Published : 06 Feb 2014 08:20 PM
Last Updated : 06 Feb 2014 08:20 PM

மதுரை: பெண்களை புலம்பவிட்ட கேபிள் ஆபரேட்டர்கள்: 24 மணி நேர வேலைநிறுத்தத்தால் ஒளிபரப்பு நிறுத்தம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை கேபிள் டிவி ஆபரேட்டர்கள் 24 மணி நேர வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் டி.வி. சீரியல்களைப் பார்க்க முடியாமல் பெண்கள் புலம்பினர்.

கேபிள் தொழிலில் தனியாரின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக தமிழகத்தில் அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் ஏற்படுத்தப் பட்டது. இதன்மூலம் அந்தந்த மாவட்டங்களிலுள்ள கேபிள் டி.வி. ஆபரேட்டர்களை ஒருங்கிணைத்து, அவர்கள் மூலம் டி.வி. சேனல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு இணைப்புக்கும் மாதாந்திரக் கட்டணமாக ரூ.70 மட்டுமே வசூலிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆனால், சில ஆபரேட்டர்கள் அதைவிடக் கூடுதலாக வசூலிப்பதாக அரசுக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து, இம்மாதம் முதல் கேபிள் சந்ததாரர்களிடம் பெறப்படும் ரூ.70-க்கு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தால் அச்சிட்டு வழங்கப்படும் ரசீதை மட்டுமே கொடுக்க வேண்டும் என கேபிள் டி.வி. ஆபரேட்டர்களுக்கு அரசு உத்தரவிட்டது.

மேலும் ஆபரேட்டர்கள் ஆன்லைன் வழியாகவே பணத்தை செலுத்த வேண்டும், தாமதமாகச் செலுத்தப்படும் மாதாந்திரத் தொகைக்கு வட்டியும் செலுத்த வேண்டும் என்பன போன்ற கட்டுப்பாடுகளுக்கு கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இதை வெளிப்படுத்தும் வகையில் மதுரை மாவட்ட கேபிள் டி.வி.ஆபரேட்டர்கள் புதன்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மதுரை மாநகரம் மட்டுமின்றி மேலூர், திருமங்கலம், செக்கானூரணி, சோழவந்தான் உள்ளிட்ட பகுதிகளில் கேபிள் டிவி இணைப்புகள் மூலம் எந்த சேனலும் ஒளிபரப்புச் செய்யப்படவில்லை.

இதனால் டிவியில் நாள் தவறாமல் சீரியல் களைப் பார்த்து பழக்கப்பட்ட பெண்கள் புதன்கிழமை செய்வதறியாது திகைத்தனர். கேபிள் டி.வி. ஆபரேட்டர்களின் வேலைநிறுத்தம் குறித்த விவரம் தெரியாததால் அக்கம் பக்கத்தினரைத் தொடர்பு கொண்டு, ‘உங்கள் வீட்டில் சேனல்கள் தெரிகின்றனவா’ என அரை மணி நேரத்துக்கு ஒருமுறை விசாரித்து புலம்பினர். புதன்கிழமை காலை 6 மணிக்குத் தொடங்கிய இந்த வேலைநிறுத்தம் வியாழக்கிழமை காலை 6 மணிக்கு முடிவடைந்தது. அதேசமயம் மதுரையில் வடக்குமாசி வீதி, கூடல்நகர், விளாங்குடி பகுதியில் பல வீடுகளில் வழக்கம்போல் டிவி சேனல்களைப் பார்க்க முடிந்தது.

இதுபற்றி மதுரை மாவட்ட கேபிள் ஆபரேட்டர்கள் கில்டு மாவட்டத் தலைவர் ஏ.பாண்டி கூறியது:

மாதாந்திர நிலுவைத்தொகைக்கு வட்டி விதிப்பதை நிறுத்த வேண்டும். சேனல் ஒளிபரப்புகளை தரமாக அளிக்க வேண்டும். மக்கள் விரும்பும் சேனல்களைத் தர வேண்டும். ஆன்லைன் மூலம் பணம் செலுத்துவதற்குப் பதில், பழைய முறைப்படி வங்கியிலேயே செலுத்த அனுமதிக்க வேண்டும்.

அரசு கேபிள் நிறுவனத்தின் பில் கொடுக்குமாறு கட்டாயப் படுத்தக்கூடாது. அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வுக்கேற்ப கேபிள் டி.வி. சந்தா கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தி 24 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். மதுரை மாநகரில் 450 பேர், மாவட்டத்தில் 1400 பேர் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இதனால் பொதுமக்களுக்கு ஏற்பட்ட தடங்கல்களுக்காக வருந்துகிறோம். எங்களின் கோரிக்கையை அரசு ஏற்க வேண்டும்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x