Published : 26 Jul 2017 04:25 PM
Last Updated : 26 Jul 2017 04:25 PM

நீட் தேர்வு விவகாரத்தில் அதிமுக அரசு நாடகம் நடத்துகிறது: ஸ்டாலின் விமர்சனம்

நீட் தேர்வு விவகாரத்தில் அதிமுக அரசு கபட நாடகம் நடத்துகிறது என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக இன்று சென்னை, அண்ணா அறிவாலயத்தில், செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு ஸ்டாலின் பதிலளித்துப் பேசினார்.

நீட் தேர்வுக்கு விலக்களிக்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதல்வரிடம் கோரிக்கை வைத்திருக்கிறாரே?

மத்திய அரசிடம் மாநில அரசு மண்டியிட்டு, காலில் விழுந்து, சரணாகதி அடைந்து கிடக்கிறது. அதனால், ஒரு கபட நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறது.

நீட் தேர்வு எழுதியவர்கள் தமிழக அரசின் முடிவுகளால் குழப்பமான சூழ்நிலையில் இருக்கிறார்களே?

அந்தக் குழப்பத்தை நீக்க வேண்டும், அந்த பிரச்சினையில் இருந்து மாணவர்களை மீட்க வேண்டும், அதற்காக மாநில அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றுதான் மனித சங்கிலிப் போராட்டத்தை நடத்துகிறோம்.

ஏற்கெனவே குடியரசுத் தலைவர் தேர்தல் நடந்தபோது உரிய அழுத்தம் தந்திருக்க வேண்டும். அந்த வாய்ப்பைத் தவறவிட்டு விட்டார்கள். இப்போதும் குடி முழுகிப் போய்விடவில்லை. குடியரசு துணைத் தலைவர் தேர்தல் விரைவில் வருகிறது. இதை பயன்படுத்தியாவது, போதிய அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதை நான் சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே வலியுறுத்திப் பேசியுள்ளேன். இப்போதாவது அதைச் செய்ய வேண்டும். ஆனால், அதைச் செய்யாமல், தொடர்ந்து தங்கள் பதவியை காப்பற்றிக் கொள்ள, பதவியின் மூலம் ஊழல் செய்ய, கமிஷன் பெற வேண்டும் என்ற நிலையில், தங்கள் பணிகளைச் செய்துக் கொண்டிருக்கிறார்கள்.

செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தை மத்திய பல்கலைக்கழகத்திற்கு மாற்ற மத்திய அரசு முயலும் நிலையில், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு முதல்வர் தலைமையில் செம்மொழித் தமிழாய்வு நிறுவனக் கூட்டம் நடைபெறுகிறதே?

முதல்வர்தான் அந்தச் செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் தலைவர். இந்த விவகாரம் குறித்து நான் சட்டமன்றத்தில் கேட்டபோது, 'அப்படியொரு எண்ணம் கிடையாது, அந்த மாதிரி எந்தத் தகவலும் இல்லை' என்று கூறியுள்ளார். என்ன நடக்கிறது என பொறுத்திருந்துப் பார்ப்போம்.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.   

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x