Published : 01 Sep 2016 08:38 AM
Last Updated : 01 Sep 2016 08:38 AM

11 தொழிற்சங்கங்கள் சார்பில் நாளை பொது வேலைநிறுத்தம், மறியல்: அரசு பேருந்துகள், ஆட்டோக்கள் ஓடுமா?

12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 11 தொழிற்சங்கங்கள் சார்பில் நாளை பொது வேலைநிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் நடக்க வுள்ளது. எனவே, அரசு பேருந்து, ஆட்டோக்கள் உள்ளிட்ட சேவை கள் பாதிக்குமா? என கேள்வி எழுந்துள்ளது.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும், தொழிலாளர் சட்டங்களை முழு முனைப்புடன் அமலாக்க வேண்டும், ரயில்வே, பாதுகாப்பு போன்ற முக்கியமான பொதுத் துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கக் கூடாது, குறைந்தபட்ச ஊதியமாக மாதம் ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 2-ம் தேதி (நாளை) பொது வேலைநிறுத்தம் மற்றும் மறியலில் தொமுச, சிஐடியு, ஐஎன்டியுசி, ஏஐடியுசி உட்பட 11 தொழிற்சங்கங்கள் ஈடுபடவுள்ளன. இதனால், அரசு பேருந்துகள் வழக்கம்போல் ஒடுமா? என கேள்வி எழுந்துள்ளது.

தமிழக அரசு ஏற்பாடு

இது தொடர்பாக போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அரசு பேருந்துகள் இயக்கப் படும். இதற்கான முழு ஏற்பாடுகளையும் தமிழக அரசு செய்துள்ளது’’ என்றார்.

இது தொடர்பாக தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர்கள் சம்மேளனம் (ஏஐடியுசி) மாநில பொது செயலாளர் சேஷசயனம் கூறும்போது, ‘‘ஆட்டோ தொழிலை பெரிதும் பாதிக்கும் சாலை பாதுகாப்பு சட்டத்திருத்த மசோதாவை உடனடியாக கைவிட வேண்டுமென வலியுறுத்தி நாங்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொள்கிறோம். தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டங்களையும் நடத்த வுள்ளோம். இதற்கு, பெரும்பாலான ஆட்டோ தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளதால், 90 சதவீத ஆட்டோக்கள் ஓடாது’’என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x