருவி மைசூர் என ஆனது.

மைசூர் நாடு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் வடகர்நாடகம், ஆந்திரா, கேரளம், இன்றைய தமிழகம் ஆகியன சென்னை ராஜதானியாக விளங்கியது. குடகு மலையில் உற்பத்தியாகும் காவிரி ஆற்றை உட்கொண்ட மைசூர் நாட்டை ஆட்சி செய்த அரசர் ஜெயசாம்ராஜ உடையார் கடந்த 1924-ம் ஆண்டு சென்னை ராஜதானியத்தை ஆட்சி செய்த ஆங்கிலேயருடன் ஓர் உடன்படிக்கை செய்து கொண்டார். இதன்படி, காவிரி நீர் பயன்பாடு தொடர்பாக இவ்விரு ஆட்சியாளர்களும் 50 ஆண்டுகால ஒப்பந்தத்தை ஏற்படுத்தியிருந்தனர்.

பின், 1947-ம் ஆண்டு ஆங்கிலேயர் நம் நாட்டை விட்டு வெளியேறினர். மன்னர் ஆட்சி முறை ஒழிக்கப்பட்டு ஒருங்கிணைந்த இந்தியா உருவானது. கடந்த 1956-ம் ஆண்டு, மொழிவாரிய மாநிலமாக மறுசீரமைப்பு செய்யப்பட்ட போது, ஆந்திரம், கர்நாடகம், கேரளம், தமிழகம் தனித்தனி மாநிலமாக உருவானது. குடகு கர்நாடகத்துடன் ஒட்டிக்கொண்டாலும், காவிரி தாய் தமிழக மக்களின் தாகம் தீர்க்க, இன்றும் நம்மோடு ஓடிக்கொண்டிருக்கிறாள்.

காலாவதியான காவிரி ஒப்பந்தம்

கடந்த 1924-ம் ஆண்டு முதல் 1974-ம் ஆண்டு வரையிலான 50 ஆண்டு கால காவிரி நதி நீர் பயன்பாடு ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது. அரசியல் சூழலுக்கு உள்ளானது காவிரி பிரச்சினை. பருவ மழை தலைகாட்டினாலும், வெள்ளப்பெருக்கு எடுக்கும் காலங்களில் மட்டுமே, கர்நாடக அணைகள் நிரம்பி, உபரி நீர் தமிழக மக்களின் வடிகாலாய் காவிரி வந்து சேர்கிறது.

நடந்தாய் வாழி காவிரி...

தற்போது நீர் வரும் காலங்களில் காவிரி-கொள்ளிடத்தின் மணற்பரப்பில் ஊறி, இருகரைகளிலும் உள்ள நிலப்பரப்பில் நிலத்தடி நீர் தேங்க வழியில்லாத காலமாக மாறிவிட்டது. ஆறுகளில் இயந்திரங்களைக் கொண்டு மணலைத் தோண்டி எடுத்து பள்ளத்தாக்கு களாக மாற்றி, சீர்குலைக்கப்பட்டு காவிரி மரணித்து கிடக்கிறது. முப்போக விளைச்சல் மனக்கணக்காய் போட்டு பார்க்கும் விவசாயிகளுக்கு விடை கிடைக்கவில்லை. சம்பாவா, தாளடியா என இரண்டும் கெட்டு, ஒரு போகம் விளைவிக்கவே விவசாயிகள் மூச்சடைத்து இறக்கும் நிலை. உருண்டோடி வந்த காவிரியை, கர்நாடகம் புதுப்புது அணைகளால் கைவிலங்கிட்டு, கட்டிப் போட்டு வைத்துள்ளது. நடந்தேனும் வருவாயா நீ காவிரி என்று தமிழக மக்கள் ஏங்கிக் காத்திருக்கின்றனர்.

மேட்டூர் அணை

பருவ மழை பொய்க்கும் போது, தமிழகத்தில் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. 2, 3 ஆண்டுக்கு ஒரு முறை பருவ மழை தப்பாமல் பெய்யும் போது, காவிரி நீரை அறுவடை செய்து, ஏரி, குளம், குட்டை, நதிகளில் உபரி நீரை ஏன் தேக்கி வைக்கக் கூடாது என்பது விவசாயிகளின் கோரிக்கை. மழை நீரை சேமிக்க அரசு காட்டும் ஆர்வம், ஆறு மாவட்ட மக்களின் தாகத்தை தீர்க்கும் மேட்டூர் அணை - உபரிநீர் மேலாண்மை திட்டத்தை உடனடியாக செயல்படுத்திட வேண்டும் என்பதே ஒரு கோடி மக்களின் ஏக்கமாக உள்ளது.

வீணாகக் கடலில்…

ஒவ்வொரு ஆண்டும் காவிரி நிரம்பி 16 மதகின் வழியாக பல நுாறு டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலந்து வருகிறது. கடந்த 2005ம் ஆண்டு 70.96 டிஎம்சி, 2006ம் ஆண்டு 42.85 டிஎம்சி, 2007ம் ஆண்டு ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் மட்டும் ஏழு முறை மேட்டூர் அணை நிரம்பி 100 டிஎம்சி தண்ணீர் கடலில் வீணாக கலந்துள்ளது. 2008ம் ஆண்டு 78.15 டிஎம்சி, 2009ம் ஆண்டு 65.42 டிஎம்சி வீணாக கடலில் உபரி நீர் கலந்துள்ளது. கடந்த 2013ம் ஆண்டு காவிரியில் வெள்ளம் ஏற்பட்டு 16 மதகுக்கண் வழியாக 100 டிஎம்சி தண்ணீர் கடலில் கலந்துள்ளது.

காவிரியில் வெள்ளப் பெருக்கெடுக்கும் காலங்களில், ஒரு லட்சம் முதல் 2 லட்சம் கன அடி தண்ணீர் சீறி பாய்வதுண்டு. இதுபோன்ற காலக்கட்டங்களில் 100 டிஎம்சி வரை வீணாக கடலில் கலப்பதுண்டு. சில நூறு கோடி ரூபாயில் இந்த புதிய திட்டம் சாத்தியப்படும்.

போராட்டம் தொடக்கம்

காவிரி உபரிநீர் நடவடிக்கைக் குழு சார்பில் காவிரி உபரி நீரை சேலம் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் ஏரி, குளம், நதிகளுடன் இணைக்க வேண்டும் என்று சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு கடந்த வாரம் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். மேட்டூர் அணை நிரம்பி 16 கண் மதகு வழியாக பல டிஎம்சி காவிரி நீர் வீணாகக் கடலில் கலக்கிறது. நீரேற்று திட்டம் மூலம் சேலம் மாவட்டத்தில் இயற்கையாக அமைந்துள்ள கால்வாய் மூலம் ஏரி, குளம், குட்டை, நதிகளில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து, காவிரி உபரி நீர் நடவடிக்கைக் குழு சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

காவிரியில் இருந்து வீணாகும் உபரி நீரை சரபங்கா, திருமணிமுத்தாறு, வசிஷ்ட நதிகளுடன் இணைக்க வேண்டும்.தானாதியூர்-மூலக்காடு நீரேற்று திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும்.மேட்டூர் அணை அருகாமையில் உள்ள கோனூர் பகுதியில் அமைந்துள்ள ஏத்துவாமலைக்கு காவிரி நீர் ஏற்றி, கோனூர், கூணான்டியூர் வழியாக மேச்சேரி ஏரியை இணைக்க வேண்டும். அதன் மூலம் இயற்கையாக அமைந்துள்ள நீர்வழிப் பாதைகளை பயன்படுத்தி தாரமங்கலம், சின்னப்பம்பட்டி வழியாக சரபங்கா ஆற்றுடன் காவிரி நதியின் உபரி நீரை இணைக்க வேண்டும். இதன்மூலம், சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரி, குளம், குட்டை களுக்கு காவிரி உபரி நீர் சென்றடையும். நிலத்தடி நீர் மட்டம் உயர்வதுடன், பல லட்சம் ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.

இதேபோன்று, கடந்த சில தினங் களுக்கு முன்பு மேட்டூர் எம்.எல்.ஏ., பார்த்திபன் தலைமையில், மேட்டூர் அணை முன்பு ஆயிரக்கணக்கான விவசாயிகளை திரட்டி, காவிரி உபரி நீரை, நீரேற்று திட்டம் மூலம் ஏரி, குளம், ஆறுகளுடன் இணைக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். விவசாயிகளும், அரசியல் அமைப்பினரும் மேட்டூர் அணைகாவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த, அரசு ஆய்வு செய்து, திட்டத்தை நிறை வேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுமக்களின் விருப்பமாக உள்ளது.

நீர்ப்பிடிப்பு பட்டா

இது குறித்து சேலமே குரல் கொடு அமைப்பின் நிர்வாகி பியூஸ் மானுஷ் கூறியதாவது:

மேட்டூர் அணை நீரேற்றுத் திட்டத்திற்கு முன்னதாக சேர்வராயன் மலையில் இருந்து கருப்பூர் தாய் ஏரிக்கு வரும் நீர் 30 ஏரிகளை நிரப்பிடும் தன்மை கொண்டது.

ஒரு ஏரியில் இருந்து மற்றொரு ஏரிக்கு தண்ணீர் செல்லும் நீர் வழிப்பாதை ஆக்கிரமிப்பில் உள்ளதால், அவற்றை அகற்றி ஏரிகளுக்கு நீர் செல்ல வழிவகை செய்யவேண்டும். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 21 நாள் ஒரு இடத்தில் தண்ணீர் தேங்குமானால், அது நீர் தேங்கும் பகுதியாக அறிவித்து, அதனை பாதுகாக்க நடவடிக்கை எடுத்தனர்.

ஏரிகள் வறண்டு போகும் சமயத்தில் விவசாயத்துக்காக பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக நீர்ப்பிடிப்பு பட்டா பெற்று விவசாயம் செய்தவர்கள், நிலத்தை மேடு படுத்தி, மனைகளாக பிரித்து விற்றுள்ளனர். எனவே, நீர்ப்பிடிப்பு பட்டா வழங்கியதை மறுசீராய்வு செய்து, இந்த முறையை ஒழித்தாக வேண்டிய காலக்கட்டத்தில்

உள்ளோம். முதல்கட்டமாக நீர்ப்பிடிப்பு பகுதிகளை மேம்படுத்த வேண்டும். மேட்டூர் அணை உபரி நீரை கால்வாய் மூலம் மாவட்ட பகுதிகளுக்குள் கொண்டு வந்து செயற்கை ஏரிகளை உருவாக்கும் திட்டத்தை அரசு கையில் எடுப்பது அவசியம்.

திட்டங்கள் பலவிதம்... ஒவ்வொன்றும் ஒரு விதம்...

* ஒகேனக்கல்லில் இருந்து காவிரி பாயும் வழியில், கிழக்கு கரை குன்றுகளுக்கு இடையே உள்ள ஒரு தாழ்வான பகுதியை அடையாளம் கண்டு, அதன் வழியே கால்வாய் தோண்டி, தொப்பூர் கணவாய் வரை கொண்டு வந்து, தொப்பையாற்றுடன் சேர்க்கலாம்.

* தொப்பையாற்றில் காவிரி சேர்த்த பின், தடுப்பணை- கதவணை அமைக்க வேண்டும். தடுப்பணையில் இருந்து காடையாம்பட்டி, தின்னப்பட்டி, ரெட்டியூர் வழியாக சேலம் கொண்டப்ப நாயக்கன்பட்டி ஏற்காடு அடிவாரம் வரை கால்வாய் தோண்ட வேண்டும். இந்த கால்வாய்லிருந்து, ஏற்காடு மலையின் மேற்கு அடிவாரத்தில் உற்பத்தியாகி, ஓமலூர் வழியாக பாயும் சரபங்கா நதிக்கு இணைப்பை ஏற்படுத்துவதன் மூலம் சேலம் மேற்கு மாவட்டம் முழுவதும் நீராதார தேவை பூர்த்தியாகும்.

* மேட்டூர் அணையின் 16 கண் மதகு வழியாக காவிரியின் கிழக்குப் பிரிவு மூலம் தங்கமாபுரிப்பட்டிணம், அனல்மின் நிலையைம் வழியாக, உபரி நீர் வெளியேற்றும் பாதை உள்ளது. கிழக்கு கரையில் அமைந்துள்ள தங்கமாபுரிபட்டிணத்தில் இருந்து தென்கிழக்கு கிராமசாலையான ஆணைகவுண்டம்பட்டி- கோட்ட கவுண்டம்பட்டி வரையிலான சாலை யின் சமதளப் பகுதியில் கால்வாய் அமைத்து, இடையில் சரபங்கா நதியுடன் இணைப்பை கொடுத்து, கருப்பூர், வெள்ளாளப்பட்டி, செட்டிச்சாவடி வழியாக, சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டி, ஏற்காடு மலையடிவாரம் வரை காவிரி உபரி நீரை கொண்டு வரலாம்.

* கொண்டப்பநாயக்கன்பட்டி - ஏற்காடு மலை அடிவாரத்தில் இருந்து கால்வாயை வேடப்பட்டி, வளையக்காரனூர் வழியே திருமணிமுத்தாறுடன் இணைப்பை ஏற்படுத்தலாம். தேவைக்கேற்ப தடுப்பணை, கதவணை கட்டலாம். இதன் மூலம் சேலம் கிழக்கு, புறநகர் பகுதி, மாநகரம், மேற்கு, தென்மேற்கு பகுதிகளும், நாமக்கல் மாவட்டம் வடக்கு, வடமேற்கு பகுதிகள் முழுவதும் பயன்பெறும். வளையக்காரனூரில் தடுப்பணை மூலம் மணிமுத்தாறு ஓடையாக உற்பத்தியாகும் இடம் வரை, அதைத் திருப்பி நீரேற்ற முடியும். இதன் மூலம் மஞ்சவாடி கணவாய் வரையிலான நிலப்பகுதி செழிப்படையும்.

* வளையக்காரனூர் தடுப்பணை மூலம் கிழக்கு நோக்கி குள்ளம்பட்டி பகுதி வழியாக அக்ரஹார நாட்டாமங்கலம் பெரிய ஏரிக்கு கால்வாய் தோண்ட வேண்டும். இந்த ஏரியை தூர் வாரி மேலும் ஆழப்படுத்தினால், இது பன்முக பயன்பாட்டு நீர்நிலையாக உருவெடுக்கும். இந்த ஏரியில் இருந்து கிழக்கே கூட்டாத்துப்பட்டி, நீர்முள்ளிக்குட்டை வழியாக பேளூர் வரை கால்வாய் அமைத்து, அங்கே குறுக்கிடும் வடவெள்ளாறு (வசிஷ்ட நதி) இணைப்பை ஏற்படுத்தலாம். ஆற்றின் போக்கில் காவிரி உபரி நீர் ஏத்தாப்பூர், ஆத்தூர், தலைவாசல் வழியாக விழுப்புரம் தென்மேற்கு மற்றும் கடலூர் மாவட்ட பகுதிகளை சென்றடையும். அக்ரஹார நாட்டாமங்கலம் ஏரியில் இருந்து முள்ளுக்குறிச்சி வரை கால் வாய் வெட்டி ஊனந்தாங்கல் சிற்றாறு வழியே கொல்லிமலையில் உற்பத்தியாகி, கிழக்கு நோக்கி வரும் பெரியாற்று டன், ஜங்கம சமுத்திரத்தில் இணைக்க வேண்டும்.

இந்த இணைப்பு மூலம் சுவேத நதியில் காவிரி உபரி நீர் பாய்ந்து தம்மம்பட்டி, கெங்கவல்லி, தெடாவூர், வீரகனூர் வழியாக பெரம்பலூர் மாவட்டம் வழியாக விழுப்புரம், கடலூர் மாவட்டங்களை சென்றடையும். இந்த காவிரி உபரி நீர் திட்டத்தால் பெரும் நிலப்பரப்பு வறட்சிப் பிடியில் இருந்து விடுபடும். இத்திட்டம் மூலம் சேலம், தர்மபுரி, நாமக்கல், பெரம்பலூர், விழுப்புரம், கடலூர் ஆகிய 6 மாவட்டங்களில் வாழும் ஒரு கோடிக்கும் அதிகமான மக்களின் குடிநீர் தேவை, விவசாய நிலம் பாசன வசதி பூர்த்தியாகும் என்பதில் ஐயமில்லை.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

மேட்டூர் காவிரி உபரி நீர் திட்டம்காவிரி ஒப்பந்தம்மேட்டூர் அணைவிவசாயம்டெல்டா விவசாயிகள்உபரி நீர் மேலாண்மைகாவிரி

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author