Published : 10 Jul 2017 09:01 AM
Last Updated : 10 Jul 2017 09:01 AM

வேலைவாய்ப்பு அலுவலகம் செல்லத் தேவையில்லை: பிளஸ் 2 தேர்ச்சிபெற்ற கல்வித்தகுதியை அந்தந்த பள்ளியிலேயே பதிவுசெய்யலாம்

தமிழகம் முழுவதும் இன்று முதல் ஜூலை 24 வரை சிறப்பு முகாம்

இந்த ஆண்டு பிளஸ் 2 முடித்த மாணவர்கள் தங்கள் கல்வித்தகுதியை அந்தந்த பள்ளியிலேயே பதிவுசெய்ய தமிழகம் முழுவதும் இன்று (திங்கள்கிழமை) முதல் ஜூலை 24-ம் தேதி வரை சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 மாணவர்கள் தங்கள் கல்வித்தகுதியை தாங்கள் படித்த பள்ளிகளின் மூலமாக வேலைவாய்ப்பு பயிற்சித்துறையின் இணையதளத்தில் (www.tnvelaivaaippu.gov.in) பதிவுசெய்து வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை பெறும் முறை தமிழக அரசால் கடந்த 2011-ம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம், மாணவர்களுக்கு ஏற்படும் போக்குவரத்துச் செலவு, காலவிரயம், தேவையற்ற அலைச் சல்கள் மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களில் ஏற்படும் கூட்ட நெரிசல்கள் ஆகியவை தவிர்க் கப்படுகின்றன.

இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்களின் அசல் மதிப் பெண் சான்றிதழ் வழங்கப்படும் நாளான ஜூலை 10 (இன்று திங்கள் கிழமை) முதல் ஜூலை 24-ம் தேதி வரை 15 நாட்களுக்கு அவர்கள் படித்த பள்ளியிலேயே தங்கள் கல்வித்தகுதியை பதிவு செய்வதற்கு வேலைவாய்ப்பு பயிற்சித்துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறை சார்பில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மதிப்பெண் சான்று வழங்கப்படும்

பள்ளிகளிலேயே இணையதளம் வாயிலாக வேலைவாய்ப்பு அலுவலக பதிவுப்பணி நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரே தேதியிட்டு பதிவு வழங்கப்படும்.

மாணவர்களின் நலன் கருதி தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் வேலைவாய்ப்பு பதிவுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மாணவர்கள் ஏற்கனவே எஸ்எஸ்எல்சி கல்வித்தகுதியை பதிவு செய்திருந்தால் அந்த வேலைவாய்ப்பு பதிவு அடையாள அட்டையுடன் ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, செல்போன் எண், மின்னஞ்சல் முகவரி ஆகிய விவரங்களுடன் மதிப்பெண் சான்று வழங்கப்படும் நாளன்று தாங்கள் பயின்ற பள்ளிகளை அணுக வேண்டும்.

10-ம் வகுப்பு கல்வித்தகுதியை பதிவு செய்தவர்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் தெரியவில்லை என்றால் வேலைவாய்ப்பு அலுவல கத்தை அணுகி பெற்றுக்கொள்ள வேண்டும். பிளஸ் 2 தேர்ச்சி பெற்று புதிதாக பதிவு செய்பவர்கள் வேலைவாய்ப்பு அடையாள அட்டையைத் தவிர்த்து மேற்குறிப்பிட்ட ஏனைய பிற சான்றுகளுடன் தங்கள் பள்ளிக்குச் சென்று கல்வித்தகுதியைப் பதிவுசெய்துகொள்ளலாம். இந்த அரிய வாய்ப்பை அனைத்து மாணவ-மாணவிகளும் தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தனியார் பள்ளி மற்றும் சிபிஎஸ்இ பள்ளியில் படித்த மாணவர்களும் தங்கள் கல்வித் தகுதியை வேலைவாய்ப்புத் துறையின் இணையதளத்தில் தாங்களாகவே பதிவு செய்துகொள்ளலாம். மேலும் தங்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் சென்றும் கல்வித்தகுதியை பதிவு செய்யலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x