Last Updated : 16 Sep, 2013 06:10 PM

 

Published : 16 Sep 2013 06:10 PM
Last Updated : 16 Sep 2013 06:10 PM

மண்வளம் காக்கும் மகத்தான திட்டங்கள்

கிராமங்களில்தான் இந்தியா வாழ்கிறது என்றார் மகாத்மா. இன்றைய கிராமங்களின் மேன்மை விவசாயத்தைத்தான் சார்ந்துள்ளது.

வேளாண்மை சிறக்க தமிழக அரசு பல நலத் திட்டங்களை மேற்கொண்டுவருவது விவசாயிகளின் மீதான தமிழக அரசின் அக்கறையைத்தான் காட்டுகிறது.

'தமிழ்நாட்டின் அனைத்து கிராமங்களிலும் மண்வளம் காக்க – சீரான திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படும்' என்கிற தமிழக அரசின் அறிவிப்பு, விவசாயிகளின் வாழ்வு சிறக்கத் தொடங்கப்பட்ட உன்னத வழிமுறையாகும். ‘ரசாயன உரங்களைத் தேவைக்கு அதிகமாகவோ அல்லது தேவைக்குக் குறைவாகவோ இடாததினால் மண் வளமும் கெடும், மகசூலும் குறையும்’ என்பதை உணர்ந்த தமிழக அரசு, மகசூல் இழப்பைத் தடுக்க ரூபாய் 6 கோடி நிதி மதிப்பீட்டில் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மண் பரிசோதனையை மேற்கொள்ளும் திட்டம் மண்ணைக் காக்கும் பொன் திட்டமாகும்.

பொதுவாக கரும்பு அறுவடைக்குப் பின் விவசாயிகள் கரும்பு சோகையினை வயலிலேயே போட்டு எரிப்பது வழக்கம். இதனால் மண்வளம் கெடுவதுடன் சுற்றுச் சூழலும் கெடுவது உறுதி. இதைனைத் தடுக்கவும் சுற்றுச் சூழலைக் காக்கவும் கரும்புச் சோகையினைத் தூளாக்கி நிலப்போர்வை அமைக்க தமிழக அரசு, ஏக்கருக்கு 800 ரூபாய் வீதம் 12,500 ஏக்கர் அளவுள்ள நிலப் பகுதிகளுக்கு பின்னேற்பு மானியமாக வழங்கும் திட்டம் மண்ணை மட்டுமல்ல; கரும்பு விவசாயிகளின் வாழ்வாதாரத்தையே போற்றிக் காக்கும் வெற்றித் திட்டமாகும்.

தமிழகத்தின் ஊட்டச்சத்துப் பாதுக்காப்புக்கு வழிவகுக்கும் வகையில் உடல் நலம் காக்கும் சிறுதானியம் மற்றும் புரதச் சத்துக்கள் அதிகம் உள்ள பயறு வகைப் பயிர்களின் ஊக்குவிக்கும் வகையில் ரூபாய் 5.25 கோடியில் பயறு, சிறுதானியப் பொருட்களைச் சுத்திகரிக்கும் இயந்திரங்களை விவசாயக் குழுக்களுக்கு வழங்கும் திட்டம் மக்கள் நலம் கருதும் தமிழக அரசின் விசாலமான பார்வையைத்தான் காட்டுகிறது. அதுமட்டுமின்றி, சிறுதானிய மற்றும் பயறு வகைகளின் மதிப்பைக் கூட்டி, கூட்டுறவுத்துறை மூலம் நல்ல விலைக்குக் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்போகும் தமிழக அரசின் செயல் வரவேற்க வேண்டிய திட்டமாகும்.

சிறுதானியங்களின் மீது மக்கள் மத்தியில் மீள்பார்வை வந்துகொண்டிருக்கும் காலம் இது. இதனை மனதில்கொண்ட தமிழக அரசு, திருவண்ணாமலை மாவட்டம் அந்தியேந்தல் அரசு விதைப் பண்ணையில் ரூபாய் 1 கோடி மதிப்பீட்டில் சிறுதானியங்களில் உயர் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக சிறுதானிய மகத்துவ மையம் என்கிற பெயரில் ஓர் அமைப்பை தொடங்கும் முயற்சி, எதிர்கால தலைமுறைக்கும் சிறுதானியங்களுக்கான வாசலைத் திறக்கும்.

தரமான விதைகளும், நடவுக் கன்றுகளும் இருந்தால்தான் தரமான விவசாயப் பொருட்களை விளைவித்து விவசாயிகள் நிலையான வருமானம் பெற முடியும் என்பதைக் கவனித்தில்கொண்ட தமிழக அரசு, ரூபாய் 15 கோடி மதிப்பீட்டில் தோட்டக்கலை பண்ணைகளிலேயே தரமான நடவுக்கன்றுகளும் விதைகளும் உற்பத்தி செய்ய முன்வந்தது மண்ணையும் மக்களையும் வாழ வைக்கும் நல்ல முயற்சி.

தங்கள் வீடுகளிலேயே தங்களுக்கான காய்கறிகளை விளைவித்துக் கொள்பவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் சென்னை மற்றும் கோவை மாநகரங்களில் புத்தம் புதிய, நச்சுத் தன்மையற்ற, சத்தான காய்கறிகளை அவரவர் வீட்டு மாடியிலேயே உற்பத்தி செய்ய தமிழக அரசு உறுதுணையாக இருக்கிறது. இதனை மக்கள்தான் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

விரைவில் அழுகும் தன்மைகொண்ட தோட்டக்கலை விளைபொருட்களை நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் பாதுகாக்கவும், அந்தப் பொருட்களுக்கு விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கவும் வழி செய்யும் வகையில் ரூபாய் 2.20 கோடி செலவில் உணவு பதப்படுத்தும் தொழில் முனைப்பு மையங்களை நிறுவ தமிழக அரசு முன்வந்துள்ளது. விவசாயிகளின் மீது அக்கறை கொண்டு இந்த மையங்களை ஸ்ரீரங்கம் மற்றும் பொள்ளாச்சியில் நிறுவ உள்ளனர். உணவு பதப்படுத்தும் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் வகையில் விவசாயிகளுக்கும் தொழில்முனைவோர்களுக்கும் இதற்கான செயல்முறை பயிற்சி அளிக்கவும் தமிழக அரசு முன்வந்துள்ளது.

வெங்காயம் அதிகமாக விளையும் 12 மாவட்டங்களில் தமிழக அரசு ரூபாய் 6 கோடியில் 2 முதல் 12 மெட்ரிக் டன் வரை கொள்ளளவுகொண்ட விஞ்ஞான சேமிப்பு அமைப்புகளை உருவாக்குவது வெங்காயப் பயிர்களை விளைவிக்கும் விவசாயிகளின் வயிற்றில் பால்வார்க்கும் திட்டமாகும். வெங்காயம் அதிகம் விளையும்போது விவசாயிகளுக்கு உரிய விலை கிடைப்பது இல்லை. இதனால் ஏற்படும் நஷ்டதையும் அவர்களால் தடுக்க முடியவில்லை. எனவே, விஞ்ஞான முறைப்படி தரம் குறையாமல், இழப்பு ஏதுமின்றி சேமிக்க இந்த அமைப்பு விவசாயிகளுக்கு உதவி செய்யும்.

சிறு, குறு விவசாயிகள் தங்கள் விளைப்பொருட்களைக் கொண்டுசெல்லும் ஊரகச் சந்தையினை மேம்படுத்தும் வகையில், ஊரகச் சந்தையின் உள்கட்டமைப்பு பணிகளுக்காக ரூபாய் 10.20 கோடியினை ஒதுக்கியிருப்பது, தரம் பிரித்தல். சுத்திகரித்தல் மற்றும் சந்தைப்படுத்துதல் போன்ற விவரங்களில் விவசாயிகள் தெளிவு பெறவும் தங்கள் பொருட்களுக்குக் கூடுதல் விலைபெறவும் வழிவகை செய்யும்.

வேளாண்மை விரிவாக்கப் பணிகளில் விரைவான செயல்பாடுகளைப் புகுத்தும் வகையில் வேளான் விரிவாக்கப் பணியாளர்களுக்கு அதிநவீன தொழில்நுட்பத்தை அறிமுகச் செய்துள்ளது தமிழக அரசு. ரூபாய் 10.50 கோடி செலவில் வேளாண் விரிவாக்கப் பணியாளர்களுக்கு தொடுதிரை சிறுகணினியும், ‘அனைத்துத் தொழில்நுட்பங்களையும் அறிக’ என்கிற கணினி மென்பொருளையும் வழங்கி விவசாயத் துறையில் விரிவானப் பணிகளை தமிழக அரசு முடுக்கிவிட முனைந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x