Published : 16 Dec 2013 09:13 PM
Last Updated : 16 Dec 2013 09:13 PM

மதுரை: அரசு மருத்துவமனையில் திறக்கப்படாத அம்மா உணவகம் காத்திருக்கும் நோயாளிகள்

மதுரை அரசு மருத்துவமனையில் ஒரு மாதத்துக்கும் மேலாக அம்மா உணவகத்தை திறக்காமல் வைத்திருக்கின்றனர் அதிகாரிகள்.

மதுரை அரசு மருத்துவமனைக்கு தினமும் 8 ஆயிரத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்காக வருகின்றனர். இவர்களைத் தவிர தினமும் சராசரியாக 2600 பேர் உள்நோயாளியாக சிகிச்சை பெறுகின்றனர். இவர்களுக்குத் துணையாக வருபவர்கள், நலம் விசாரிக்க வருபவர்கள், இறந்தவர்களின் உடலைப் பெற வரும் கூட்டம் எல்லாவற்றையும் சேர்த்தால், தினமும் சுமார் 25 ஆயிரம் பேர் அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.

இவர்களின் வசதிக்காக அம்மா உணவகம் ஒன்றை மருத்துவமனை வளாகத்திலேயே கட்டுவதற்கு மாநகராட்சி சார்பில் இடம் கோரப்பட்டது.

மருத்துவமனை நிர்வாகமும் உடனே அதற்குத் தடையில்லாச் சான்று வழங்கியது. இதைத் தொடர்ந்து, அரசு மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவு எதிரே அருகே அம்மா உணவகம் கட்டப்பட்டது. சமையல் அறை, உணவருந்தும் மேஜை உள்பட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டது. பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து கடந்த நவம்பர் 13-ம் தேதி மேயர் வி.வி.ராஜன்செல்லப்பா மற்றும் அதிகாரிகள் கட்டடத்தை ஆய்வு செய்தனர். அப்போது, “இந்தப் பணிகள் இன்னும் ஓரிரு நாளில் பணி முடிந்துவிடும். நோயாளிகள், குழந்தைகள், முதியவர்களின் வசதிக்காக இங்கு சூடான குடிநீர் வழங்கும் வகையில், சோலார் வாட்டார் ஹீட்டரும் அமைக்கப்படும்” என்றார் மேயர்.

இன்னமும் திறந்தபாடில்லை

அவர் இவ்வாறு அறிவித்து ஒரு மாதத்துக்கு மேலாகிவிட்டது. ஆனால், இன்னமும் அம்மா உணவகம் திறந்தபாடில்லை. அரசு மருத்துவமனை வளாகத்தில் அம்மா உணவகக் கட்டடம் இருப்பதைப் பார்த்து, நோயாளிகள் பலர் காலையிலேயே கூடுவதும், பின்னர் ஏமாற்றத்துடன் கலைந்து செல்வதும் அன்றாட நிகழ்வாகி வருகிறது.

இதுபற்றி மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியது:

மதுரையில் தற்போது 10 இடங்களில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. அங்கெல்லாம் காலையில் 300 பேருக்கும், மதியம் 300 பேருக்கும் வழங்குகிற அளவுக்கு உணவு சமைக்கப்படுகிறது. ஆனால், மதுரை அரசு மருத்துவமனையில் இந்த எண்ணிக்கை போதாது என்பதால், ஒரு நேரத்துக்கு குறைந்தது ஆயிரம் பேருக்கு உணவு சமைக்க வேண்டும் என்று மருத்துவமனை நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது. அதையும் பரிசீலித்து விரைவில் அங்கு உணவகம் திறக்கப்படும்” என்றனர்.

மருத்துவமனை டீன் மருத்துவர் மோகனிடம் கேட்டபோது, “எல்லாம் தயாராக இருக்கிறது. காணொளிக் காட்சி மூலம் முதல்வர் திறந்து வைக்க உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். நாங்களும் அதைத்தான் எதிர்பார்க்கிறோம்” என்றார். முதல்வர் திறப்பதாக இருந்தால், பத்து பதினைந்து உணவகங்களைச் சேர்த்துத்தான் திறந்து வைப்பார்.

இவர்கள் நல்ல பெயர் வாங்குவதற்காக நாங்கள் காத்துக் கொண்டிருக்க வேண்டுமா? இந்த உணவகத்தின் நோக்கம் ஏழைகளைப் பசியாற்றுவதுதான் என்றால், முதல்வரின் அனுமதியைப் பெற்று மாநகராட்சி அதிகாரிகளே திறந்து வைத்துவிட வேண்டியது தானே?” என்பது பொதுமக்களின் ஆதங்கம். என்ன செய்யக் காத்திருக்கிறது மாநகராட்சி?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x