Published : 10 Jan 2014 07:40 PM
Last Updated : 10 Jan 2014 07:40 PM

கன்டெய்னரில் கேரளாவுக்கு கடத்தப்படும் அடிமாடுகள்!

தமிழகத்திலிருந்து, அடிமாடுகள் கேரளாவிற்கு லாரிகளில் கடத்தப்படுவதும் கேரள- தமிழக எல்லைகளில் பிடிபடுவதும் வழக்கமான ஒன்று. அதிகாரிகளிடம் இருந்து தப்பிக்க, அடிமாடுகள் கன்டெய்னர்களில் கடத்தப்படுவது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கிணத்துக்கடவு காவல்நிலைய எல்லைக்கு உட்பட்டது வீரப்பகவுண்டன்புதூர். இங்கே தமிழக-கேரள எல்லை சோதனைச்சாவடி துவங்குகிறது. சில நாட்களுக்கு முன்பு, தமிழகத்திலிருந்து வரும் கால்நடைகளை, மருத்துவப் பரிசோதனை நடத்தாமல் கேரளத்திற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. எனவே, இந்த எல்லையிலேயே கால்நடைகளை ஏற்றி வந்த வாகனங்கள் நிறுத்தப்பட்டன.

கூண்டு கட்டப்பட்ட ஸ்வராஜ் மஸ்தா உள்ளிட்ட வாகனங்களில் மேற்கூடு கட்டப்பட்ட நிலையில், மணிக்கணக்கில் நின்ற வாகனங்களில் இருந்தவை அத்தனையும் அடிமாடுகள். ஒவ்வொரு வாகனத்திலும் 20 வரையிலான எருமைகள், சில நாட்களுக்கு முன்பு பிறந்த கன்றுக்குட்டிகளும் இருந்தன. அவை வண்டியில் அடைபட்ட சூடு தாங்காததால், கீழே இறக்கப்பட்டு சுற்றுப்பகுதிகளில் கட்டப்பட்டன.

இதையடுத்து மேல் கால்நடை மருத்துவர்கள் வந்து பரிசோதனை செய்துவிட்டு, இக் கால்நடைகளை கேரளத்திற்குள் அனுமதிக்க முடியாது என்று தெரிவித்தனர். எனவே அவற்றை தமிழ்நாட்டிற்குள்ளேயே திருப்பியனுப்பினர் கேரள அதிகாரிகள்.

சில வாகனங்கள் மட்டும் திரும்ப, மற்றவை கேரளத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டன. இப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், லாரிகளில்தான் வெளியே தெரியும்படி மாடுகளை ஏற்றிக்கொண்டு செல்வார்கள். அதை அதிகாரிகள் பிடித்து, அபராதம் விதிப்பார்கள். இப்போது வெளியே தெரியாதவாறு, கன்டெய்னர்களில் அடிமாடுகளைக் கொண்டு செல்கின்றனர். செக்போஸ்ட்டில் மணிக்கணக்கில் கன்டெய்னர்கள் நிறுத்தப்பட்டதால்தான், அடிமாடுகள் விவகாரம் வெளியே தெரிந்தது என்றனர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x