Published : 17 Jul 2017 02:32 PM
Last Updated : 17 Jul 2017 02:32 PM

அதிமுக அரசின் சுயநலத்தால் வேலைவாய்ப்பும் பொருளாதார வளர்ச்சியும் இன்றி தமிழகம் தத்தளிக்கிறது: ஸ்டாலின்

தமிழகம் என்ற மதிப்பு மிக்க நாணயம் அதிமுக அரசின் சுயநலத்தால் வேலைவாய்ப்பும் பொருளாதார வளர்ச்சியும் இன்றி தத்தளிக்கிறது என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தின் தொழில் வளர்ச்சி அதிமுக ஆட்சியில் மிகவும் கவலைக்கிடமான நிலைக்கு வந்துவிட்டது. தொழில் வர்த்தக சபைகளும், உலக வங்கி அறிக்கைகளும் தமிழக தொழில் வளர்ச்சியின் வீழ்ச்சியை படம் பிடித்துக் காட்டினாலும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு கவலைப்படுவதாகவே தெரியவில்லை.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு நிதி அயோக் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி, ''தொழில் தொடங்குவதற்கு ஏற்ற சூழல் இல்லாத மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் கடைசி இடத்தில் இருக்கிறது'', என்று மாநில தலைமைச் செயலாளர்கள் கூட்டத்திலேயே வெளிப்படையாக பேசியிருக்கிறார். அதைக் கேட்ட பிறகும் இந்த அரசுக்கு ஞானோதயம் பிறக்கவில்லை.

எதிர்க்கட்சித் தலைவர் என்றமுறையில் நான் சட்டப்பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து, இதுகுறித்து பேசியபோதும் கூட தொழில் துறை அமைச்சர், மின்துறை அமைச்சர் போன்றவர்கள் தமிழக தொழில் வளர்ச்சியின் பரிதாப நிலையை உணரவில்லை. இந்த அரசு தடபுடலாக அறிவித்த 'தொலைநோக்கு திட்டம்-2023'-ஐ தொலைத்து கைவிட்டு விட்டார்கள்.

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 2.42 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்க்கப் போடப்பட்ட 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் நிறைவேற்ற முடியாமல் படுதோல்வி கண்டு விட்டார்கள். இந்நிலையில் இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப் போகிறோம் என்று வேறு அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதுபோன்ற சூழ்நிலையில் 2016-ம் ஆண்டில் இந்திய அளவில் பெறப்பட்ட மொத்த அந்நிய முதலீடுகளில் 2.9 சதவீதம் மட்டுமே தமிழகத்திற்கு கிடைத்துள்ளது என்றும், அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் அதல பாதாளத்திற்கு போய்விட்டது என்றும் செய்திகள் சுட்டிக்காட்டுகின்றன. அதிலும் குறிப்பாக, அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தையும் விட அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் பின்தங்கியிருக்கிறது என்பது மிகுந்த வேதனை அளிப்பதாக இருக்கிறது.

தொழில் செய்வதற்கு ஏற்ற சீர்திருத்தங்களை கொண்டுவரும் மாநிலங்களின் அடிப்படையில் பார்த்தால் கூட நாட்டில் உள்ள மாநிலங்களில் தமிழகம் 18-வது இடத்தில் இருக்கிறது என்று உலக வங்கி அறிக்கையே அரசின் தலையில் ஒரு குட்டு வைத்திருக்கிறது. அதுமட்டுமின்றி தமிழகத்தில் 1.65 சதவீத உற்பத்தி மட்டுமே எட்டப்பட்டுள்ளது என்று மத்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கை வெளிப்படுத்தியிருக்கிறது. இந்திய தொழில் கூட்டமைப்பு, சென்னை தொழில் வர்த்தக சபை என அனைத்துமே தமிழகத்தில் தொழில்துறை வீழ்ச்சியடைந்து வருவதைக் கண்டு கலங்கி நிற்கின்றன. ஆனால் இந்த அரசு எதுபற்றியும் கவலையில்லாமல் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்கிறது.

அரசுக்கு தமிழகத்தின் தொழில் வளர்ச்சி பற்றியோ, அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதிலோ, உற்பத்தியை பெருக்குவதிலோ எவ்வித முனைப்பும் இல்லை. ஊழல் வழக்குகளில் சிறைக்குச் சென்றுவிடாமல் இருக்க, தங்கள் பதவியை காப்பாற்றிக் கொண்டால் போதும் என்ற நோக்கில், தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியை சீரழித்துக் கொண்டு இருக்கிறார்கள். தொழில் தொடங்குவதற்கு ஏற்ற சூழ்நிலைகளைக் கூட ஏற்படுத்திக் கொடுக்க முடியாத வக்கற்ற அரசாக இந்த அரசு இருப்பதோடு மட்டுமின்றி, கமிஷன் கலாச்சாரத்தில் மாநில தொழில் வளர்ச்சியை இன்றைக்கு முற்றிலும் மூழ்கடித்து விட்டது.

தமிழகம் என்ற மதிப்பு மிக்க நாணயம் இன்றைக்கு ஒருபுறம் வேலைவாய்ப்பு இல்லாமலும், இன்னொருபுறம் பொருளாதார வளர்ச்சி இல்லாமலும் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. தொழிற்சாலைகள் தமிழகத்திற்குள் வர விரும்பினால் அந்த முதலீட்டாளர்களை இருகரம் கூப்பி அழைத்து பூந்தமல்லியிலிருந்து ஸ்ரீபெரும்புதூர் வரையிலும், பல்லாவரத்திலிருந்து மறைமலைநகர் வரையிலும், மத்திய கைலாசத்திலிருந்து சோழிங்கநல்லூர் வரையிலும் தொழிற்சாலை மயமாக்கிய அரசு திமுக அரசு.

ஆனால், திமுக ஆட்சியில் தொழில் தொடங்குவதற்கு உருவாக்கப்பட்ட சிறந்த சூழ்நிலையை, கடந்த ஆறு ஆண்டுகளாக சீர்குலைத்து விட்ட இந்த அதிமுக அரசு, ஆட்சியில் நீடிக்கும் தார்மீக உரிமையை இழந்து விட்டது. ஆளத் தெரியாத இந்த அரசு தானாகவே பதவி விலகுவது மட்டுமே தமிழக மக்களுக்கும், தமிழக தொழில் வளர்ச்சிக்கும் விடிவுகாலத்தை ஏற்படுத்தும் நேரமாக இருக்கும்'' என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x