Published : 12 Aug 2016 08:12 AM
Last Updated : 12 Aug 2016 08:12 AM

பட்டப்பகலில் துணிகரம்: பெண் நீதிபதி வீட்டில் 200 பவுன் கொள்ளை

பெண் நீதிபதி வீட்டின் பூட்டை பட்டப்பகலில் உடைத்து வீட்டுக்குள் புகுந்த கும்பல் நகை, பணத்தை திருடிச் சென்ற சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 200 பவுன் திருட்டு போயிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிட்டி சிவில் 1-வது நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தவர் ஜா சுப்பிரமணியம். சில காரணங்களுக்காக இவர் தற்போது பணி இடைநீக்கம் செய்யப் பட்டுள்ளார். சைதாப்பேட்டை நீதிமன்றம் அருகே உள்ள நீதிபதிகள் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று மதியம் அதே பகுதியில் உள்ள கடைக்கு தனது காரில் குடும்பத்துடன் சென்றார்.

சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு திரும்பி வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர், வீட்டுக்குள் சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த பீரோக்கள் அனைத்தும் திறந்து கிடந்தன. அதற்குள் இருந்த துணி வகைகள் சிதறிக் கிடந்தன. பீரோ லாக்கரில் ரகசிய அறையில் வைக்கப்பட்டு இருந்த தங்கக் காசுகள், நகைகள் அனைத்தும் திருட்டு போனது தெரியவந்தது. இதையடுத்து, அவர் உடனடியாக கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

உடனடியாக கைரேகை நிபுணர்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்தனர். வீட்டில் பதிவாகி இருந்த ரேகைகளை சேகரித்தனர். அந்த ரேகைகள், கொள்ளையர்களின் பட்டியலில் உள்ளவர்களின் ரேகை யுடன் பொருந்துகிறதா என்று விசாரிக்கப்பட்டு வரு கிறது.

இதுகுறித்து விசாரணை நடத்தும் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, “முதலில் 400 பவுன் நகை வரை திருட்டு போனதாக எங்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர், 200 பவுன் என்று தெரிவிக்கப்பட்டது.

எங்களது விசாரணைப்படி 40-ல் இருந்து 50 பவுன் மட்டுமே திருட்டு போயிருக்க வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் பீரோவில் பாதி நகைகள் அப்படியே உள்ளன. பெண் நீதிபதி தரப்பில் எத்தனை பவுன் நகை திருட்டு போனது என்று கூறவில்லை. சைதாப்பேட்டை நீதிபதிகள் குடியிருப்புக்கு 3 வழியாக செல்லலாம். அங்கு எப்போதும் பாதுகாப்புக்காக போலீஸார் நிறுத்தப்பட்டிருப்பார்கள்.

வெளியாட்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட வாய்ப்பு இல்லை. தெரிந்தவர்கள் அல்லது அடிக்கடி நீதிபதிகள் குடியிருப்புக்குள் சென்று வருபவர்களின் கைவரிசையாக இருக்க வாய்ப்பு உள்ளது. திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை நடத்தி, கைது செய்ய தனிப்படை அமைத்துளோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x