Published : 21 Sep 2013 03:21 PM
Last Updated : 21 Sep 2013 03:21 PM

காஞ்சிபுரத்தில் பிடிபட்ட 4 நகைத் திருடர்கள்; அதில் ஒருவர் ஆசிரியர்

காஞ்சிபுரத்தில் பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய 4 பேரை காஞ்சிபுரம் போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 115 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

காஞ்சிபுரம் மாவட்ட காவல் காண்காணிப்பாளர் செ.விஜயகுமார் வெள்ளிக்கிழமை செய்தி யாளர்களிடம் கூறியது: “காஞ்சிபுரம் மாவட்டத்தில் போலீஸார் இரவு நேரங்களில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது போலியான எண் கொண்ட மோட்டார் சைக்கிள்களில் வந்த பேர்ணாம்பட்டைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் மதன்மாறன் (34), காஞ்சிபுரம் ஜே.ஜே.நகரைச் சேர்ந்த சிவா (25), ஜவஹர்லால் தெருவைச் சேர்ந்த அப்துல் ஹமீம் (25), பொன்னேரிக்கரையைச் சேர்ந்த குமார் (21) ஆகியோரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் மதன்மாறன், நகை பறிப்பில் ஈடுபட்டு வருபவர் என்பது தெரியவந்தது. அவர் மீது காஞ்சிபுரத்தில் மட்டும் 10 வழக்குகளும், வேலூர் உள்ளிட்ட இடங்களில் 8 நகைப் பறிப்பு வழக்குகளும் உள்ளன. மற்ற மூவர், தனித்தனியே வீடுகளின் பூட்டை உடைத்து, நகைகளை திருடுபவர்கள் என்பது தெரியவந்தது.

இவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி, ரூ.27 லட்சம் மதிப்புள்ள 115 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டன” என்றார்.

மதன்மாறன் யார்?

மதன் மாறன், இடைநிலை ஆசிரியராக கடந்த 2004ம் ஆண்டு சேர்ந்துள்ளார். அரசு ஊதியத்தைக் கொண்டு, தான் விரும்பிய ஆடம்பர வாழ்க்கையை வாழமுடியாத மதன்மாறன் ஒசூர் பகுதியில் நகை பறிப்பில் ஈடுபட தொடங்கினார். முதல்முறையாக குடியாத்தத்தில் கைது செய்யப்பட்டு 6 மாதங்கள் சிறை தண்டனை அனுபவித்தார். அப்போது அவர் ஆசிரியர் பணியில் இருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். பின்னர் மீண்டும் ஓசூர் பகுதியில் தனது நகை பறிப்பைத் தொடர்ந்தார். அங்கு கடந்த 2012-ம் ஆண்டு ஓசூர் போலீஸாரால் கைது செய்யப்பட்டு மீண்டும் 4 மாதங்கள் சிறை தண்டனை அனுபவித்தார். தொடர்ந்து, தனது மனைவியுடன் வேலூர் சத்துவாச்சாரியில் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கியிருந்தார். ஆசிரியையான அவரது மனைவியைக் காலையில் பள்ளி செல்ல பேருந்தில் ஏற்றிவிட்டுவிட்டு, காஞ்சிபுரத்திற்கு வந்து பட்டப் பகலில்,பெண்களின் கழுத்தில் இருக்கும் தங்க நகைகளை, மோட்டார் சைக்கிளில், ஹெல்மெட் அணிந்து வந்து பறித்துச் செல்வார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x