Published : 07 Mar 2014 06:58 PM
Last Updated : 07 Mar 2014 06:58 PM

பெண்களைப் பாதுகாக்க மதுவை எதிர்க்கிறோம்: வைகோ

பெண்கள் மீதான பாலியல் கொடுமைகளுக்கு மதுதான் மூல காரணமாகும் என்பதால், மதுவை எதிர்த்து அறப்போர் நடத்துவதாக, மதிமுக பொதுச் செயலர் வைகோ கூறியுள்ளார்.

மகளிர் தினத்தையொட்டி அவர் இன்று வெளியிட்ட செய்தி:

"பெற்ற தாயை உற்ற தெய்வமாக போற்றி வணங்கும் பண்பாடு பன்னெடுங்காலமாக தமிழர்கள் கடைப்பிடிக்கும் நெறியாகும். உலகெங்கும் பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை நீக்கி, அவர்கள் அனைத்துத் துறைகளிலும் தனி வாழ்விலும், பொதுவாழ்விலும் உரிமையும் பாதுகாப்பும் உள்ளவர்களாக வாழ்வதற்கு எண்ணற்ற கிளர்ச்சிகளைப் பெண்களே முன்நின்று நடத்தினர்; உரிமைகளும் பெற்றனர்.

அண்மைக் காலமாக இந்தியாவில் பல பகுதிகளிலும், தமிழ்நாட்டிலும் பெண்கள் பாலியல் வன்முறைக்கும் தாக்குதலுக்கும் ஆளாகி பெரும் துன்பத்திலும், அவலத்திலும், கண்ணீரிலும் தவிப்பதுதான் இன்றைய நிலை ஆகும்.

தமிழ்நாட்டில் வீடுகளில் இருக்கும் பெண்களின் உயிருக்கும் பாதுகாப்பற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் பெண்கள் பாலியல் கொடுமைக்குப் பலியாகிறார்கள். சின்னஞ் சிறுமிகளைக்கூட சமுதாயக் கழுகுகளான கயவர்கள் பாலியல் இச்சைக்கு ஆளாக்குகிறார்கள் என்பது நினைத்துப்பார்க்கவே இயலாத கொடுமையாகும்.

மிருகங்களைவிட மோசமான அக்கிரம இழிசெயல்களில் இவர்கள் ஈடுபடுவதற்கு மதுதான் மூல காரணமாகும் என்பது ஒவ்வொரு சம்பவத்திலும் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனால்தான் மதுவை எதிர்த்து அறப்போர் நடத்துகிறோம்.

கண்ணியத்தோடும், உரிமையோடும், பாதுகாப்போடும் பெண்கள் வாழ்வதற்கு உத்தரவாதம் அளிக்கும் நிலமையை ஏற்படுத்த உலக மகளிர் நாளில் உறுதி ஏற்போம்!" என்று வைகோ கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x