Published : 30 Aug 2016 12:43 PM
Last Updated : 30 Aug 2016 12:43 PM

சிவகாசிப் பட்டாசுக்கு ஏற்றுமதி வாய்ப்பை உருவாக்க வேண்டும்: கருணாநிதி வலியுறுத்தல்

மத்திய அரசு, சிவகாசி பட்டாசுகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான அனுமதியை வழங்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், ''விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் தயாராகும் பட்டாசுகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்திட மத்திய அரசு உதவி செய்யுமா என்பது கேள்விக் குறியாக உள்ளது. அந்த மாவட்டத்தில் பட்டாசு தயாரிக்கும் தொழிலில் சுமார் ஒன்றரை லட்சம் பேர் நேரடியாகப் பணியாற்றி வருகிறார்கள்; அதையொட்டிய துணைத் தொழில்களில் சுமார் ஒன்றரை லட்சம் பேர் ஈடுபட்டுள்ளார்கள். ஆக, மூன்று லட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மையமாகக் கொண்டுள்ளது பட்டாசுத் தொழில்.

இந்தத் தொழில் சிறப்பாக இந்த மாவட்டத்தில் பல ஆண்டுகாலமாக நடைபெற்று வரும் நிலையில், பொருளாதார தாராளமயமாக்கலுக்குப் பின்னர், சீனப் பட்டாசுகள் இந்தியச் சந்தையில் சட்ட விரோதமாக நுழைந்து விட்டன. இந்தியா இறக்குமதிக்குத் தடை விதித்திருக்கும் பொருள்களில் பட்டாசும் இடம் பெற்றுள்ளது. ஆனாலும், விளையாட்டுப் பொருள்கள் என்ற பெயரில் சட்ட விரோதமாக சீனப் பட்டாசுகள் இந்தியாவுக்குள் நுழைவதால், இந்த சீனப் பட்டாசுகள், நமது சிவகாசி பட்டாசு தொழிலுக்குப் பெரும் இடைஞ்சலாக உள்ளது; பட்டாசுத் தொழிலைச் சார்ந்திருக்கும் லட்சக் கணக்கான குடும்பங்கள் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றன.

சிவகாசியில் தயார் செய்யப்படும் பட்டாசுகளை ஏற்றுமதி செய்தால்தான் அந்தப் பணியிலே ஈடுபட்டுள்ள இலட்சக் கணக்கானவர்களுக்கு தொடர்ந்து தொழில் புரியவும், தொழிலை வளர்க்கவும் வாய்ப்பு ஏற்படும்.

சிவகாசி பட்டாசுகளை வாங்குவதற்கு பல வெளிநாட்டினர் ஆர்வத்தோடு இருப்பதால், சிவகாசி பட்டாசுகளை ஏற்றுமதி செய்வதற்கு நல்ல வாய்ப்பு உள்ளது. கப்பல் பிரச்சினை காரணமாக சிவகாசி பட்டாசுகளை ஏற்றுமதி செய்வதில் சிரமம் உள்ளது. மத்திய அரசின் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையும் தொழில் வர்த்தகத் துறையும் பட்டாசு ஏற்றுமதிக்கு ஒத்துழைப்பு நல்கத் தயாராக உள்ளனர்.

இதனை மனதிலே கொண்டு மத்திய அரசு, சிவகாசி பட்டாசுகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான அனுமதியினை வழங்கி அந்த மாவட்டத்தில் பட்டாசு தொழிலிலே ஈடுபட்டுள்ளவர்களுக்கு உதவிடவும்; மாநில அரசு இதனைத் தனி நேர்வாக மத்திய அரசிடம் எடுத்துச் சென்று பரிந்துரைத்திடவும் வேண்டும்'' என்று கருணாநிதி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x